Sunday, October 14, 2012

இலங்கை தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு இந்திய அரசு உறுதியளிப்பு! கூட்டமைப்பு நாடு திரும்பியது!

tna111(1)தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம் வெற்றியளித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இலங்கை தமிழர்கள் சமத்துவம் மற்றும் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு இந்திய அரசு பெருமுயற்சி எடுக்குமென்று உறுதியளித்ததாகவும் நாடு திரும்பியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
இந்திய வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், விநாயகமூர்த்தி, பொன் செல்வராஜா மற்றும் சுமந்திரன் ஆகியோர் இந்தியாவிற்கான நான்குநாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டனர்.

கடந்த 10ம் திகதி சென்ற இக்குழு இன்று நாடு திரும்பியுள்ளது.
இவ்விஜயத்தின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினர், இந்திய பிரதமர் மன்மோகன் சிங், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, எதிர்க்கட்சி தலைவி சுஸ்மா சுவராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரஞ்சன் மாத்தாய், இணைச் செயலாளர் ஸ்ரீங்கலா மற்றும் முக்கியஸ்தர்களை சந்திந்து கலந்துரையாடினர்.
பிரதமர் மன்மோகன் சிங்கை இக்குழுவினர் சந்தித்தபோது, தமிழ் மக்களின் மீள் வாழ்விற்கும், வாழ்வை புதுப்பிப்பதற்கும் இந்திய அரசாங்கம் வழங்கி வருகின்ற உதவிகளுக்கு இலங்கை தமிழ் மக்களின் சார்பில் நன்றிகளை தெரிவிப்பதாக கூறினர்.
இத்துடன், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முறைப்படி அமுல்படுத்துவதனூடாக இலங்கை மக்களுக்கிடையில் சமரசத்தை ஏற்படுத்த வேண்டுமென்றும் தேசியப் பிரச்சினைக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை முன்வைக்க வேண்டுமென்றும் இலங்கை ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் இந்திய அரசு வலியுறுத்தி வருகின்றமைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆக்கபூர்வப்படுத்துவதில் இலங்கை அரசு காட்டிவருகின்ற அசமந்தப் போக்கிற்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசில் தீர்வொன்றை வழங்குவதில் இலங்கை அரசு காட்டிவருகின்ற பின்னடிப்பிற்கும் தாங்கள் பெரிதும் மனம் வருந்துவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய உயரதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
மேற்படி விடயங்களில் எந்தவித அர்த்தமுள்ள நடவடிக்கைகளையும் எடுக்காமல் சமத்துவம், கண்ணியம், நீதி மற்றும் சுயமரியாதையுடன் எதிர்காலத்தில் இலங்கைத் தமிழ் மக்கள் வாழ்வதென்பது கேள்விக்குறியானது என உணர்வதாகவும், எனவே இவ்விடயம் தொடர்பில் இந்திய அரசு கூடிய கவனம் எடுக்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலும் வலியுறுத்தியுள்ளது.
இந்திய உயர்மட்டக்குழுவுடன் பேச்சுவார்த்தைகள் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் நடைபெற்றதாகவும் எதிர்காலத்தில் இலங்கை தமிழர்கள் சமத்துவம், கண்ணியம், நீதி மற்றும் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு இந்திய அரசு பெருமுயற்சி எடுக்குமென்று உறுதியளித்ததாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக அறிக்கையில் மேலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன

No comments:

Post a Comment