- மேன்முறையீட்டு மன்றுக்கு கொண்டு செல்கின்றோம் : வி.உருத்திரகுமாரன்
- அமெரிக்க நீதித்துறையில் மாற்றங்களை ஏற்படுத்தவல்ல மனுதாரரின் வாதங்கள் : நீதிபதி
அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களத்தினால் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச வழங்கப்படுகின்ற இராஜீகரீதியிலான சிறப்புரிமை தொடர்பிலான வழக்கு விசாரணையினை தள்ளுபடி செய்துள்ள நியூ யோர்க் மாவட்ட நீதிபதி றயோமி றீஸ் பூசுவர்ட் அவர்கள் அமெரிக்காவின் தற்போதய நீதித்துறையில் குறிப்பிடக்கூடிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு வாதங்களை மனுதாரர் முன்வைத்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
மனுதாரர் சார்பில் வழக்காடிய வழக்கறிஞரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமருமாகிய வி.உருத்திரகுமாரன் அவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு இந்த முறையீட்டு மனுவினைக் கொண்டு செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிங்கள படைகளினால் படுகொலை செய்யப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் ரமேஸ் (துரைசிங்கம்) அவர்களது மனைவி வக்சலாதேவியினால், சிறிலங்கா அரசுத் தலைவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு விவகாரத்தில், இராஜீகரீதியிலான சிறப்புரிமை பிரகாரம், ஓரு நாட்டின் அரசுத் தலைவருக்கு எதிராக அமெரிக்க நீதி மன்றங்களில் விசாரிப்பதற்கெதிராக விலக்கினை சுட்டிக்காட்டும் பரிந்துரையினை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னர் ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதிபதி கௌரவ றயோமி றீஸ் பூசுவர்ட் அவர்கள் நாட்டின் அதிபர் என்ற வகையில் அவர் பதவியிலிருக்கும் வரை அவருக்கு எதிராக வழக்குத் தொடுப்பதிலிருந்து விலக்கு வழங்கப்படுகின்றது தீர்ப்பளித்து குறித்த வழக்கினை தள்ளுபடி செய்துள்ளார்.
மேலும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட விதி விலக்குத் தொடர்பான ஆலோசனைக்கு ஏற்பவே இந்த வழக்கினை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கின் வழக்கறிஞர் விசுவநாதன் உருத்ரகுமாரன் அவர்கள் தெரிவிக்கையில் குற்றவியல் வழக்குகளுடன் ஒப்பிடும் பொழுது குடியியல் வழக்குகளின் தாக்கம் அரச செயல்பாடுகளில் குறைவு என்றும் அதே சமயம் குடியியல் வழக்குகளால் பாதிக்கப்பட்டவருக்கு அவை உரிமை வழங்குகின்றன. அத்துடன், அனைத்துலக மனித உரிமை சட்டங்களின் கீழ் இழைக்கப்படும் குற்றங்களில் அரசுத் தலைவரின் சட்டக் கடப்பாடு பற்றி தற்சமயம் உலகளாவிய ரீதியில் மாற்றங்கள் படிப்படியாக ஏற்பட்டு வருகின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், மனுதாரார் இந்த வழக்கின் தீர்ப்பை அமெரிக்க மேல்முறையீட்டு மன்றில், மேல்முறையீடு செய்யவுள்ளார் எனவும், வழக்கு மூன்று மேல்முறையீடு நீதிபதிகளினால் விசாரணைக்குட்படுத்தப்படும் என தெரிவித்த வழக்கறிஞர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் ‘நீதியின் பாதை நீண்டதாக அமையலாம். ஆனால், திடசங்கர்ப்பத்தோடு தடம் புரளாது எமது பயணம் தொடரும்’ என உறுதியுடன் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டுத் தலைவர் அந்த நாட்டை வெளிநாடுகளில் பிரதிநிதித்துவப் படுத்தும் போது வெளிநாட்டுச் சட்ட முறைமைகளினால் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எதுவும் இன்றி இயங்குவதை நோக்கமாகக் கொண்டே ‘அரசுத் தலைவருக்கு விதிவிலக்கு’ எனும் கோட்பாடு இயங்குகின்றது எனவும் வழக்கின் நீதிபதி அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், மனுதாரார் தற்போதய நீதித்துறையில் குறிப்பிடக்கூடிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு வாதங்களை முன்வைத்துள்ளார் என்பதையும் நீதிபதி பூசுவர்ட் குறிப்பிட்டுள்ளார். இன்றைய கால கட்டத்தில் அரசுத் தலைவர்களுக்குப் சட்ட விலக்கு வழங்கக்கூடாது என்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவான அனைத்துலக குற்றவியல் ஒழுங்கு ஒன்று உருவாக்கி வருகின்றது எனவும், அது நல்லதோர் முன்னேற்றம் எனவும் நீதிமன்றம் தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது. எனினும், குடிசார் பிரச்சனைகளில் இவை பொருந்தாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் பற்றிய பாதிப்புக்குள்ளான ஒருவர் குற்றவியல் அடிப்படையில் அனைத்துலக நீதித் தீர்ப்பைப் பெறக்கூடிய சூழலில், அதே நீதியாணையின் கீழ் குடிசார் தீர்ப்பைப் பெற முடியாதிருப்பது ஒரு விசித்திரமான நிலைமையாகும் என மனித உரிமை வல்லுனர்கள் இவ்வழக்கு விசாரணை குறித்து கருத்துரைத்துள்ளனர்.

No comments:
Post a Comment