Saturday, October 13, 2012

புலிகளால் சுடப்பட்ட விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு – ஏவுகணை தாக்குதல் நடத்திய போராளி மீது போர்குற்ற வழக்கு

இரணைதீவுக் கடலில் விடுதலைப் புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்ட லயன் எயர் பயணிகள் விமானத்தின் சிதைவுகளை சிறிலங்கா கடற்படை கண்டுபிடித்துள்ளது.

1998ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 29ம் நாள் 56 பயணிகளுடன் இரணைதீவுக்கு மேலாக பறந்து கொண்டிருந்த போது, அன்ரனோவ் - 26 ரக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்த விமானம் வீழ்ந்த இடம் தொடர்பாக, விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், கடந்த 2ம் நாள் சிறிலங்கா கடற்படைச் சுழியோடிகள் குழுவொன்று இரணைதீவு கடற்பரப்பில் விமானத்தின் சிதைவுகளை கண்டுபிடித்துள்ளது.


இரண்டு இறக்கைகள், மூன்று சக்கரங்கள், விமான இயந்திரம், உடற்பகுதியின் முன் பக்கம் ஆகியவற்றின் சிதைவுகள் சிறிலங்கா கடற்படை சுழியோடிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த சிதைவுகள் விரைவில் மீட்கப்படும் என்றும், இதற்கான சாத்தியங்கள் குறித்த ஆராய சிறிலங்கா கடற்படையின் சுழியோடிகள் குழுவொன்று இரணைதீவுக்குச் செல்லவுள்ளதாகவும் சிறிலங்கா கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை சாத்தியம் எனக் கருதப்பட்டால், மீட்பு நடவடிக்கை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மேற்கொள்ளப்படும்.

இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பொறுப்பான விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி, போர் முடிவுக்கு வந்த பின்னர், தீவிரவாத விசாரணைப் பிரிவின் தடுப்புக்காவலில் இருந்து வருகிறார்.

அப்போது இரணைதீவில் இருந்து இந்த விமானத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய நால்வர் கொண்ட குழுவில் இந்த சந்தேக நபரும் ஒருவராக இருந்தார்.

மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது.

பலாலியில் இருந்த புறப்பட்ட 10 நிமிடங்களில் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயர்- 602 விமானத்தில் பயணம் செய்த 48 பொதுமக்களும், 2 உக்ரேனிய விமானிகள் உள்ளிட்ட 6 விமானப் பணியாளர்களும் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

   

No comments:

Post a Comment