ஈழத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு அவசியம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் து. ராஜா தெரிவித்தார்.
திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் :
இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் 90
உறுப்பினர்கள் கொண்ட குழு மற்றும் பிரிட்டானியா தமிழ் அமைப்பு இணைந்து
இலங்கை பிரச்னை தொடர்பாக விவாதிக்க லண்டனில் அண்மையில் மாநாட்டை கூட்டின.
மாநாட்டில், இலங்கைத் தமிழர்கள் மீதான
ராஜபக்ஷ அரசின் இனப் படுகொலை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்
ஆதாரங்களுடன் எடுத்து வைத்தோம்.
இலங்கையில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற
போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், இன்றும் தொடரும் இன அழிப்பு,
வடக்கு தெற்கு ஆகிய தமிழர் பகுதிகளில் நடைபெறும் ராணுவ ஆக்கிரமிப்பு
மற்றும் சிங்களர்கள் குடியேற்றம் ஆகியவை உடனடியாக தடுக்கப்பட வேண்டும்.
கடந்த ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா
மனித உரிமை கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும்,
பரிந்துரைகளையும் கூட இலங்கை அரசு இதுவரையில் அமல்படுத்தவில்லை.
தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க இலங்கை அரசு எதுவுமே செய்யவில்லை.
ஐ.நா. சபையின் உள் அறிக்கையை பிபிசி
செய்தி நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. போர் நடைபெற்றபோது ஐ.நா. சபை
அதிகாரிகள், செஞ்சிலுவைச் சங்கத்தினர், ஊடகத் துறையினர் தங்கள் கடமைகளை
ஆற்ற இலங்கை அரசு அனுமதிக்கவில்லை. இந்த விஷயத்தில் ஐ.நா. தோற்றுவிட்டது என
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்றது போன்று
வேறெங்கும் நடைபெறவில்லை என ஐ.நா. சபையே ஒப்புக் கொண்டுள்ளது.
எனவே, இலங்கையில் போர்க்குற்றங்கள்,
மனித உரிமை மீறல்கள், தற்போதும் தொடரும் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள்
குறித்த சுதந்திரமான சர்வதேச விசாரணை தேவை என அந்த மாநாட்டில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை பிரச்னையை ஐ.நா. முழுமையாக
உணர்ந்துள்ளது. எனவே, சர்வதேச விசாரணை தேவை என்ற லண்டன் மாநாட்டு
தீர்மானத்தை நிறைவேற்ற ஐ.நா.சபையின் பொதுக் குழு, பாதுகாப்புக் குழுவில்
பொதுச் செயலர் பான்கீமூன் எழுப்ப வேண்டியது அவசியம். எழுப்புவார் என்று
எதிர்பார்க்கிறேன்.
அண்டை நாடு என்ற வகையில், தமிழர்களைக் காக்க, குரல் கொடுக்காமல் இந்திய அரசு, ராஜபக்ஷவுக்கு துணை நின்றது மாபெரும் தவறாகும்.
இலங்கை குறித்த தனது வெளியுறவுக் கொள்கையை மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும்.
சுதந்திரமான, சமத்துவமான வாழ்க்கையை பெற
ஈழத்தமிழர் பிரச்னையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை இந்திய
அரசு வலியுறுத்த வேண்டும். இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை
சர்வதேச நாடுகள் உற்றுநோக்கி வருகின்றன.
ஈழத் தமிழர் பிரச்னையில் உரிய தீர்வு ஏற்பட இந்தியாவும், சர்வதேச சமூகமும் முனைப்பு காட்ட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment