Monday, November 26, 2012

பரிதி அண்ணா அவர்களுக்கு உலகளாவிய தமிழ் இளையோர் அவையின் வீரவணக்கம்

276957_205193396160316_2052018455_nஉலகளாவிய தமிழ் இளையோர் அவை புலம்பெயர்ந்த தமிழ் மக்களுடன் இணைந்து தமிழீழ தேசிய பணியாளரான பரிதி என்றழைக்கப்படும் திரு. மதிந்திரன் நடராஜா அவர்களை நாமும் இவ்வளையில் நினைவுகூருவதுடன் அவருக்கான தனது மரியாதையையும் செலுத்திக்கொள்கின்றது.
கடந்த நவம்பர் 8, 2012 அன்று பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளராகவிருந்த பரிதி அண்ணா அவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலகத்துக்கு முன்னால் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட இந்தக் கோழைத்தனமான செயலை உலகளாவிய தமிழ் இளையோர் அவையானது வன்மையாகக் கண்டிப்பதுடன் தமிழ் மக்கள் அனைவருடனும் இணைந்து இக்கொலைக்கான விசாரணைகளை விரைவாக முன்னெடுத்து குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதி வழங்க வேண்டுமென பிரான்ஸ் அரசினையும் அதன் காவற்துறையினரையும் வலியுறுத்துகின்றது.
இது போன்ற சமுக ஆர்வலர்கள் மீதான கொடூரமான செயல்கள் பிரான்ஸ் போன்ற ஜனநாயக சுதந்திரம் மிக்க நாடுகளில் நடைபெறும் பொழுது எமக்கான பாதுகாப்பு புலம்பெயர்ந்து வாழும் இத்தேசங்களிலும் அச்சுறுத்தலுக்குள்ளாகின்றது.
தமிழ்ச் செயற்பாட்டாளர்களுக்கெதிரான கொலைகள், காணாமற்போகுதல்கள் மற்றும் வன்முறைகள் இலங்கையில் மிகவும் சாதாரணமாக ஆகிவிட்ட இந்நிலையில், புலம்பெயர்ந்து வாழும் வெளிநாடுகளிலும் இவை சட்டம், நீதிநெறிகளை மீறி விரிவடைந்துள்ளது. இதுபோன்ற செயல்கள் உலகில் வேறு எங்கும் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருப்பதற்கு உறுதியான ஒரு முழுமையான விசாரணை அவசியம்.
பரிதி அண்ணா அவர்களின் கொலை தமிழ் சமூகத்துக்கும் அவரது குடும்பத்துக்கும் ஓர் ஈடுசெய்ய முடியாத இழப்பு. இத்துயரமான வேளையில், உலகளாவிய தமிழ் இளையோர் அவையினராகிய நாம், அவரது குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழீழ தேசிய பணியாளரான பரிதி அண்ணா அவர்களுக்கு மீண்டும் எமது இறுதி வணக்கத்தினைத் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளையில் பிரான்சில் அவரின் இறுதிவணக்க நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டதுபோல திங்கட்கிழமை நடைபெறும் வணக்க நிகழ்விலும் கலந்து கொள்ளவேண்டுமென்று எங்களது மக்களை கேட்டுக்கொள்கின்றோம். எமது பாசத்துக்குரிய புலம்பெயர்மக்களே தொடர்ந்தும் இலங்கையில் நடைபெற்றுவரும் இனப்படுகொலையினைக் கண்டிப்பதோடுமட்டுமல்லாமல் அதனை அனைத்துலகத்தின் முன்னால் வெளிக்கொண்டுவர நாம் அனைவரும் ஒன்றிணைந்து புலம்பெயர்ந்த நாடுகளில் செயற்படுவதன் அவசியத்தினையும் வலியுறுத்தி நிற்கின்றோம் அதன்மூலமே நாம் எமக்கான சுயநிர்ணய உரிமையினை வென்றெடுக்கலாம்.

No comments:

Post a Comment