Wednesday, November 21, 2012

போராளிகள் மீண்டும் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதை தடுத்து நிறுத்துக! – கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இராஜேஸ்வரன் வலியுறுத்து!!

imageபுனர்வாழ்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளை மீண்டும் படைத்தரப்பின் புலனாய்வாளர்கள் கைது செய்து சித்திரவதை செய்வதை சிறிலங்கா அரசாங்கம் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட உறுப்பினருமான பேராசிரியர் மு.இராஜேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது சரணடைந்து, பலதரப்பட்ட விசாரணைகளின் பின் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் விசாரணை என்ற போர்வையில் சிறிலங்கா படைத்தரப்பின் புலனாய்வாளர்களால் மீண்டும் கைது செய்யப்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள்  போராளிகள் நான்கு பேர் வெள்ளைவானில் வந்த சிறிலங்கா படைத்தரப்பின் புலனாய்வாளர்களினால் மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும், அம்பாறை படை முகாமொன்றில் வைத்து அவர்கள் சித்திரவதைக்குள்ளாகியுள்ளனர் என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளமை குறித்து  கருத்துத் தெரிவிக்கும் போதே கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இராஜேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
‘தமிழின விடுதலைப் போராட்டத்தில் எத்தனையோ போராளிகள் தங்கள் இன்னுயிர்களை தம்மினத்திற்காக ஆகுதியாக்கியுள்ளார்கள். அதேவேளை, எத்தனையோ போராளிகள் களத்தில் நின்று உழைத்திருக்கின்றாகள். இவ்வாறு களத்தில் நின்று செயற்பட்ட எமது போராளிகளில் ஒரு தொகையினர் இறுதி யுத்தத்தின்போது  சிறிலங்கா படைத்தரப்பினரிடம் சிக்கினர்.
இவர்களில் பலர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அவ்வாறு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மாவீரர் நாள் நெருங்கும் வேளையில் மீண்டும் கைதுசெய்யப்படும் படலம் தொடர்கின்றது. அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த வாரம் முன்னாள் போராளிகள் சிலர் சிறிலங்கா படைத்தரப்பின் புலனாய்வாளர்களினால் கைது செய்யபப்பட்டு படை முகாம் ஒன்றில் வைத்து சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி எமக்கு மிகுந்த கவலையைத் தருவதுடன் ஆத்திரத்தையும்  ஏற்படுத்துகின்றது. முன்னாள் போராளிகளும் மனிதர்கள்தான்;. அவர்களும் எமது உடன் பிறப்புகள்தான். இதை சிறிலங்கா அரசாங்கம் உணரவேண்டும்.
தமிழீழ விடுதலைப் போரில் ஆகுதியானவர்களை நினைவுகூரும் நாளான்  மாவீரர் நாள் நெருங்கும் வேளையில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை அச்சத்தில் வைக்கும் நோக்குடன் சிறிலங்கா படைத்தரப்பினர்  மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாக இருக்கின்றது போல எமக்குத் தென்படுகின்றது. ஆனால், இவ்வாறான செயல்கள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு வீண்விபரீதங்களை உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் ஏற்படுத்தும்.
எனவே, புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளை மீண்டும் படைத்தரப்பின் புலனாய்வாளர்கள் கைதுசெய்து சித்திரவதை செய்வதை சிறிலங்கா அரசாங்கம் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பேராசிரியர் இராஜேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment