Saturday, November 24, 2012

யாழ்.பல்கலை நியமனங்கள் மீண்டும் கிளம்பியது சர்ச்சை

campusயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு கணினிப் பிரயோக உதவியாளர்கள், சுருக்கெழுத்தாளர்கள் மற்றும் எழுதுவினைஞர்களை நியமிப்பது தொடர்பில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த 3 பதவிகளுக்கும் 41 பேர் நியமனம் செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கான எழுத்துப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
தேர்வுக்குழு சமர்ப்பித்த பட்டியல் பேரவையின் அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளது. ஆனால் கடந்த இரு மாதங்களாக நடைபெற்ற பேரவைக் கூட்டங்களில் பட்டியல் சமர்ப்பிக்கப்படவில்லை. அரசியல் தலையீடு காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த நிலையில், தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலை நாளை நடைபெற உள்ள பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கும்படி பல்கலைக்கழகப் பதிவாளருக்கு தான் எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிப்பார் என்று துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தம்மிடம் உறுதியளித்திருந்தார் என்று பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தெரிவிக்கிறது.
அதற்கிடையில் உயர் கல்வி அமைச்சின் செயலாளரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தொலைநகல் ஒன்றில் இந்த நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று விடுத்த அறிக்கை ஒன்றில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், இதற்குத் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. “நியமனப் பட்டியலை பேரவைக்குச் சமர்ப்பிக்காது இடைநிறுத்தி வைக்கும் அதிகாரம் உயர் கல்வி அமைச்சின் செயலாளருக்கு இல்லை” என்று சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதிகாரம் இல்லாத நிலையில் அமைச்சு செயலாளர் இவ்வாறு செய்வது யாழ். பல்கலைக்கழக பீடாதிபதிகளினதும் ஏனைய கல்விமான்களினதும் நேர்மைக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல் எனவும் சங்கத்தின் அறிக்கை கண்டித்துள்ளது.
“கடந்த இரு மாதங்களாக தகுந்த ஆதாரங்கள் இன்றி நியமனப் பட்டியலை பேரவைக்குச் சமர்ப்பித்தத் தவறியவர்கள் தங்களின் செயலை நியாயப்படுத்தும் நோக்குடன், எந்தவித ஆதாரமும் அற்ற கடிதம் ஒன்றை உயர் கல்வி அமைச்சின் செயலரிடம் இருந்து பெற்றுச் சமர்ப்பிக்கிறார்கள் என்றே நாம் கருதுகின்றோம்” என்றும் சங்கம் கூறுகின்றது.
அரசில் பங்காளியாக உள்ள தமிழ் அமைச்சர் ஒருவரின் தலையீட்டினாலேயே இந்த நியமனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன என்று “உதயன்’ உறுதியாக அறிந்துள்ளான்.
தனது கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு நியமனங்கள் கொடுக்கப்படவில்லை என்பதால் இந்த நியமனப் பட்டியலை ஏற்க முடியாது என்று அந்த அமைச்சர் தனது “தியேட்டர்’ அலுவலகத்தில் வைத்து துணைவேந்தரிடமும் பீடாதிபதிகளிடமும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
அவர் கொடுத்த அழுத்தத்தின் மூலமே உயர் கல்வி அமைச்சின் செயலர் இப்போது இப்படியொரு கடிதத்தை அனுப்பியிருக்கக் கூடும் என்று ஊழியர்கள் சந்தேகிக்கின்றனர்.
ஏற்கனவே ஒரு தடவை இந்த 3 பதவிகளுக்குமான நியமனத் தெரிவுகள் நிறுத்தப்பட்டிருந்தன. இது இரண்டாவது தடவையாகும்.
இதன் மூலம் அடுத்த தேர்வில் அந்த அமைச்சர் தனது கட்சிக்காரர்களுக்கு மட்டுமே நியமனம் வழங்க வழி வகை செய்வார் என்றும் ஊழியர்கள் அஞ்சுகின்றனர்.
“தமது சுயநலன்களுக்காக நேர்மையான நியமனங்களைத் தடுத்து நிறுத்தும் இத்தகைய கேவலமான அரசியல்வாதி குறித்து தாம் கவலையடைகின்றனர்” என்றும் அவர்கள் “உதயன்’ பத்திரிகையிடம் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment