Monday, November 19, 2012

வல்லையில் புதிய படை முகாம் அமைக்கும் பணிகள் தீவிரம்

imagesவல்லைச் சந்தியில் இராணுவத்தினர் படைமுகாம் ஒன்றை புதிதாக அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றர். குறித்த பகுதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த படையினர் கடந்த இரு தினங்களாக கனரக வாகனங்கள் மூலம் புதிய கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதாகவும் இது ஒரு படைத்தளம் ஒன்றை அமைக்கும் முயற்சியே என்றும் பொதுமக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
வடமராட்சியின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வல்லைப்பகுதியில் ஏற்கனவே ஒரு படைமுகாம் நிறுவப்பட்டிருந்தது. வடமராட்சிக்கு செல்லும் வாகனங்களும், பொதுமக்களும் இந்த முகாமில் அனேக நேரங்களில் பதிவுகளை மேற்கொண்டுவிட்டு உட்செல்ல முடிந்தது.
போர் முடிவுக்கு வந்த பின்னரும் வல்லை முகாமில் இரவு நேரங்களில் பயணிக்கும் சகலரும் படையினரிடம் பதிவுகளை மேற்கொண்ட பின்னரே பயணிக்கும் நிலை  தொடர்கின்றது.
இந்த நிலையில் ஏற்கனவே இருந்த முகாமுக்கு எதிர்ப்பக்கமாக புதிய முகாம் ஒன்றை துரித கதியில் இராணுவத்தினர் கடந்த சில தினங்களாக அமைத்து வருகின்றனர்.
முகாம் அமைக்கும் பணிக்காக அந்தப் பகுதியில் நடுகை செய்யப்பட்டிருந்த சவுக்கு மரங்கள், பனை வடலிகள் என்பன தறிக்கப்பட்டு கடந்த சில தினங்களாக கனரக வாகனங்களின் உதவியுடன் துப்புரவுப் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் தற்போது இரும்புக்கேடர்கள், கனமான கூரைத்தகடுகள் என்பவை கொண்டுவரப்பட்டு, பலமிக்க வகையில் புதிய படைமுகாமை அமைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே இருக்கும் முகாமுக்கு மேலதிகமாக இந்தப் புதிய முகாம் அமைக்கப்படுகிறதா? அல்லது புதிய முகாம் நிறுவப்பட்டவுடன் பழைய முகாமை படையினர் கைவிடுவார்களா என்பது குறித்த விவரங்கள் தெரியவரவில்லை.

No comments:

Post a Comment