Saturday, December 01, 2012

கூடங்குளம் அணு மின் நிலையத்தால் இலங்கை மக்களுக்கு என்ன பாதிப்பு?

kudankulam_plant_001இலங்கையின் வடக்கு, வடமேற்கு, மேற்குக் கரையோரங்களிலும் திருகோணமலையிலும் கண்டியிலும் காலியிலும் கூட கதிர்வீச்சை கண்காணிக்கும் கருவிகள் 12 மில்லியன் ரூபா செலவில் நிறுவப்பட்டுள்ளன. இது அணு உலை ஒன்றின் கதிர்வீச்சு எல்லையினை நன்கு எடுத்துக்காட்டும் செய்தியாகும்.
கூடங்குளம் அணு உலையின் அன்றாட இயக்கத்தினால் ஏற்படக்கூடிய புற்றுநோய் உட்பட பாதிப்புக்களும் விபத்தொன்றும் நேரும் பட்சத்தில் ஏற்படக் கூடிய அழிவுகளும் 220 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள இலங்கை மக்களுக்குப் பாரிய அச்சுறுத்தலாகும்.
கூடங்குளம் மின் நிலையம் அமைந்துள்ள பகுதி, நிலநடுக்க, எரிமலை வெடிப்பு, சுனாமி போன்ற அபாயங்களைக் கொண்டுள்ள இடமாகும்.
கடற்கரையோரமாக அமைந்துள்ள அணு உலைகளைக் குளிர்விக்கக் கடல் நீரே பயன்படுத்தப்படவுள்ளது. உரிய முற்காப்பு நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுள்ளன என்று இந்திய அரசு உறுதியளித்திருக்கிறதாயினும் ஊழலும் கவனக் குறைவும் மலிந்த நாடொன்றில் எவ்வளவு அக்கறையுடன் நீண்ட காலத்தில் இம்முன்னேற்பாடுகள் கவனிக்கப்படும் என்பது கேள்விக்குரியது.
கடல் நீரில் கதிரியக்கம் கலக்கும் பட்சத்தில் இலங்கையின் வடக்கு, வடமேற்கு மீன்வளம் கதிரியக்கப் பாதிப்புக்குள்ளாகும் இது மீன்பிடித்தொழிலினை அடியோடு ஒழிப்பதுடன் இந்த இடங்களில் பிடிக்கப்படும் மீன்களை உண்பவர்களுக்கு புற்றுநோய் உட்பட பாரிய சுகாதாரக் கேடுகளை உருவாக்கும்.
கூடங்குளம் அணு மின்நிலையத்தின் கழிவான கொடிய புளூட்டோனியத்தினை ரஷ்யாவுக்கு மீள எடுத்துச் செல்வதாகவே தொடக்க கால ஒப்பந்தம் இருந்ததெனினும் தற்போது அவ்வொப்பந்தம் கைவிடப்பட்டு கொடிய கழிவுகளை இந்தியாவே கையாள வேண்டும் என்றாகியிருக்கின்றது.
இக் கழிவினைப் புதைத்து வைக்கப் பாதுகாப்பான இடமாக மன்னார் வளைகுடாப் பகுதி தெரிவு செய்யப்பட்டிப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. இத் தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இலங்கை மக்கள் தீவிர அச்சுறுத்தலுக்கு உள்ளாவார்கள்.
இவ்வாறு புதைக்கப்படும் புளுட்டோனியம் கழிவு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு கதிரியக்கத்தினை வெளியேற்றிய வண்ணமிருக்கும். இது எப்போது வேண்டுமானலும் வெடிக்கக் காத்திருக்கும் அணு குண்டு ஒன்றினை மடியில் கட்டிக் கொண்டிருப்பதற்குச் சமமாகும்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தால் இலங்கை மக்களுக்கு ஏற்படப்போகும் கொடிய பாதிப்புக்களைத் தடுத்து நிறுத்த, பன்னாட்டு முதலாளிகளின் நலன் காப்பதற்காக மக்களின் வாழ்வாதாரத்தைப் பலிகொடுக்கும் அணுமின் நிலையங்களை எதிர்த்து முறியடிக்க, கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கெதிராக எழுச்சியுடன் போராடும் இடிந்தகரை கூடங்குளம் மக்களுக்கு எமது ஆதரவினை உரத்துச் சொல்ல வேண்டும்.
தமிழகத்தில் போராடும் மக்களுக்கு ஆதரவாக வடக்கு, வடமேற்கு இலங்கையின் மீனவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் உட்பட்ட அனைத்து இலங்கை மக்களும் ஒன்றுபட்டு இதனைத் தடுக்கப் போராட வேண்டும்.
எமது காலத்தில் எமக்கு மிக அருகாமையில் இந்தியாவில் தமிழ் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் மிக முக்கியமான மக்கள் போராட்டமே கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டமாகும்.
அம்மக்கள் பாரிய ஆயுத அடக்குமுறையினை எதிர்கொண்டு ஒரு பிராந்திய வல்லரசினை எதிர்த்து வெறுங்கையுடன் மக்கள் திரள் சக்தி மீது நம்பிக்கை கொண்டு போராடுகின்றார்கள். அவர்கள் இலங்கை மக்களுக்கும் நேரப்போகும் அபாயங்களைத் தடுத்து நிறுத்தவே போராடுகின்றார்கள்.
இவ்வாறானதொரு மக்கள் போராட்டத்திற்கு இலங்கை மக்களாகிய நாமும் ஆதரவளித்துக் கைகொடுப்பது உயர்ந்த அரசியற் பண்பாகும்.
குறித்த இடத்தின் மக்களது போராட்டங்களுக்கு ஏனைய மக்களும் ஒருமைப்பட்டு ஒன்றிணைந்து கைகொடுப்பது மட்டுமே அதிகாரங்களை ஆட்டம் காணச் செய்யும் வழிமுறையாகும்.

No comments:

Post a Comment