Monday, December 03, 2012

இரத்தத்தை சூடேற்றும் முயற்சி பலனளிக்காது: பஷில்

cop2(3)“அரசியல் வாதிகள் சிலர் வடக்கில்  மக்களின் இரத்தத்தை சூடேற்றி, இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவித்து, மீண்டும் ஒரு யுத்தத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அந்த முயற்சிகள் ஒரு போதும் பலனளிக்காது” என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
வவுனியா, சாளம்பைக்குளம் அல்-அக்ஷா மஹா வித்தியாயத்தின் மூன்று மாடிக்கட்டடத்திற்கான அடிக்கல்லினை நாட்டி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாகிஸ்தான் அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்படும் இந்த கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இன,மதம்,மொழி,பிரதேசம் பேதங்களின்றி  ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் வடக்கில் பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் உதவிகள் மற்றும் அரசாங்கம் பெறும் கடன்கள் என்பனவற்றில் 85 சதவீதம் வடக்கிலேயே செலவு செய்யப்படுகின்றது.
ஆனால் வடக்கில் சில அரசியல் வாதிகள் மக்களின் இரத்தத்தை சூடேற்றி, இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவித்து, மீண்டும் ஒரு யுத்தத்தை ஏற்படுத்த முயலுகின்றனர்.  இந்த அரசியல் வாதிகளின் பிள்ளைகள் இங்கிலாந்திலும்,  ஏனைய நாடுகளிலும் கல்வி பயிலுகின்றனர்.
தேர்தல் ஒன்று வந்துவிட்டால் தமது பிரசன்னத்தை செய்வதுடன்,  வாரத்திற்கு ஒரு முறை இங்கு வரும் அரசியல் வாதிகளாகவே இருக்கின்றனர்.  இவர்களின் இந்த முயற்சிகள் ஒரு போதும் பலனளிக்காது என்பதை தெளிவாக கூறிக் கொள்ள  விரும்பகின்றேன்.
இந்த நாட்டில் சமாதானம் ஏற்படக்கூடாது என்பதில் சர்வதேச சக்திகள் முனைப்புடன் செயற்பட்டன. இன்றும் அவர்கள் தங்களது நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுக்கின்றனர். இதனை குழப்புவதற்கு வல்லரசு முனைந்த போதும் அதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசு ஒரு போதும் இடமளிக்காது என்பதை அந்த சக்திகளுக்கு சொல்ல வைக்க விரும்பகின்றேன் என்றார்.

No comments:

Post a Comment