Saturday, December 01, 2012

தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் – கனேடிய அதிகாரிகளிடம் சிறிலங்கா இராணுவ கப்டன் சாட்சியம்

watudura-293x150சிறிலங்கா இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்ற கப்டன் தர அதிகாரி ஒருவர், கனடாவில் தஞ்சமடைந்துள்ளதுடன், சிறிலங்கா அரசபடைகளால் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் மற்றும் குற்றங்கள் குறித்த தகவல்களை கனேடிய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.
கனடாவின் நசனல் போஸ்ட் நாளேடு இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
கப்டன் ரவீந்திர வடுதுர பண்டாரகே என்ற 38 வயதுடைய இந்த சிறிலங்காப் படை அதிகாரி 2009 ஒக்ரோபரில், இராணுவத்தில் இருந்து ரொரன்டோவுக்குத் தப்பிச்சென்றார்.

சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசுப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள், குற்றச்செயல்கள் குறித்து தனக்குத் தெரியும் என்று கனேடிய குடிவரவு அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
தனது புகலிடக் கோரிக்கை தொடர்பான விசாரணையின் போது, அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வீட்டில் குண்டுஒன்றை வைக்குமாறு தனக்கு கேணல் தர அதிகாரி ஒருவர் உத்தரவிட்டதாகவும் இவர் கூறியுள்ளார்.
தான் அதற்கு மறுத்ததால், கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், அங்கு தமிழர்களைச் சுற்றிவளைக்கும் தேடுதல்களுக்கு உதவியதாகவும் கப்டன் ரவீந்திர வடுதுர பண்டாரகே தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தினர் பொதுமக்களை சித்திரவைதை செய்தது, தாக்கியது, பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியது குறித்து தனக்குத் தெரியும் என்றும் அவர் சாட்சியமளித்துள்ளார்.
“மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். நான் அதை ஒப்புக் கொள்கிறேன்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவில் நடந்த போரின் போது, இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பான சாட்சியங்கள் இருந்தாலும், முன்னாள் கட்டளை அதிகாரி ஒருவரின் சாட்சியம் என்பதால் இது முக்கியம் பெறுகிறது.
சிறிலங்கா இராணுவ கப்டனின் இந்தக் குற்றச்சாட்டு, சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற அனைத்துலக அழுத்தங்கள் அதிகரிக்கும்.
1993ம் ஆண்டில் சிறிலங்கா இராணுவத்தில் இணைந்த கப்டன் வடுதுர பண்டாரகே, ஒரு குங்பூ சம்பியனாவார்.
தான் கிளர்ச்சி முறியடிப்பு பயிற்சிகளைப் பெற்றதாகவும் இவர் கனேடிய அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
“நான் சிறிலங்காவுக்குத் திரும்பிச்சென்றால், எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அறிவேன்.” என்று கூறிய அவர், தான் போரில் பங்கெடுக்கவில்லை என்று கூறியதை கனேடிய அதிகாரிகள் நம்பவில்லை.
எனினும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தவர் என்பதால், கப்டன் பண்டாரகே புகலிடம் கோருவதற்கு தகுதியற்றவர் என்று கனேடிய அகதிகள் சபை கூறியுள்ளது.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்கு குண்டுவைக்குமாறு கேட்கப்பட்டதால், இவர் நம்பகத்துக்குரிய அதிகாரியாக இருந்துள்ளார் என்பதாலும், தமிழ்மக்கள் மீதான சிறிலங்கா இராணுவத்தின் மிருக்கத்தனமான செயல்களை அறிந்துள்ளார் என்பதாலும் இவர் புகலிடம் பெறத்தகுதியற்றவர் என்று கனேடிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
“சிறிலங்காவில் போரின் இறுதி சில ஆண்டுகளில், தமிழ்மக்கள் மீது நடத்தப்பட்ட பரந்தளவிலான திட்டமிட்ட தாக்குதல்கள் இடம்பெற்ற காலப்பகுதி முழுவதும் இவர் ஒரு கப்டனாக பணியாற்றியுள்ளார்.
சிறிலங்கா இராணுவப் படைகள் மனிதகுலத்துக்கு எதிரான எண்ணற்ற குற்றங்களைச் செய்துள்ளன என்று நான் கண்டறிந்துள்ளேன்” என்று அகதிகள் குடிவரவுச்சபையின் உறுப்பினர் மைக்கல் மிவசைர் எழுதியுள்ளார்.
கப்டன் வடுதுரவின் சமஸ்டி நீதிமன்ற முறையீடு கடந்தவாரம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
“இது முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். ஆயுதமோதலின் இறுதிகட்டத்தில் என்ன நடந்தது என்றும், பெர்றுப்புக் கூறுதல் குறித்தும் இது பகிரங்கமாக விவாதிக்கப்படும் என்று நான் நம்புகிறேன்” என்று அனைத்துலக மன்னிப்புச்சபையின் சிறிலங்காவுக்கான கனேடிய ஒருங்கிணைப்பாளர் ஜோன் ஆர்கியூ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment