Sunday, December 02, 2012

Toronto நகரில் மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள் 2012

IMG_0765 27/11/2012 மாலை ஐந்து மணியளவில் 231 Milner Ave. இல் அமைந்துள்ள (Sts.Peter & Paul Banquet Hall) மண்டப வாசலின் ஊடாக உள் சென்றேன். மிக நேர்த்தியாக அமைக்கப்பட்ட துயிலுமில்லத்துடன் 300ற்கும் மேற்பட்ட மாவீரர்களின், மாவீரர் திருவுருப்படங்கள் மற்றும் மேடையில் மாவீரர் நாள் 2012 என்ற பொன் எழுத்துக்கள் எல்லாவற்றையும் பார்த்து நான் மெய்யுருகிப் போனேன்.

நேரம் பிற்பகல் 5:30க்கு கனடியத் தேசியக் கொடியை முன்னைநாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு ஈழவேந்தன் ஐயா அவர்கள் ஏற்றிவைக்க மற்றும் தமிழ் தேசியக் கொடியை மேஐர் அன்னைக்கிளியின் சகோதரன் திரு நிமால் வினாயகமூர்த்தி ஏற்றி வைத்தார். தொடர்ந்து 5:45க்கு  விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகத்தின் தமிழிழ தேசிய மாவீரர் நாள் அறிக்கை ஒலிபரப்பப்பட்டது.  பின்னர் 6:05க்கு நினைவொலி மணி எழுப்பப்பட்டு அதைத் தொடர்ந்து  மாவீரர்களுக்கான நினைவொலி மணி நிறுத்தப்பட்டவுடன் 6:06ற்கு மாவீரர்களுக்கான ஒரு மணித்துளி அகவணக்கம் செலுத்தப்பட்டது.  அகவணக்கம் நிறைவுற்றதும் 6:07ற்கு ஈகைச் சுடரை திரு நவரட்ணம் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து துயிலும் இல்லப் பாடலுடன் மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வை திரு கணபதி ரவிந்திரன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

டூர்காம் தமிழ் ஒன்றியம் சார்பாக ஐஸ்வரியா தயாபரன் மற்றும் லக்சிகா சத்தியநாதன் அவர்கள் அம்மா உன் பிள்ளை என்ற பாடலுக்கு நடனம் செய்தார்கள்.  பிறகு
மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே என்ற மாவீரர் பாடலுக்கு பரதாலயா நாட்டியப்பள்ளி மாணவிகள் செல்வி லக்ஷசனா மோகனச்சந்திரன் மற்றும் பிரணவி குலேந்திரராயா இருவரும் உணர்வு பூர்வமாக நடனம் செய்தார்கள். தொடர்ந்து ரொரண்ரோ நகரில் மிகச் சிறந்த நடனத் தாரகையென எல்லோராலும் அழைக்கப்படும் செல்வி நிவேதா ராமலிங்கம் அவர்கள் கண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை என்ற பாடலுக்கு தன் உணர்வுகளைக் கொட்டி அபிநயம் செய்து சபையோரை நெஞ்சுருக வைத்தார்.

அதைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டு கழகத்தின் கவிஞர்களின் கவித்தைத் தொகுப்பு ஒலிபரப்பப்பட்டது.  பின் திரு ஈழவேந்தன் ஐயா அவர்களின் சிறப்புரை வழங்கினார்.  மேலும் தனதுரையில் அன்றும் இன்றும் என்ற தலைப்பிலே பல விடயங்களை தெளிவாகக் கூறினார். தொடர்ந்து செல்வி நிவேதா ராமலிங்கம் கல்லறை மேனியர் கண் திறந்தார் என்ற பாடலுக்கு கண்கள் நனைந்து நடனம் செய்து எங்கள் மாவீரர் தெய்வங்களை வணங்கிச் சென்றார்.  அதைத் தொடர்ந்து தன் ஆளுமையான குரலால் எங்கள் தாய் நிலக் கவிஞன் திரு சின்னத்தம்பி அமல்குமார் அவர்களின் கவிதாஞ்சலியில் மாவீரர்களைப் பற்றியும் அவர்களின் தியாகங்களைப்பற்றியும், 30 வருட கால போராட்ட வரலாறு பற்றியும் எதிர்காலம் எமதே என்றும் தன் உணர்ச்சிக் கவிதையால் எங்களை மெய்சிலிர்க்க  வைத்தார்.  கல்லறைப் பூக்கள் எங்கே? எங்கள் கண்ணின் மணிகள் எங்கே? என்ற பாடலைப் பாடிய போது மண்டபமே அழுதது என்றே சொல்லலாம்.  மாவீரர்களை யார் எங்கு வேண்டுமானாலும் வழிபடலாம். அந்த உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு என்று சொன்னபோது இவருடைய நிதானமான பேச்சும் உறுதியும் எங்களையும் சிந்திக்க வைத்தது உண்மையே.  தொடர்ந்து தாயகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுக் காட்சிகள் வெள்ளித்திரையில் திரையிடப்பட்டது.  அவற்றைப் பார்த்தபோது நெஞ்சம் அழுதது. தொடர்ந்து நிகழ்ச்சிகளை அமல்குமார் சின்னத்தம்பி தொகுத்து வழங்கினார்.

அதைத் தொடர்ந்து வெண்ணிலா விக்கினேஸ்வரனின் பாவாராகம் நாட்டியப்பள்ளி மாணவிகள் காவியா தனகேஸ்வரன், காவியா தேவராஜா, விதுசா குமரதாசன், விக்கிணவி குமரதாசன் மற்றும் அலிசா சுதர்சன் அவர்கள் கார்த்திகை பூ கூட சுருதி இங்கு மீட்கும் என்ற பாடலுக்கு மிகச் சிறப்பாக நடனமாடினார்கள்.  தொடர்ந்து திருமதி வதனி அன்ரன் அவர்கள் மாவீரர்களை மனதில் நிறுத்தி தன் கம்பீரமான குரலில் தந்தார் ஒரு அழகான கவித்தொகுப்பு. தொடர்ந்து திரு கண்னன் அவர்கள் மாங்கிளியும் மரங்கொத்தியும் என்ற பாடலைப் பாடி தன் உணர்ச்சியை வெளிப்படுத்தினார்.

எமக்காக போராட சென்று, இன்று அடுத்த நொடிகளுக்காக ஏங்குகின்ற மாவீரர்களின் குடும்பத்தை தாங்க வேண்டிய பொறுப்பு பற்றி மிக தெளிவான ஒரு செய்தியை அமல்குமார் சொன்னபோது உடனடியாகவே ஒரு நலன் உள்ளம் கொண்ட மனிதர் ஒரு மாவீரர் குடும்பத்தை தான் பொறுப்பெடுப்பதாகச் சொன்ன போது இந்த மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவின்  முயற்சி வெற்றி பெற்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகி விட்டது. இறுதி நிகழ்வாக காணொளிக் காட்சிகளும் அதைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற அமல்குமாரின் பாடல் வரிகளுடன் எம் தேசியக்கொடியை இந்த மாவீரர் நிகழ்விற்கென தனது கைகளால் மிக அழகாக, நேர்த்தியாக மாவீரர் துயிலும் இல்லத்தை(தூபியை) அமைத்துத் தந்த மதிப்பிற்குரிய திரு சக்திவேல் அவர்கள் இறக்கி வைத்தார் மற்றும் கனேடிய கொடியை திருமதி சரோ ராமலிங்கம் அவர்கள் இறக்கி, இன்றைய மாவீரர் நாள் மிகச் சிறப்பாக நிறைவு பெற்றது.

வருடம் 2008ற்கு பிறகு எந்த தடைகளும் இல்லாமல் Toronto மாநகரில் முதன் முறையாக மாவீரர் நாள் 2012 நிகழ்வை எளிமையாகவும் மற்றும் மாவீரர் குடும்பங்களிற்கு உதவி செய்யும் நேக்கத்திற்காகவும் வெற்றிகரமாக நடத்திய, மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழுவிற்க்கு நன்றியும் வாழ்த்துகளும் மேலும் மேலும் சிறப்பாக, வரும் காலத்தில் செய்வதற்க்கு.


நன்றி,

நக்கீரனின் தர்மி.
கனடா





No comments:

Post a Comment