Friday, January 04, 2013

மாணவர் விடுவிக்கப்படுவர்; எப்போது என்பது தெரியாது; கையை விரிக்கிறார் உயர்கல்வி அமைச்சர்

SB.1_CIகைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரும் விடுவிக்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் எப்போது விடுவிக்கப்படுவார்கள் என்று கூறமுடியாது.
இவ்வாறு தெரிவித்துள்ளார் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க. யாழ். பல்கலைக்கழக சமூகத்தினர் நேற்று வியாழக்கிழமை உயர்கல்வி அமைச்சரைச் சந்தித்துப் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை விரைவில் ஆரம்பிக்குமாறு உயர்கல்வி அமைச்சர் இந்தச் சந்திப்பில் வலியுறுத்தியுள்ளார்.
பல்கலைக்கழகக் கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிப்பதானால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனப் பல்கலைக்கழக சமுகத்தினர் உயர்கல்வி அமைச்சரிடம் கூறினார்கள்.
இதற்குப் பதிலளித்த உயர்கல்வி அமைச்சர் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். ஆனால் அவர்கள் எப்போது விடுவிக்கப்படுவார்கள் என்று கூறமுடியாது  என்று குறிப்பிட்டார்.
மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காக கல்விச் செயற்பாடுகளை மீண்டும் விரைவாக ஆரம்பிக்க வேண்டும் எனவும் அமைச்சர் பல்கலைச் சமூகத்திடம் தெரிவித்தார் என்று சந்திப்பில் கலந்துகொண்ட ஒருவர் கூறினார்.
இந்தச் சந்திப்பில் யாழ். பல்கலைக்கழத் துணை வேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், பீடாதிபதிகள், பேரவை உறுப்பினர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment