நாடாளுமன்றத்
தெரிவிக்குழு அறிக்கையை ஆராய்ந்து ஆலோசனை வழங்க சுயாதீனக் குழு அமைக்க
வேண்டிய தேவை ஜனாதிபதிக்கு இல்லை. ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனையின்
பிரகாரம், பிரதம நீதியரசர் ஷிராணி பண்டார நாயக்கவை பதவியிலிருந்து
நீக்குவதைத் தவிர வேறுவழியில்லை.
இவ்வாறு ஜனாதிபதியின் சர்வதேச பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
பிரதம நீதியரசரை பதவியில் இருந்து
அகற்றுமாறு கோரி நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்ட குற்றப்பிரேரணை மூன்றில்
இரண்டு பெரும்பான்மையுடன் நேற்றுமுன்தினம் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் பிரதம நீதியரசரை பதவியில்
இருந்து நீக்குவதில் சட்டச் சிக்கல் காணப் படுகிறதா என்று ஜனாதிபதி மஹிந்த,
சட்டத்தரணிகள் உள்ளிட்ட பல துறைசார் நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றார்.
ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கிய அனைவரும்
பிரதம நீதியரசர் பதவியிலிருந்து ஷிராணியை நீக்குவதில் எந்தவித சிக்கலும்
இல்லை. புதிய பிரதம நீதியரசர் ஒருவரை விரைவில் நியமிக்குமாறு கோரியதாகவும்
சுட்டிக்காட்டிய மொஹான்,
எனவே தெரிவுக்குழு அறிக்கையை ஆராய்ந்து
ஆலோசனை வழங்க ஜனாதிபதிக்கு சுயாதீன குழுவொன்றை அமைக்க வேண்டிய தேவை இல்லை
என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும்,
உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் இடையில் அலரி மாளிகையில் நேற்றிரவு
கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது என்று அரச தரப்புத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
இதன்போது ஜனாதிபதி, தனது மனச்
சாட்சிக்கு அமைவாக புதிய பிரதம நீதியரசரை எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு
முன்னர் நியமிப்பேன் என்று தெரிவித்தார்.
இவ்வாறு அரச அமைச்சர்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment