Thursday, January 10, 2013

யாழில் இயங்கிவரும் ஐ.நா. கிளை நிறுவனங்களுக்கு விரைவில் மூடுவிழா

UNsrilankaயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் கிளை நிறுவனங்கள் அடுத்த வருடமளவில் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இவற்றினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பணிகளும் இவ்வருடக்காலப்பகுதிக்குள் படிப்படியாக குறைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கிளை நிறுவனங்களால் செயற்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு போதுமான நிதி கிடைக்காமை, பிரதேசத்தில் நிறுவனங்களில் செயற்பாட்டுக்கான தேவை குறைந்துள்ளமை போன்றவையே இம் முடிவுக்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.நா. அமைப்பின் கிளை நிறுவனங்களின் கண்காணிப்பின் கீழேயே பல இடங்களில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் இடம்பெற்று வருவதுடன் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
யாழில் மீளக்குடியமர்த்தும் பணிகள் முற்றுப்பெறாமல் உள்ள நிலையில் ஐ.நா. வின் கிளை நிறுவனங்கள் தமது பணியினை நிறுத்துமானால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் கிளை நிறுவனங்கள் பலவும் தங்கள் பணியாளர்களை குறைக்கக் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மத்திய தர நாடாக ஐ.நா.வினால் கணிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவும் மேற்கூறப்பட்ட முடிவுக்கான காரணமெனவும் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment