
மணிவண்ணனின் தமிழினம் மீதான பற்றுதல் 2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் அவரின் செயற்பாடுகளில் மேலும் ஓங்கி வெளிப்பட்டு நின்றது. குறிப்பாக தமிழகத்தில் பெருமளவான மக்கள் கூட்டத்தில் மேடைகளில் உரையாற்றும் வேளைகளில் தமிழர்களுக்கு ஒரு நாடு உதயமாக வேண்டும் என்பதையும், அது தமிழீழமாக மலர வேண்டும் என்பதையும், அதனை ஒவ்வொரு தமிழனும் துணிந்தெழுந்து அநீதிகளுக்கு எதிராக போராடுவதன் மூலமே அடைய முடியும் என்பதையும் ஆணித்தரமாக வெளிப்படுத்தி வந்திருந்தார்.
அண்மையில் நார்வே நாட்டிற்கு ஒரு நிகழ்வுக்கு வருகை தந்திருந்தபோது இளையோர்களாகிய எமக்கு அக்கருத்தையே முன்வைத்தார். பேரினவாத சிங்கள அரசு தமிழ் மக்கள் மீது நடத்தி வரும் இனப்படுகொலைகளை உலக நாடுகளிற்கு அம்பலப்படுத்தி அதற்கான நீதியை பெற்று கொடுப்பதற்கு புலம்பெயர் இளையோர்கள் முன்வர வேண்டும் என தெரிவித்தார்.
அதிலிருந்து தமிழீழம் மீதான அவரின் விருப்பு உயர்ந்து நிற்பதை நாம் அறிகின்றோம். பல மேடைகளில் அவரின் முழக்கப்பேச்சுக்களில் தமிழினம் விழித்துக்கொள்ள வேண்டும், எமது தேசியத்தலைவர் பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தை தொடர்ந்து ஆதரித்து குரல்கொடுத்து, அனைவரும் புலியாக மாறவேண்டும் என்ற முழக்கங்களே அதிகம் ஒலித்தது. அவரின் தமிழினப்பற்றையும்,
மொழிப்பற்றையும்,மண்பற்றையும் பார்த்து நாம் வியந்து நிற்கின்றோம். எங்கள் மனங்களில் மணிவண்ணன் என்றுமே உயர்ந்து நிற்கின்றார். இவரின் திடீர் மறைவு விடுதலையின்பால் தாகம் கொண்ட மக்களுக்கு என்றுமே பேரிழப்பாகும். நடிப்பால் தமிழ் மக்களின் மனதில் நிறைந்து, தமிழனாக வாழ்ந்து, இன உணர்வால் தன்மானத் தமிழனாய் நிமிர்ந்த ஐயா அவர்களை காலன் எம்மிடம் இருந்து பறித்துச் சென்று விட்டது.
இவரின் இழப்பால் துயருறும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு தமிழ் இளையோர் நடுவத்தினராகிய நாமும் அவர்களின் துயரில் பங்கெடுத்துக் கொள்கின்றோம். தொடர்ந்து தமிழீழம் நோக்கிய எமது பாதையில் முன்னோக்கி தடம் பதித்து விரைந்து வென்றெடுப்போம் என்று இவரின் இழப்பை சுமந்த இந்நாளில் உறுதி எடுத்துக் கொள்கிறோம். அதுவே இவருக்கு நாம் செய்யும் உண்மையான இறுதி வீரவணக்கமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment