Saturday, September 28, 2013

தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்: பகுதி 04 - நகரச் சூழலும் தமிழர் நிலையும்

பர்மிய நகரங்களில் வாழும் பெரும்பாலான தமிழர்கள் சுய தொழில் செய்பவர்களாக இருக்கின்றனர். இராணுவம், காவல்துறை போன்றவற்றில் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் சேர்க்கப்படுவது கிடையாது. ஆசிரியர்கள் போன்ற பிற அரசு வேலைகளிலும் தமிழர்கள் சொற்ப அளவிலேயே இருக்கின்றனர். விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே செல்வந்தர்களாக உயர்ந்திருக்கின்றனர்.
 



 கடந்த காலங்களில் பெரும்பாலானோர் பள்ளிப் படிப்பை கூட முழுவதுமாக முடிக்கவில்லை. நகரச் சூழலில் தற்போது வாழும் தமிழர்கள் கல்வி மீது கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் என சில தமிழர்கள் மிளிர்ந்துள்ளனர். மற்றவர்கள் பொருளாதார ரீதியாக நடுத்தர வகுப்பினராகவும், அதற்கு கீழும் இருக்கின்றனர்.
இங்கே பணத்துக்கு மதிப்பில்லை. ஒரு டாலருக்கு கிட்டத்தட்ட 950 சாக்கள் கிடைக்கிறது. பர்மா மீது பல ஆண்டுகள் சர்வதேச நாடுகள் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டிருந்ததால் வங்கி கட்டமைப்புகள் சிதைந்து போய்விட்டன. ரங்கூனில் கூட அரிதாகவே தானியங்கி பணம் வழங்கும் மையங்களைக் காண முடிகிறது.
தனிமைப்படுத்தப்பட்ட இந்த நாடு பல விதங்களில் உலகோடு இணையாமல் உள்ளது. கிலோ கிராம், லிட்டர் போன்ற அளவுமுறைகள் இன்னமும் இங்கே பயன்படுத்தப்படுவதில்லை.
அரசியல் மாற்றங்களால் அரை நூற்றாண்டுக்கு முன்பு பெரும் செல்வந்தர்களாக இருந்த தமிழர்கள் வெளியேறும்படியாகிவிட்டது. எனவே தற்போது பர்மிய நகரங்களில் இருக்கும் தமிழர்களில் பலர் முதல் தலைமுறை வியாபாரிகள். இரும்பு, பழைய தகர வியாபரம், மர வியாபாரம், உணவுக் கடைகள் போன்றவற்றில் தமிழர்களின் பங்களிப்பு அதிகம் இருக்கிறது.
தெற்காசிய நகரங்கள் போல நகரின் நடுவே இங்கே குடிசைப் பகுதிகள் இல்லை. ரங்கூனில் தமிழர்கள் மட்டுமே வசிக்கும் பகுதிகள் என்று இடங்கள் கிடையாது. ஆனால் நகரில் பல கோயிலகள் இருக்கின்றன. இதில் சில நூறாண்டுகளுக்கம் பழமையானவை. இவை தமிழர்கள் ஒன்று கூடும் இடமாக இருக்கின்றனர்.
பர்மியர்கள் சூழ வாழ்ந்தாலும் தாம் அன்னியர் என்று கருதியதேயில்லை என்கிறார் கவியரசி. பர்மியர்கள் அன்பானவர்கள் என்றும் தமது சுக துக்கங்களில் பங்கெடுப்பவர்கள் என்றும் அவர் கூறுகிறார்.
பொது வாழ்வில் ஆண்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். தமிழர்களின் முக்கிய அமைப்பான அகில மியன்மார் இந்து மாமன்றத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஆண்கள்தான். படித்த நகர்புறப் பெண்கள் கூட உரிய வேலைக்குப் போகாத சூழல் இருக்கிறது. பெண்களை வேலைக்கு அனுப்ப முன்பு பெரும் தயக்கம் இருந்தது. ஆனால் தற்போது நிலமை மாறத் துவங்கியுள்ளது.
அதே நேரம் தற்போது இளம் பெண்கள் வியாபாரத்திலும், உயர்கல்வியிலும், அரசு வேலைகளிலும் முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு நுழைய ஆரம்பித்துள்ளனர்.
source_bbctamil

No comments:

Post a Comment