Monday, October 21, 2013

கிளிநொச்சி கனகபுரத்தில் இரவோடு இரவாக இராணுவத்தினர் குவிக்கப்படுகிறார்கள் !


கிளிநொச்சி கனகபுரத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம் தற்பொழுது இராணுவ முகாமாக மாற்றப்படுகிறதா என்ற சந்தேகம் மக்களை அச்சத்தில் ஆழ்தியுள்ளது. தொடர்ந்தும் அந்தப் பகுதி பதற்றத்துடனேயே காணப்படுகின்றது என அதிர்வு இணையம் தற்போது அறிகிறது. கரைச்சிப் பிரதேச சபையில் மாவீரர் துயிலும் இல்லத்தை துப்புரவு செய்யும் தீர்மானம் அண்மையில் நிறைவேற்றப்பட்டது யாவரும் அறிந்ததே. இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் பெருமளவு இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.


இதனால் கிளிநொச்சி கனகபுரத்தில் பதற்றம் ஏற்பட்டது. மாவீரர் துயிலும் இல்லத்தை துப்புரவு செய்வதை தடுப்பதற்காக குவிக்கப்பட்ட இராணுவத்திர் அப்பகுதியில் தொடர்ந்தும் நிலை கொண்டிருப்பதல் தொடர்ந்தும் பதற்றம் நிலவுகிறது. இவர்கள் இவ்விடத்தை தமது முகாமாக மாற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் போல உள்ளது. 2009 ஆம் ஆண்டில் கிளிநொச்சியைக் கைப்பற்றிய பொழுது இலங்கை இராணுவத்தினர் தம்முடனான போரில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள், போராளிகளின் உடல்கள் புதைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லத்தை புல்டோசர்களைப் பாவித்து அழித்தனர். இதுபோல மாவீரர் துயிலும் இல்லங்களை அழிப்பது இலங்கை அரச படைகள் மேற்கொண்ட மிகவும் மனிதாபிமானற்ற செயலாக தொடர்ந்தும் கருதப்படுகிறது.

தற்பொழுது மாவீரர் துயிலும் இல்லத்தை சுற்றி முள்வேலி அமைத்துள்ளதுடன் அந்தப் பகுதியில் இராணுவத்தினர் நிலை கொள்ள தற்காலிக முகாங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு நிரந்தர படைமுகாங்கள் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தமது பிள்ளைகள் புதைக்கப்பட்ட நிலம் மட்டுமே அவர்களின் நினைவாக எஞ்சியிருப்பதாக தெரிவிக்கும் மாவீரர்களின் தாய்மார்கள் அதை அழித்த இராணுவத்தினர் தற்பொழுது அதன் மேல் முகாமிட்டிருப்பது தம்மை சொல்லணாத வதைக்கும் துயருக்கும் ஆளாக்கியிருப்பதாக தெரிவிக்கின்றனர். இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாவீரர் துயிலும் இல்லங்களை புனரமைக்கலாம் என்ற அச்சம் காரணமாக அழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில் படை முகாங்களை அமைக்கும் நடவடிக்கையில் இராணுவத்தரப்பு ஈடுபட்டுள்ளனரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

கிளிநொச்சி விசுவமடுவில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை சுற்றியும், பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கும் துயிலும் இல்லம் அமைக்கப்பட்டிருந்த இடத்தின்மேல் இராணுவத்தினர் படைமுகாம் அமைக்கக்கூடும் என்றும் மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment