Friday, October 18, 2013

புலிகளுக்கு ஏவுகணைகள் வாங்க முயன்றேன்:


விடுதலைப் புலிகளுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ஏனைய பொருட்களை வாங்குவதற்கு முயன்றதாக தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கனேடிய தமிழரான பிரதீபன் நடராஜா (வயது 37)ஏழு வருடங்களுக்கு பின்னர் ஒப்புக்கொண்டுள்ளார். இவருக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்திலேயே இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. ஒன்ராரியோ பிராம்டனை சேர்ந்த கனேடிய தமிழரான பிரதீபன் நடராஜாவே இந்த குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.


அவர் கடந்த வாரம் இந்தக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாக, நீதிமன்றப் பதிவுகளில் இருந்து இன்று தெரியவந்துள்ளது. இவருக்கு, அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி தண்டனை அறிவிக்கப்படவுள்ளது என நேற்று முந்தினம் முடிவுசெய்யப்பட்டுள்ளது என மேலும் அறியப்படுகிறது. விடுதலைப் புலிகளுக்காக, 1 மில்லியன் டொலர் பெறுமதியான அதிசக்திவாய்ந்த ஆயுதங்களை வாங்கி அனுப்ப, பிரதீபன் நடராஜாவும் ஏனையவர்களும் முயன்றதாக, குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவருடன் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட இன்னொரு கனேடியத் தமிழரான சுரேஸ் சிறீஸ்கந்தராஜா கடந்த ஜுலை மாதம் தன் மீதான குற்றசாட்டுகளை ஒப்புக்கொண்டிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்காக அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்விருவரும் கனடாவில் இருந்து, அமெரிக்காவுக்குள் சென்று ஏகே 47 ரக துப்பாக்கிகளை வாங்க முற்பட்டுள்ளார்கள். ஆனால் அங்கே இருந்த எப்.பி.ஐ உளவுப்படை, இவர்களுக்கு விமான எதிர்பு ஏவுகணைகளையும் காட்டி, அதனையும் வாங்க விரும்புகிறீர்களா என்று கேட்டுள்ளார்கள். இவ்வாறே இவர்கள் எப்.பி.ஐ யின் வலைக்குள் சிக்கினார்கள்.

No comments:

Post a Comment