உலகத் தமிழர் பேரவை தஞ்சையில் எழுப்பியிருக்கும் வரலாற்றுப் புகழ்மிக்க
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது அறிந்து மகிழ்ச்சி
அடைகிறோம்.முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தமிழர் வரலாற்றை காலமெலாம் போற்றி நிற்கும். தமிழர்களது வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்படும். ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் அது தமிழன் புகழ் பரப்பி நிற்கும்.
தஞ்சை மண் சோழப் பேரரசை நிறுவிய புகழ்பூத்த பேரரசர் இராசராச சோழன், அவரது மகன் இராசேந்திர சோழன் பிறந்த மண். இந்த இருபெரும் பேரரசர்கள் காலத்தில் இந்துப் பெருங்கடலில் சோழர்களது கடற்படைக் கப்பல்களில் புலிக்கொடி பட்டொளி வீசிப் பறந்தன.
தஞ்சை மண்ணில்தான் இராசராச பேரரசன் எழுப்பிய பெருவுடையார் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் தமிழர்களது கட்டிடகக் கலைக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் வானளாவ உயர்ந்து நிற்கிறது.
அதே மண்ணில், அதே கல்லில் கட்டிய முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் ஈழத்தமிழர்கள் படுகொலையை, அவர்கள் சிந்திய குருதியை விடுதலைக்கு அவர்கள் கொடுத்த விலையை காலமெல்லாம் பறைசாற்றி நிற்கும் என்பதில் எந்த அய்யமும் இல்லை.
அத்தோடு ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தமிழ்நாடு உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் உயிர் துறந்த இருபது ஈகையாளர்களின் கற் சிலைகளும் இந்த நினைவு முற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது அறிந்து உவகை அடைகிறோம்.
தமிழினத்தின் இந்தக் கனவு நினைவாக உழைத்த தமிழ்த் தேசிய பேரவையின் தலைவர் திரு பழ. நெடுமாறன் அவர்களுக்கும் அவருக்குத் தோள்கொடுத்த தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்கும் எமது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எதிர்வரும் நொவெம்பர் 8, 9, 10 ஆகிய நாட்களில் முத்துக்குமார் திடலில் பாலச்சந்திரன் அரங்கில் சிறப்பாக நடைபெறும் விழா வெற்றிபெற எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதில் கலந்து கொள்ளும் தலைவர்கள், தமிழறிஞர்கள், கலைஞர்கள் எல்லோருக்கும் எமது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாழ்க தமிழ்! வாழிய தமிழ்நாடு!
No comments:
Post a Comment