நவநீதம்பிள்ளையின் அறிக்கை பாரதூரமானதாக இருக்கும்!- இலங்கை மனித உரிமை ஆணையாளர்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இம்முறை கொண்டு வரும் யோசனையானது கடந்தமுறை கொண்டு வந்த யோசனையை விட பாரதூரமானது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எதிராக கொண்டு வரும் யோசனையை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ளாமல் விடுவது நாட்டுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தாது.
இந்த யோசனை மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டு ஐ.நா பாதுகாப்புச் சபை ஊடாக வெளியிடப்பட்டால், கடந்த வருடத்தில் கொண்டு வரப்பட்ட அறிக்கையினால் ஏற்பட்ட நிலைமைகளை விட பாரதூரமான நிலைமை உருவாகும்.
பாதுகாப்புச் சபை நோக்கி இந்த அறிக்கை செல்லுமானால் இலங்கையில் உள்ள வெளிநாட்டு முதலீடுகள் இடைநிறுத்தப்படுவதால், பொருளாதார தடைகள், வீசா தடைகள் என்பன இலங்கைக்கு எதிராக செயற்படுத்தப்படலாம்.
நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் இருக்கும் சில விடயங்கள் அரசாங்கத்தினால் செயற்படுத்தக் கூடிய மட்டத்தில் இருக்குமாயின் அது தொடர்பான விடயங்களை நாடாளுமன்றத்தில் சட்டமூலம் ஊடாக நிறைவேற்றி நாடாளுமன்றத்தில் அமுல்படுத்தப்பட வேண்டும்.
இந்த நிலையில், மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தொடர்பான சவால்களை எதிர்கொள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் அமுல்படுத்தியுள்ள பரிந்துரைகள் தொடர்பிலான முழுமையான அறிக்கை மற்றும் காணொளிகளை உறுப்பு நாடுகளுக்கு வழங்க வேண்டும்.
அத்துடன் உறுப்பு நாடுகளுக்கு இலங்கை தூதரகங்கள் மூலமாக அது பற்றி தெளிவுபடுத்த வேண்டும்.
இலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுக்களை தவிர்ப்பதற்காக தென் ஆபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்து முன் அனுபவங்களை பெறுவது மட்டுமல்லாது மனித உரிமை ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் ஆதரவை பெற இறுதிவரை அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.