சிறிலங்காவில்
மேற்கொள்ளப்படவுள்ள சர்வதேச விசாரணைக்குத் தேவையான நிதியைப் பெற்றுக்
கொள்வதில் ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை வெற்றி பெற்றுள்ளதாக,
கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது. சிறிலங்காவை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துக்குள் பிரச்சினைகள் அதிகரித்துள்ள நிலையில், போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.
இந்தவாரம், இந்த முயற்சிகளில் மற்றொருபடி முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இந்த விசாரணைகளுக்குத் தேவையான நிதியை, தீர்மானத்துக்கு ஆதரவளித்த நாடுகளிடம் இருந்து பெற்றுக்கொள்வதில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்தநிலையில், இம்மாத இறுதியில், இந்த விசாரணைக்குழுவை அமைப்பது குறித்து, சிறிலங்கா அரசாங்கத்துக்கு அவர் ஜெனிவாவில் உள்ள வதிவிடப் பிரதிநிதி மூலம் தெரியப்படுத்தவுள்ளார்.
அதையடுத்து, அனைத்துலக விசாரணைப் பொறிமுறையின் உருவாக்கம் மற்றும் அதற்கான நிபந்தனைகள் பகிரங்கப்படுத்தப்படவுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment