கடந்த வாரம் மன்னாரில் இருந்து படகு மூலம் தமிழகம் சென்று அங்கு தஞ்சம்
கோரியுள்ள குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியரை சர்வதேச பொலிஸ் (இன்ரபோல்)
உதவியுடன் கைது செய்து இலங்கைக்குக் கொண்டு வரும் நடவடிக்கையின்
முதற்கட்டமாக இந்த விடயம் தொடர்பாக சாவகச்சேரி நீதிமன்றத்தினால் நீதி
அமைச்சின் செயலாளருக்குத் தெரியப்படுத்தும் நடவடிக்கை
எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. கடந்த வாரம் படகு மூலம் தமிழகம்
சென்று தஞ்சம் கோரியுள்ள குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியினரையே கைது செய்து
இங்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
வன்னிப் பகுதியிலிருந்து படையினரின் அச்சுறுத்தல் காரணமாக தப்பி வந்தனர் எனத் தெரிவித்து தமிழ்நாட்டில் தஞ்சம் கோரியுள்ள கதிரவேலு தயாபரராஜா மற்றும் அவரது மனைவியான உதயகலா தயாபரராஜா ஆகியோரை கைது செய்து நீதிமன்றில் முன்நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறே கோரப்பட்டுள்ளது. இத்தம்பதியினர் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல்வேறு இடங்களில் மோசடிகளை மேற்கொண்டு பல மில்லியன் ரூபாவைச் சுருட்டினர் எனப் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனயடுத்து தமிழ்நாடு, இராமநாதபுரம் பொலிஸ் காவலில் உள்ள இந்தக் குடும்பத்தை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நீதி அமைச்சின் செயலாளரை சாவகச்சேரி நீதிவான் கோரியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தம்பதியருக்கு எதிராக வடக்கு மாவட்ட நீதிமன்றங்களில் 11 வழக்குகள் பதிவாகி அவ் வழக்குகள் தொடர்பாக அவர்கள் தேடப்பட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
சாவகச்சேரிப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வவுனியாவில் படையினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதை அறிந்த இத் தம்பதியினர் குறித்த இளைஞரின் குடும்பத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பத்து லட்சம் ரூபா பணத்துடன் கொழும்புக்கு வந்தால் அந்த இளைஞரை மீட்டுத் தரமுடியும் என்று கூறியிருக்கின்றனர். அதனை நம்பி அந்த இளைஞரின் குடும்பத்தவர்கள் மூவர் கொழும்புக்கு புறப்பட்டிருக்கின்றனர்.
வெளிநாட்டில் உறவுகளைக் கொண்ட இந்த மூவரையும் தொலைபேசியில் தொடர்புகொண்ட மேற்படி தம்பதியர், அவர்களை கொழும்புக் கோட்டை ரயில் நிலையத்துக்கு வந்து ஓட்டோ ஒன்றில் அழைத்துச் சென்றனர். தெரியாத இடம் ஒன்றுக்கு அவர்களை அழைத்துச் சென்ற அத்தம்பதியினர் அந்த மூவரின் வீட்டுக்காரர்களோடு தொடர்புகொண்டு இந்த மூவரையும் விடுவிப்பதாயின் முப்பது லட்சம் ரூபா கப்பம் தரப்படவேண்டும் என்று அச்சுறுத்தினராம்.
ஒருவாறு வெளிநாட்டில் உள்ள உறவுகள் மூலம் 28 லட்சம் ரூபா பணத்தைச் செலுத்தி தம்மை விடுவித்துக் கொண்ட மூவரும், சாவகச்சேரிக்கு வந்து அது குறித்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர் என்றும் கூறப்படுகின்றது. இந்த விடயம் குறித்து சாவகச்சேரி பொலிஸ் நிலையப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து 2013 ஆம் ஆண்டு நீர்கொழும்பைச் சேர்ந்த இன்னொரு ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவத்திற்கு தற்போது தமிழ்நாட்டுக்கு தப்பியோடிய தம்பதியர் இருவருமே பொறுப்பு என்பது அந்த விசாரணைகளில் தெரிய வந்ததாம். அதன் பின்னர் அந்தத் தம்பியர் கைது செய்யப்பட்டு , சாவகச்சேரி நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு, அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இப்போது இத்தம்பதியர் தமிழ்நாட்டுக்குத் தப்பிச் சென்று, அங்கு அதிகளாகத் தஞ்சம் கோரியமை தொடர்பில் ஊடகங்களில் படங்கள் வெளியாகின. அதைப் பார்த்த - அவர்களினால் பாதிக்கப்பட்ட - சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் அது குறித்து சாவகச்சேரி பொலிஸாரிடம் முறையிட்டுத் தகவல் தெரிவித்தனர். அதனையடுத்தே சாவகச்சேரிப் பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்து, அந்தத் தம்பதியினரை சர்வதேச பொலிஸ் மூலம் இலங்கைக்குக் கொண்டு வரும் நடவடிக்கையை ஆரம்பித்திருக்கின்றனர் என்று கூறப்பட்டது.
No comments:
Post a Comment