இலங்கையின் போர் வெற்றி கொண்டாடப்படுவது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலான
விடயம் என்று நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சிறப்புத்தூதர் எரிக்
சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைக்
குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சமதானத்துக்காக கொண்டாட்டங்களுக்காக காரணம்
இருக்கிறது. இதன்மூலம் வாழ்க்கையை கட்டியெழுப்ப முடியும். எனினும் போர்
வெற்றியால் வாழ்க்கையை கட்டியெழுப்ப முடியாது.
இலங்கையில் போர் நிறைவடைந்து 5 வருடங்களாகியும் இன்னும் சிறுபான்மையினரின் சமய வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. தமிழர்களுக்கான அபிலாசைகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார். ரணிலின் ஆட்சியிலும் சந்திரிக்காவின் ஆட்சியிலும் சமாதானத்துக்காக முழுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சமாதானம் என்பது இலகுவாக கிடைப்பதில்லை. எனினும் இன்னும் அதற்காக முழுமையான பங்களிப்பை வழங்கினால் வெற்றிப்பெறலாம் என்று சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
2006 ஆம் ஆண்டு அன்டன் பாலசிங்கம் இறந்த பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க யாரும் இல்லை. இதன்காரணமாக அவரால், இலங்கைக்கு அப்பால் உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை. அதன்காரணமாக பாரிய அரசியல் மற்றும் போரியல் தவறுகள் இடம்பெற்றன.
இவையாவும் தனி ஒருவர் ஒரு இயக்கத்திலோ அல்லது அரசாங்கத்திலோ முடிவை மேற்கொள்கின்றபோது அது ஆபத்திலேயே முடியும் என்பதை உணர்த்துகிறது என்றும் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் புலம்பெயர்ந்த தமிழர்களை தடை செய்தமையானது தீவிரவாதிகளுடன் ஏனைய தமிழர்களையும் ஒன்றாக கருதுவதை காட்டுகிறது.
இது அனைத்து தமிழர்களையும் பயம் கொள்ளவைக்கும் செயற்பாடாகும். இந்தியாவை பொறுத்தவரை ராஜீவ் காந்தியின் பின்னர் வலுவான செயற்பாடு இலங்கை இனப்பிரச்சினை தீர்வில் இல்லை. இந்தநிலையில் நரேந்திர மோடியின் செயற்பாடு குறித்து முன்னதாகவே கருத்துக்கூற முடியாது.
சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக இலங்கையின் சமாதானத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது. எனினும் இது உண்மைக்கு புறம்பானது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டமையை யாரும் மறக்கமுடியாது. இந்தநிலையில் அரசாங்கம் ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பிரச்சினையை தீர்க்கமுடியாது.
அத்துடன் மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்தவும் ஜனநாயக்கத்தை நிலைநாட்டவும் அரசாங்கத்துக்கு ஏன் இயலாமல் போனது என்றும் சொல்ஹெய்ம் கேள்வி எழுப்பினார்.
No comments:
Post a Comment