Thursday, May 08, 2014

சிறிலங்கா குறித்த ஐ.நா விசாரணைப் பொறிமுறை தாமதம் – தீர்மானம் கொண்டு வந்த நாடுகள் கவலை

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த ஐ.நா விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம், இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்த நாடுகள் சிலவற்றுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்க, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகம் மூலம் விசாரணை நடத்த ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், கடந்த மார்ச் 27ம் நாள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆறு வாரங்கள் நிறைவடைந்துள்ள போதிலும், விசாரணைப் பொறிமுறை இன்னமும் உருவாக்கப்படவில்லை.

இந்த அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளில், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.


எனினும், இந்த அனைத்துலக விசாரணைக்கான முறைப்படியான அறிவிப்பு, இம்மாத இறுதிக்கு முன்னதாக வெளியாகும் என்று எதிர்பார்க்க முடியவில்லை என்று ஜெனிவாவில் உள்ள இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

விசாரணைப் பொறிமுறை உருவாக்கம் தாமதமாகி வருவது, ஜெனிவாவில் தீரமானத்தை முன்வைத்த சில நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணைப் பொறிமுறை உருவாக்கம் தாமதமாவதால், அதன் பணிக்காலம், நீடிக்கப்படக் கூடும் என்றும் அந்த நாடுகள் கவலை கொண்டுள்ளன.

அதேவேளை, நவநீதம்பிள்ளை வரும் ஜுலை மாதம் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக, விடுப்பில் செல்லக் கூடும் என்பதால், அதற்கு முன்னதாக இந்த விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்பட்டு செயற்படத் தொடங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அவர் கூறியுள்ளதாக, ஜெனிவாவில் உள்ள இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியக குடும்பத்துடன், நவநீதம்பிள்ளை தற்போது கலந்துரையாடி வருவதாகவும், தமக்கு இரண்டு குறிக்கோள்கள் உள்ளன என்று அவர் கூறியுள்ளதாகவும், இராஜதந்திரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

முதலாவது, சிறிலங்கா அரசின் ஒத்துழைப்பை பெறுவது என்றும் இரண்டாவது வெளிப்படையான செயல்முறை என்றும் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.source:pp

No comments:

Post a Comment