Tuesday, May 06, 2014

ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காததற்கு வெளியில் கூறமுடியாத பல காரணங்கள் உள்ளன – துணைத் தூதர் மகாலிங்கம்


வடக்கு மாகாணத்தில் ஒரு முதலமைச்சர் இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் இந்தியா தான் என்பதை மறந்து விடக் கூடாது என்று யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் வி.மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பணியை முடித்து மாற்றலாகிச் செல்லும் துணைத் தூதுவர் வி.மகாலிங்கத்துக்கு நேற்று யாழ் நகரில் பிரிவுபசார நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டது.

அங்கு உரையாற்றிய அவர்,

வடமாகாணத்தில் ஒரு முதலமைச்சர் இருக்கிறார். அமைச்சர்கள் இருக்கிறார்கள்.

உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் பிரமுகர்கள் வடமாகாணத்தை ஆளுமை செய்கின்றார்கள் என்றால் அதற்கு காரணம் இந்தியா தான் என்பதையும் நீங்கள் மறுக்க முடியாது.

தமிழ் மக்களின் ஆதங்கத்தின் அடிப்படையில்தான் இந்தியா 1987 ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படையை இங்கே அனுப்பியது.

இந்தியப்படை இங்கே வரும்போது அதற்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்தது என்பதையும் இந்திய அமைதிப்படை வந்த மூன்று மாத காலப்பகுதியில் இங்கே என்ன நடந்தது என்பதையும் நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டும் என்றில்லை.

இந்திய அமைதிப்படை என்ன தீர்வு காண வந்தார்களோ அதை நடக்க விடாமல் செய்ததற்கு இந்திய அமைதிப்படையோ இந்திய அரசாங்கமோ காரணம் அல்ல என்பதையும் நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

வடக்கு மாகாண தேர்தலை நடத்த வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்தை இந்திய அரசாங்கமே நிர்ப்பந்தித்தது.

இந்தியாவில் சென்று தான் வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான திகதியையும் குறித்தார்கள்.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட மூன்றாவது தீர்மானத்தை இந்தியா புறக்கணித்ததற்குப் பல காரணங்கள் உள்ளன.

அவை எல்லாவற்றையும் இங்கு வெளிப்படையாகச் சொல்ல முடியாது.

இருந்தும், வெளிப்படையாக சொல்ல கூடியதை சொல்கிறேன்.

ஒரு நாட்டுக்கு, வெளியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுவதை இந்திய வெளியுறவு கொள்கை ஒருபோதும் ஒத்துக் கொள்ளாது.

ஆகவே தான் இந்தியா அவ்வாறான சந்தர்ப்பம் வரக்கூடாது என்று தீர்மானத்தைப் புறக்கணித்தது.

அவ்வாறு புறக்கணித்ததன் காரணமாகத்தான், சிறிலங்கா அரசாங்கத்துடன் இந்தியா உட்கார்ந்து பேச முடிகிறது.

இந்தியாவும் மற்ற நாடுகளுடன் சேர்ந்து மூன்றாவது தீர்மானத்தை ஆதரித்திருந்தால், இந்தியா கண்டிப்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் பேசி தமிழர்களுக்கு தீர்வு வழங்கக் கூடிய சந்தர்ப்பத்தை இழந்திருக்கும்.

ஆகவேதான் இந்தியா புறக்கணிக்கும் முடிவை எடுக்க வேண்டி வந்தது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment