மதிமுக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
டெல்லியில் உள்ள குஜராத் பவனத்தில் நேற்று நரேந்திர மோடியை மதிமுக
பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார். அவருடன் கணேசமூர்த்தி உடன்
இருந்தார்.
இந்த சந்திப்பின்போது, நரேந்திர மோடியிடம் வைகோ கூறியதாவது:-
உலகத்தின் அனைத்து ஜனநாயக நாடுகளும் உங்கள் பதவி ஏற்பு விழாவை ஆவலோடு
எதிர்பார்க்கின்றன. உயர்ந்த சிகரங்களை நோக்கி இந்தியாவை இட்டுச்
செல்வீர்கள் என்று நானும் எதிர்பார்த்து இருக்கின்றேன். ஆனால், சிங்கள
அதிபர் ராஜபக்சேவுக்கு இந்திய அரசு அழைப்பு விடுத்தது, பேரிடியாகத் தாக்கி,
எங்கள் இதயங்களைச் சுக்கல் சுக்கலாக்கிவிட்டது.

டெல்லியில் பிரதமரை சந்திக்க ராஜபக்சே வருவதாக அறிவித்தபோது, டெல்லியில்
கறுப்பு கொடி போராட்டம் நடத்தி கைதானவன். எங்கள் போராட்டத்தால்,
ராஜபக்சேவின் டெல்லி வருகை ரத்து செய்யப்பட்டது. ராஜபக்சே திருப்பதிக்கு
போனார். அங்கும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் எதிர்த்து போராடி
கைதானார்கள்.
உங்களுக்கு பக்கபலமாக, உங்கள் அரசுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்று
விரும்புகிறேன். எந்த பதவியையும் எதிர்பார்க்கவில்லை. கோடானுகோடி தமிழர்கள்
சார்பில் மன்றாடிக் கேட்கிறேன். நீங்கள் உறுதியான முடிவுகளை துணிந்து
எடுக்கக்கூடியவர். இந்த பிரச்சனையிலும் அப்படி முடிவு எடுங்கள். கொலைகார
ராஜபக்சே வருகையை தவிர்த்துவிடுங்கள். உங்கள் பதவி ஏற்பு விழா கோலாகலமாக
நடக்கட்டும். இன்று இரவுக்குள் ஒரு நல்ல முடிவு எடுங்கள்.
No comments:
Post a Comment