ஐரோப்பிய ஒன்றியத்தினால் பயங்கரவாத அமைப்பாக கருதப்படும் அமைப்புக்களின் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சேர்க்கப்பட்டிருந்த முடிவை இரத்து செய்து லக்ஸம்பேர்க்கிலுள்ள ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்று வியாழக்கிழமை லக்சம்பேர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய நீதிமன்றினால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது புலம் பெயர் ஈழத் தமிழர்கள் சட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு கிடைத்த ஒரு வெற்றியாகும்.
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என்ற அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் குறிப்பிட்ட சில நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக இயக்கப்படும் குறிப்பிட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பொருத்தமற்றவை எனவும் அவற்றை ரத்து செய்யவும் ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விடுதலை புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்படுவதில் கையாளப்பட்டிருந்த நடைமுறையில் தவறுகள் இருக்கின்ற காரணத்தால், இந்த முடிவை எடுத்துள்ளதாக ஐரோப்பிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு என்று இந்தியாவில் அறிவிக்கப்பட்டிருந்த முடிவின் அடிப்படையில் ஐரோப்பிய ஆணையகத்தில் முடிவெடுத்திருந்ததாகவும், அது முறையல்ல என்றும் நீதிமன்றும் குறிப்பிட்டுள்ளது.
மூன்று மாதங்களின் பின்னர் இத்தீர்ப்பின் முடிவு நடைமுறைக்கு வரும் எனவும் கட்டுபாடுகள் அவசியம் என்றால் இரண்டு மாதங்களும் 10 நாட்களுக்குள் ஆலோசனைகளை வழங்கலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்குவதா, வைத்திருப்பதா என்பது குறித்து ஐரோப்பிய கவுன்சில் இரண்டு மாதங்களில் முடிவெடுக்க வேண்டும். அவ்வாறு முடிவு எடுக்கும் வரை, பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பெயர் நீக்கப்படாது' என்பதே நீதிமன்ற உத்தரவின் முக்கிய அம்சங்கள் ஆகும்.
இவ் வழக்கு விசாரணை தொடர்பான புலிகளின் செலவு உட்பட அனைத்து செலவுகளையும் ஐரோப்பிய ஒன்றியமே பொறுப்பெடுக்க வேண்டும் எனவும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவாக இருந்த நெதர்லாந்து, இங்கிலாந்து, மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழு தமது சொந்தச் செலவுகளை ஏற்க வேண்டும் எனவும் ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ரத்து செய்திருந்தாலும், பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்படவில்லை என்பது இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.
லதன் சுந்தரலிங்கம் என்பவர் ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து 2011-ல் லக்சம்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் சார்பாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் விக்டர் கோப் முன்னிலையாகி வாதாடி வந்தார் என்பது நினைவூட்டத்தக்கது.
தீர்ப்பு ஆங்கிலத்தில் இருக்கின்றது முழுமையான விபரங்களை PDF வடித்தில் இருக்கின்றது. கீழ்வரும் இணைப்பை அழுத்திப் பார்க்கலாம்.
இணைப்பு 1
இணைப்பு 2
source:pathivu
No comments:
Post a Comment