Friday, January 02, 2015

நேற்று அரசதரப்பின் பரப்புரை மேடைகள் அனைத்திலும், திரு. பிரபாகரன் விவகாரமே!

யாழ்ப்பாணத்தில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை, “திரு.பிரபாகரன்” (மிஸ்டர் பிரபாகரன்) என்று குறிப்பிட்டது, அரசதரப்புக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து, நேற்றுமுன்தினம் அரச தொலைக்காட்சி செவ்வி ஒன்றில், பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கடுமையாக விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

தீவிரவாதியான பிரபாகரனை மரியாதையோடு, திரு.பிரபாகரன் என்று சந்திரிகா கூறியிருப்பதாகவும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை, சாதாரணமாக, மகிந்த ராஜபக்ச என்றே குறிப்பிட்டதாகவும், அவர் விசனத்தை வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில், நேற்று அரசதரப்பின் பரப்புரை மேடைகள் அனைத்திலும், திரு. பிரபாகரன் விவகாரமே, முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தொடக்கம், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், திரு.பிரபாகரன் விவகாரத்தை வைத்து, சந்திரிகா குமாரதுங்கவையும், எதிரணியினரையும், கடுமையாகத் தாக்கி விமர்சனங்களைச் செய்தனர்.

கண்டியில் நேற்று நடந்த பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, சந்திரிகாவின் இந்த உரைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

தன்னை மரியாதையோடு அழைக்காமல் வெறுமனே மகிந்த ராஜபக்ச என்று குறிப்பிட்டதாகவும், ஆனால் புலிகளின் தலைவர் பிரபாகரனை மரியாதையாக, திரு.பிரபாகரன் என்று கூறியதாகவும், அவர் விசனத்தை வெளியிட்டார்.

அதேவேளை, கொழும்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பிலும், அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்த விவகாரம் குறித்து, சந்திரிகாவை கடுமையாக விமர்சித்தார்.

சந்திரிகாவின் யாழ்ப்பாண உரை ஒட்டுமொத்த நாட்டையுமே அவமானப்படுத்தி விட்டதாக அவர் கூறினார்.

“போரின் 75 சதவீதத்தை முடித்து வைத்தது தானே என்று கூறித் திரியும் சந்திரிகா,  தீவிரவாத தலைவரை, திரு.பிரபாகரன் என்று, மரியாதையாக அழைத்திருக்கிறார்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சர்வாதிகாரி என்று கூறிவிட்டு, தீவிரவாத தலைவரை திரு.பிரபாகரன் என்று மரியாதை கொடுத்திருக்கிறார்.” என்றும் அவர் விசனம் வெளியிட்டார்.

கடந்த 30ம் நாள், யாழ்ப்பாணத்தில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே, சந்திரிகா குமாரதுங்க, தாம் விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.பிரபாகரனுடன் பேச்சு நடத்த முயன்றதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.source:pathivu

No comments:

Post a Comment