
வார்த்தைக்கு வார்த்தை அதிருப்தி தெரிகிறது... ஒரு ஹிட் படத்துக்கு
காத்திருப்பதால்தான் இந்த கோபமா....?
சந்தோஷங்களைப் பகிர்ந்து கொள்வது போலவே நம்முடைய சங்கடங்களையும் பேசி விட்டால் நல்லது. "இந்தியாவில் இருந்து வர்றேன்' என்று சொன்னால், "ஓ... ஹிந்தி
மூவியா?' என்றுதான் கேட்கிறார்கள். இந்திய சினிமா என்றாலே அது ஹிந்தி சினிமா என நினைக்கிற நிலைமைதான் இன்னும் இருக்கிறது. நம்ம சென்னை அளவு கூட இல்லாத சின்ன சின்ன நாடுகள் கூட தனது மொழியையும், கலாசாரத்தையும் கலைகளையும் முன் வைக்கும் போது, வளமையான வாழ்க்கை இருக்கிற நம் மக்களின் மேன்மையைச் சொல்ல முடியாத சூழல்தான் இங்கே உள்ளது. தமிழ் சினிமாவில் இப்போது ஒரு நல்ல கதை சொல்வதே பாவம் மாதிரி ஆகி விட்டது. நல்ல படம் எடுத்து தோற்ற படைப்பாளிக்கு அடுத்த படத்தில் கை கொடுக்க யாருமில்லை. ஒரு கமர்ஷியல் படம் எடுத்து ஜெயித்தால், அந்த இயக்குநருக்கு கார், பங்களா என பரிசு கொடுக்கும் அவலம் இங்கேதான் உள்ளது.
நீங்க யாரை குறை சொல்றீங்க...?
கண்களில் கனவையும், நெஞ்சில் நம்பிக்கையும் சுமந்து சென்னைக்கு வந்தேன் பாருங்க... அங்கேதான் இன்னும் காத்துக் கொண்டே இருக்கிறேன். "உளவுத்துறை' வந்த போது, ""இந்திய சினிமாவுக்கு இது முயற்சி'' என வார்த்தைகளோடு நிறுத்தி விட்டார்கள். "ஜனனம்' படத்தில் மாற்று சினிமாவுக்கான எல்லா முயற்சிகளும் இருந்தன. மேடைகளில் சில கைதட்டல் சத்தங்களோடு அதுவும் காற்றில் கலந்தது. "கலவரம்' படம் வந்ததே பலருக்குத் தெரியாது. "தலைவன்' படத்தில் இருந்த அரசியல் உங்களுக்கே தெரியும். இப்படி என் முயற்சிகள் எதையும் அடையாமல் காத்திருக்கின்றன. இப்போதும் தமிழ் சினிமா மாறும் என்றுதான் காத்திருக்கிறேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் சில நேரங்களில் சினிமா எடுக்கவே பிடிக்கவில்லை. மனசில் சுமந்த கதையை ஒரு தயாரிப்பாளரை அணுகி சொன்னால், இதுவரைக்கும் யாரும் போகாத நாட்டுக்கு போய் டூயட் வையுங்கள். எரிமலை பக்கத்தில் நின்று ஹீரோவை வசனம் பேச வையுங்கள். அப்படியே ஹீரோயினை பனி மலைக்கு அருகில் நிறுத்தி காதல் காட்சி எடுங்கள். இப்படி கதையை அவர்களே தீர்மானிக்கிறார்கள். காமெடி, பேய் கதைகளைத் தவிர வேறு எந்தப் படங்களிலும் நடிக்க ஹீரோக்களும் இப்போது
தயாரில்லை.
சினிமாவுக்கு வியாபாரம்தானே முக்கியம்... வித்தியாசமான முயற்சிகள் தோற்கும் போது, மீண்டும் அப்படிப்பட்ட முயற்சிகளிலேயே இருந்தால் எப்படி...?
லாப விகிதம் அதிகமாக எதிர்பார்க்கப்படுவதுதான் இங்கே பிரச்னை. சில கோடிகள் போட்டு, பல கோடிகள் எடுக்க வேண்டும். நல்ல படங்களைப் பார்க்க ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள். கொடுக்கக்தான் தயாரிப்பாளர்கள் இல்லை. சீனியர் இயக்குநர்களும் தங்களது எல்லைகளை விட்டு வெளியே வருவது இல்லை. இவ்வளவு பயந்து இருந்தால் ஸ்ரீதர், பாலுமகேந்திரா, பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன் மாதிரியான ஆளுமைகள் கிடைத்திருப்பார்களா? சீனியர் இயக்குநர்கள் வெளியே வந்தால்தான் இந்த நிலைமை மாறும். அடுத்து கிராமத்தில் இருந்து புறப்படுகிற ஓர் இளைஞனுக்கு இப்போதுள்ள சினிமா எந்த நம்பிக்கையைக் கொடுக்கப் போகிறது?
சரி, உங்கள் சினிமாவுக்கு வருவோம்... "வஜ்ரம்' எப்படிப்பட்ட படம்...?
அடுத்தடுத்த தலைமுறைகளை உருவாக்கும் கல்வி, முதலாளிகளின் கையில் சிக்கி கிடக்கிறது. கோத்தகிரி பக்கம் மலை வாழ் மக்களின் பிள்ளைகள் இன்னும் பள்ளிக்கூடத்துக்கே போகவில்லை. ஏன் போகவில்லை என்றால், ""அரசுப் பள்ளிக்கு 10 கிலோ மீட்டர் நடந்து போக வேண்டும்'' என்கிறார்கள். இந்த பாதிப்பில் உருவானதுதான் இந்தக் கதை. கல்வி தொடர்ந்து தனியார்மயமாகி விட்டால், வருங்காலம் என்ன ஆகும்? என்கிற பிரச்னையை இந்தக் கதை முன்னெடுக்கும். "கோலிசோடா' பசங்களை அப்படியே இந்தக் கதைக்குள் பொருத்தி எடுத்து வந்திருக்கிறேன். தம்பி ராமையா மாதிரியான நடிகர்கள் இதற்கு
இன்னும் பலம்.
- ஜி.அசோக்
source:
No comments:
Post a Comment