Friday, April 17, 2015

20 தமிழர் கொலை: தப்பிவந்தவர் பரபரப்பு பேட்டி !



திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் செம்மர கட்டைகளை கடத்தியதாக 20 தமிழர்களை ஆந்திரா போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் திட்டமிட்ட படுகொலை என்பதற்கு அவர்களிடம் இருந்து தப்பி வந்த சேகர், பாலச்சந்தர், இளங்கோ ஆகிய 3 பேர் முக்கிய சாட்சிகளாக உள்ளனர். வேலூரில் உண்மை கண்டறியும் குழுவினருடன் 3 பேரும் வந்தனர். ஆந்திர போலீசாரிடம் இருந்து தப்பியது குறித்து அவர்கள் கூறியதாவது:–

சேகர்:– சம்பவம் நடப்பதற்கு ஒரு நாளுக்கு முன்பாக எங்கள் பகுதியை சேர்ந்த 7 பேருடன் வேலைக்கு பஸ்சில் புறப்பட்டு சென்றோம். அவர்கள் 7 பேரும் கடைசி சீட்டில் ஒன்றாக அமர்ந்திருந்தார்கள். நான் முன்பக்கம் உள்ள சீட்டில் ஒரு பெண் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். நகரி அருகே பஸ் சென்ற போது ஆந்திர போலீசார் பஸ்சை மடக்கினர். கடைசி சீட்டில் இருந்த 7 பேரையும் பிடித்து கீழே இறக்கினர். நான் பயத்தில் அருகில் இருந்த பெண் மறைவில் ஒளிந்து கொண்டேன். அந்த பெண்ணும் எனக்கு உதவி செய்தார். 7 பேரையும் போலீசார் பிடித்து சென்று விட்டனர். அடுத்த நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து இறங்கி ஊருக்கு புறப்பட்டு வந்தேன். இங்கே வந்த பிறகு என்னுடன் பஸ்சில் வந்த 7 பேரும் சுட்டு கொன்று விட்டதாக செய்தி வெளியானது. எந்த தவறும் செய்யாதவர்களை கொன்று விட்டதை எண்ணி மனம் உடைந்தேன். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். அவர்கள் உடல் ஊருக்கு வந்த போதுதான் வீட்டுக்கு வந்தேன் என்றார்.
பாலச்சந்தர்:– நான் என் நண்பர்களுடன் மேஸ்திரி வேலைக்கு ஆந்திரா புறப்பட்டு சென்றேன். பஸ் தமிழக எல்லையை அடைந்த போது மது வாங்குவதற்காக பஸ்சில் இருந்து இறங்கினேன். நான் வாங்கி வருவதற்குள் பஸ் புறப்பட்டு சென்று விட்டது. என்னுடன் வந்தவர்களை தொடர்பு கொண்டேன். அவர்கள் திருப்பதி வந்து போனில் தொடர்பு கொள்ளுமாறு கூறினார்கள். நான் வேறு பஸ்சில் ஏறி திருப்பதி சென்றேன். அங்கிருந்து உடன் வந்தவர்களை தொடர்பு கொண்டேன். அப்போது பஸ்சில் வந்த எங்களை ஆந்திர போலீசார் பிடித்து வைத்துள்ளனர். இங்கு வரவேண்டாம் என்றனர். உடனே ஊருக்கு புறப்பட்டு வந்து விட்டேன். மறுநாள் அவர்கள் சுட்டு கொல்லப்பட்ட தகவல் அறிந்து வேதனை அடைந்தேன்.
இளங்கோ:– துப்பாக்கி சூடு நடப்பதற்கு முன்பு இரவில் நகரியில் உள்ள ஒரு பானிபூரி கடையில் நானும் எனது நண்பர் பன்னீர்செல்வம் (துப்பாக்கி சூட்டில் பலியானவர்) இருவரும் பானிபூரி சாப்பிட்டோம். அங்கு ஆந்திர போலீசார் 2 பேர் நின்றிருந்தனர். பானிபூரி சாப்பிட்டு முடிந்ததும் ஒரு ஆட்டோவில் ஏறி புறப்பட்டோம். ஆட்டோ சிறிது தூரம் செல்வதற்குள் காரில் வந்த ஆந்திர போலீசார் எங்களை மடக்கி பிடித்தனர். ஒரு மினி லாரியில் எங்களை ஏற்றினார்கள். அதில் 15–க்கும் மேற்பட்டோர் இருந்தனர். லாரி திருப்பதி காட்டு பகுதிக்குள் சென்றது. சுமார் 1 மணி நேர காட்டு பயணத்துக்கு பிறகு ஒரு வனச்சரக வளாகம் வந்தது. அங்கு பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட லாரி, கார் போன்ற வாகனங்கள் நின்றன. தொழிலாளர்களுடன் லாரியில் இருந்த நான் இருட்டை பயன்படுத்தி நைசாக கீழே இறங்கினேன்.
மெதுவாக பதுங்கி காம்பவுண்ட் சுவர் அருகே சென்று ஏறி குதித்தேன். பின்னர் காட்டு பகுதியை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தேன். அடர்ந்த காடு என்பதால் திக்கு திசை தெரியவில்லை. இதனால் 3 மணி நேரம் ஒரு மரத்தடியில் பதுங்கியிருந்தேன். அதிகாலையில் லேசாக வெளிச்சம் தெரிந்தது. அதனை பயன்படுத்தி நடக்க ஆரம்பித்தேன். திக்கு திசை தெரியாமல் வேகமாக நடந்தேன். ஒரு கட்டத்தில் திருப்பதி நகர் கண்ணுக்கு தெரிந்தது. அதன்பின் வேகமாக ஒடிவந்தேன். அங்கிருந்த பாதைவழியாக திருப்பதி மலை அடிவாரத்தை அடைந்தேன். பின்னர் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு திருப்பதி பஸ் நிலையம் வந்தேன்.
அங்கிருந்து வேலூருக்கு வந்த பின்னர் அமிர்தி வந்தேன். இங்கு வந்த பிறகு செம்மரம் வெட்டி கடத்திய தமிழக தொழிலாளர்கள் சுட்டு கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. வேறு யாரையோ கொன்றிருப்பார்கள் என நினைத்தேன். ஆனால் என்னுடன் வந்த பன்னீர்செல்வம் பிணமான தகவல் அறிந்த பின்பு தாங்க முடியாத துயரத்தில் தள்ளப்பட்டேன். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment