Tuesday, April 21, 2015

யுத்தத்தின்போது தமிழக எதிர்ப்பு எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது என்பது குறித்து கோத்தா விளக்கம் !

யுத்தத்தின்போது தமிழகத்திலிருந்து எழக்கூடிய எதிர்ப்பினை எவ்வாறு இலங்கை அரசாங்கம் எதிர்கொண்டது என்பதனை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆங்கில வார இதழொன்றிற்கு கருத்து தெரிவிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது. இராணுவத்தை பொறுத்தவரை அதன் வலுவே மிகமுக்கியமான விடயமாக காணப்பட்டது. எந்த அரசாங்கமும் இதனை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கவில்லை.
யுத்தத்தை வெல்லவேண்டும் என்றால் படையினரின் எண்ணிக்கையை மும்மடங்காக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் நான் தெரிவித்தேன். திறைசேரி பல பிரச்சினைகளை எதிர்கொண்டபோதிலும் இதனை செய்தே ஆகவேண்டும் என ஜனாதிபதியிடம் தெரிவித்தேன். நாங்கள் பெருமளவு பணத்தை செலவிடவேண்டியிருக்கும் ஆனால் இதனை செய்யாத பட்சத்தில் நாங்கள் வெற்றிபெற முடியாது என்பதை அவரிற்கு காண்பித்தேன். ஆதனை செய்திராவிட்டால் நாங்கள் எந்த தந்திரோபாயத்தை
பயன்படுத்தியிருந்தாலும் அது வெற்றியளித்திருக்காது.
மேலும் இராஜதந்திர ரீதியில் இந்த யுத்தத்தை தொடர்வதற்கு இந்தியா என்ற நாட்டை கருத்தில்கொள்ளவேண்டும் என்பதை நான் உணர்ந்தேன். இந்தியாவை எங்களுடன் வைத்திருக்கவேண்டும் என்பதை உணர்ந்தேன். எந்த நாடும் எங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கலாம் ஆனால்இந்தியா எங்களுக்கு எதிராக திரும்பினால் நாங்கள் யுத்தத்தை தொடரமுடியாது என்பதை நான் உணர்ந்தேன். இதன் காரணமாக இந்தியாவை எங்களுடன் வைத்திருப்பதற்கு நாங்கள் திட்டமொன்றை வகுத்தோம். வெளிவிவகார அமைச்சை பயன்படுத்தும் பாரம்பரிய வழிமுறையை நாங்கள் பின்பற்றவில்லை.
இலங்கையை சேர்ந்த மூவரும் இந்தியாவை சேர்ந்த மூவரும் இணைந்த குழுவொன்றை உருவாக்கினோம் பல விடயங்கள் குறித்து வெளிப்படையாக விவாதித்து உணர்வுபூர்வமான பல விடயங்களுக்கு தீர்வை கண்டோம். கருணாநிதி உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தவேளை இந்திய குழுவிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர்கள் தாங்கள் ஜனாதிபதியை சந்திக்கவிரும்புவதாக தெரிவித்தனர். நான் ஜனாதிபதியுடன் தெரிவித்து அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டேன்,அவர்கள் சந்திப்பை மேற்கொண்ட பின்னர் நாங்கள் கனரக ஆயுதங்களை பயன்படுத்தாமல் இராணுவநடவடிக்கையை மேற்கொள்வோம் என அறிக்கையொன்றை வெளியிட்டோம் மகிழ்சியடைந்த கருணாநிதி உண்ணாவிரதப்போரட்டத்தை கைவிட்டார் நாங்கள் யுத்தத்தை தொடர்ந்தோம்.
யுத்தம் முடியும் வரை இந்தியாவுடன் நெருக்கமான உறவுகள் காணப்பட்டன பின்னர் புதியநபர்கள் வந்தார்கள்உறவு முறிவடைந்தது.

No comments:

Post a Comment