Monday, June 08, 2015

தமிழ்த் தேசியத்தை சிதைக்கும் முயற்சியில் தனிநபர்கள் அடங்கிய உலகத்தமிழர் பேரவை

இலங்கை அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஒரு சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மத்தியில் லண்டனில் கடந்த வியாழக்கிழமை முதல் இரகசிய சந்திப்பு ஒன்று நடைபெற்று வருகிறது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரதிநிதியான எம்.சு.சுமந்திரன் இதில் கலந்டதுகொண்டுள்ள போதிலும், இது தொடர்பில் தமக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என கூட்டமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் தெரிவித்திருக்கின்றார்கள். இந்தப் பேச்சுக்கள் தொடர்பில் தம்மிடம் எதுவும் பேசப்படவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இலங்கை வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பிரதிநிதி , நோர்வேயின் முன்னாள் அமைச்சரும் இலங்கைக்கான நோர்வேயின் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம், சுவிஸர்லாந்தின் வெளிநாட்டமைச்சை சேர்ந்த மார்டின் டெசிஞ்சர் , தென் ஆபிரிக்காவின் In Transformation Initiative (ITI) என்ற அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள், உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மற்றும் நோர்வே ஈழத் தமிழர் அவை மற்றும் உலகத் தழிழர் பேரவையின் சிரேஷ்ட உறுப்பினர் டாக்டர் ரமணன் ஆகியோர் உட்பட வேறு சிலரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

தென் ஆபிரிக்காவின் In Transformation Initiative அமைப்பின் அனுசரணையுடன் நடைபெறும் இந்த கூட்டம், கடந்த காலங்களில் சிங்கப்பூர் மற்றும் சில நாடுகளில் நடைபெற்ற கூட்டங்களின் தொடர்ச்சியாகவே நடைபெற்றுவருகிறது.

இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும் நோக்கத்தை இலக்காக கொண்டே இந்த சந்திப்புக்கள் நடைபெற்று வருவதாக கடந்த காலங்களில் விளக்கம் கூறப்பட்டிருந்தது. ஆனால், இந்த சந்திப்புக்கள் மிக இரகசியமான முறையில் நடத்தப்பட்டு வருவதாகவும், தாயகம் மற்றும் புலம்பெயர் நாடுகளில் தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் இந்த சந்திப்புக்களில் ஓரம் கட்டப்பட்டுள்ளதாகவும் இதனால் இந்த சந்திப்புக்களின் உண்மையான நோக்கம் என்ன என்பது புரியாத புதிராகவே இருப்பதாகவும் சந்தேகங்களும் குற்றச்சாட்டுக்களும் தமிழ் அமைப்புக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் மத்தியில் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தன.

கடந்த ஏப்ரல் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் In Transformation Initiative அமைப்பு வெளியிட்டிருந்த ஊடக அறிக்கை தொடர்பில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தனது சந்தேகங்களை எழுப்பி இருந்ததுடன், தமிழர் தரப்பின் உண்மையான பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டமை, இந்த கூட்டங்களை கேள்விக்குறியாக்கியுள்ளது என்றும் குற்றம் சாட்டியிருந்தது.

இதேவேளை, நேற்று வெள்ளிக்கிழமை யாழ் ஊடக மையத்தில், செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வட மாகாண சபை உறுப்பினருமான எம். கே. சிவாஜிலிங்கம், In Transformation Initiative அனுசரணையுடன் நடைபெற்று வரும் சந்திப்புக்களை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த சந்திப்புக்கள் ஒரு ஏமாற்று வேலை என்றும் தமிழ் மக்களின் நியாமமான கோரிக்கைகளை பலவீனப் படுத்துவதற்கும் இனப்படுகொலையாளிகளை பாதுகாக்கும் ஒரு முயற்சியே இது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த சந்திப்புக்களில் ஈடுபட்டுவரும் உலகத் தமிழர் பேரவையானது ஒரு பலவீனமான அமைப்பு என்றும் புலம்பெயர் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தாத அமைப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவளை, உலகத் தமிழர் பேரவையின் செயற்பாடுகள் குறித்து தனது கடும் அதிருப்தியை கடந்த வருடம் பகிரங்கமாக வெளியிட்டிருந்த பிரித்தானிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவையின் தீர்மானங்கள் செயற்பாடுகளில் தாம் எந்த வகிபாகத்தையும் கொண்டிருக்கவில்லை என்றும் அவற்றிலிருந்து விலகி இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

உலகத் தமிழர் பேரவையானது தந்து ஸ்தாபன ரீதியான விழுமியங்களான, கூட்டுத் தீர்மானம், ஜனநாயக ஆட்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் அனைவரையும் ஒருங்கிணைத்தல் போன்ற விழுமியங்களை புறம்தள்ளி, தனது பாதையைத் தொலைத்து விட்டது என்று கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தது.

No comments:

Post a Comment