Tuesday, November 17, 2015

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுங்கள்: இலங்கை அரசுக்கு விக்னேஸ்வரன் எச்சரிக்கை




பொதுமன்னிப்பில் தங்களை விடுதலை செய்யக்கோரி இலங்கை சிறையில் உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழ் கைதிகளில் ஒருவர் உயிழந்துள்ள நிலையில், இலங்கை அரசு தமிழர்களின் நல்லெண்ணத்தை இழக்கிறது என்று வடக்கு மாகாண முதல்-மந்திரி விக்னேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்ட பிறகு 2009-ம் ஆண்டு முதல் ஏராளமான தமிழர்கள் உரிய விசாரணையின்றி சிறைகளில் அடைக்கப்பட்டனர். விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்து பின்னர் சரண் அடைந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

இதைக்கண்டித்து, தமிழ் கைதிகளில் 200-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு நீதி வேண்டி சிறையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அவர்களிடம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை அதிபர் சிறிசேனா உறுதி அளித்தார். இதையடுத்து, உண்ணாவிரத போராட்டத்தை கைதிகள் வாபஸ் பெற்றனர்.
இருப்பினும், இலங்கை சிறைகளில் அரசியல் கைதிகளாக உள்ள 200-க்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படமாட்டாது என்று அந்நாட்டு அரசு சில தினங்களில் தெரிவித்தது. அதேவேளையில், வழக்கு நிலுவையில் உள்ளவர்களும், போலீஸ் நடவடிக்கையின் கீழ் உள்ளவர்களும் ஜாமீன் பெறலாம். இதற்காக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் இலங்கை அரசு கடந்த மாதம் தெரிவித்திருந்தது.
இதனைத்தொடர்ந்து 32 கைதிகள் கடந்த வாரம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இருப்பினும், ஜாமீனில் விடுதலை செய்ய கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதனிடையே, இலங்கை அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தவறிவிட்டதாக கூறி மீண்டும் சிறையில் உள்ள கைதிகள் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் தங்களை பொதுமன்னிப்பில் விடுதலை செய்யவில்லை என்றால் சாகும்வரை போராட்டத்தை தொடருவோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளில் முன்னெடுக்கப்படும் இந்தத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தால் கைதிகள் பலரின் உடல்நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 35-க்கும் மேற்பட்ட கைதிகள் மயக்கமடைந்த நிலையில் சிறைச்சாலை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனிடையே, உண்ணாவிரதம் இருந்த கைதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இலங்கை சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை அவர்களது கோரிக்கைகளை ஏற்று உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வடக்கு மாகாண முதல்- மந்திரி விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அதிபர் மைத்ரிபால சிறிசேனாவிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், உண்ணாவிரதம் இருந்த கைதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதால், தமிழர்களின் நல்லெண்ணத்தை இலங்கை அரசு இழந்து கொண்டிருப்பதாக எச்சரித்துள்ளார்.
சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறிவிட்டதால், தொடர் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகள் தங்களது போராட்டத்தை நிறுத்தமாட்டார்கள் என்றார்.
இதனிடையே, இலங்கையில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக்கோரி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு (டி.என்.ஏ.) உள்ளிட்ட தமிழர் அரசியல் கட்சிகள் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. source:athirvu

No comments:

Post a Comment