Tuesday, August 29, 2017

'பள்ளாங்குழி' என அழைக்கப்படுதல் முறையே. ஆயினும் 'பல்லாங்குழி' என எப்படித் திரிந்தது?

Nakkeeran Balasubramanyam பொதுவாகப் பதினான்கு குழிகளை வைத்து, அதில் சோழி, புளியங்கொட்டை, பல்வேறு மணிகள் போன்றவற்றையிட்டு விளையாடும் விளையாட்டு 'பண்ணாங்குழி' என்றே அழைக்கப்பட்டுள்ளது. சிறுசிறு பள்ளத்தில் காய்களையிட்டு ஆடுவதாலும் இது 'பள்ளாங்குழி' என அழைக்கப்படுதல் முறையே. ஆயினும் 'பல்லாங்குழி' என எப்படித் திரிந்தது?

*****************
பண்ணாங்குழி
நெற்குத்தும் பண்ணைபோல் வட்டமான பள்ளம் அல்லது குழிதோண்டி, அதிற் கற்களையிட்டு ஆடும் ஆட்டு பண்ணாங்குழி எனப்படும். பண்ணையென்பது பள்ளம். பண்ணை பறித்தல் குழிதோண்டுதல். பண்ணாங்குழி என்னும் பெயர், அவ்வவ் விடத்தைப் பொறுத்துப் பன்னாங்குழி, பல்லாங்குழி, பள்ளாங்குழி என வெவ்வேறு வடிவில் வழங்கும். பெரும்பாலும் பதினான்கு குழிவைத்து இவ் விளையாட்டு ஆடப்பெறுவதால், பதினான்கு குழி என்பது முறையே பதினாங்குழி பன்னாங்குழி எனத் திரிந்ததாகச் சிலர் கொள்வர். ஆயின், பதினாங்குழி என எங்கேனும் வழங்காமையானும், பன்னான்கு என்பது இலக்கிய வழக்காதலானும், பண்ணாங்குழி, பள்ளாங்குழி என்னும் வடிவங்களே பெருவழக்காய் வழங்குதலானும், பதினான்கிற்குக் குறைந்தும் கூடியும் குழிகள் வைத்துக் கொள்ளப்படுதலானும், பள்ளாங்குழி என்பதற்குப் பள்ளமான குழி என்றே பொதுமக்களாற் பொருள் கொள்ளப்படுதலானும், பண்ணாங்குழி அல்லது பள்ளாங்குழி என்பதே திருந்திய வடிவமாம்.
I பொது
ஆடுவார் தொகை : இதை இருவர் ஆடுவர்.
ஆடுகருவி : நிலத்திற் சமமான இருபடுக்கை வரிசையாகக் கில்லப்பட்ட 10 அல்லது 14 அல்லது 16 குழிகளும், அவற்றுள் அவ்வைந்தாய் இடுவதற்கு வேண்டிய கழற்சிக்காய் (கச்சக்காய்) அல்லது புளியங்கொட்டை அல்லது கூழாங்கற்களும், இதற்கு வேண்டுங் கருவிகளாம்.
சிலர், என்றும் எங்கும் வசதியாய் ஆடுதற்பொருட்டு, வேண்டிய அளவு பள்ளஞ் செதுக்கப்பெற்ற மரக்கட்டைகளை வைத்திருப்பர்.
ஆடிடம் : இது வீட்டுள்ளும் வீட்டு அல்லது மரநிழலிலும் ஆடப்பெறும். இது ஏனை வகைகட்கும் ஒக்கும்.
ஆடுமுறை : குழி வரிசைக்கொருவராக இருவர் வரிசை யடுத்து எதிரெதிர் உட்கார்ந்து, குழிக்கைந்தாக எல்லாக் குழிகளிலும் கற்களைப் போடுவர். முந்தியாடுபவர், தம் வரிசையில் ஏதேனுமொரு குழியிலுள்ள கற்களைந்தையும் எடுத்து, வலப்புறமாகச் சுற்றிக் குழிக்கொன்றாகப் போட்டுக்கொண்டே போதல் வேண்டும். கற்களைப் போட்டு முடிந்தபின், கடைசிக்கல் போட்ட குழிக்கு அடுத்த குழியிலுள்ள கற்களைந்தையும் எடுத்து, அதற்கப்பாலுள்ள குழியில் ஒவ்வொன்றாகப் போட்டுக் கொண்டு போதல்வேண்டும். இங்ஙனம் போடும்போது, தம் வரிசையில் இடவலமாகவும், எதிரி வரிசையில் வல இடமாகவும் போட்டுச் செல்லவேண்டும். கடைசியாகப் போட்ட குழிக்கு அடுத்த குழி, வெறுமையாக இருந்தால் அதற்கடுத்த குழியிலுள்ள கற்களனைத்தையும் எடுத்துத் தம்மிடம் வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பின், எதிரியார் தம் வரிசையிலுள்ள ஒரு குழியிலிருந்து தொடங்கி, முன் சொன்னவாறே ஆடுவர். கடைசியாகப் போட்ட குழிக்கு அடுத்த இரு குழியிலும் கல் இல்லாவிடின், ஆடுபவர் ஒன்றும் எடுக்காமலே நின்றுவிட வேண்டும். ஒவ்வொருவரும் தத்தம் வரிசையிலுள்ள குழியொன்றில் 4 கற்கள் சேர்ந்துவிடின், அவற்றைப் பசு என்று சொல்லி எடுத்துக்கொள்வர். சிலவிடங்களில், 8 கல் சேர்ந்துவிடின் அவற்றைப் பழம் என்று சொல்லி எடுத்துக்கொள்வர்.
இங்ஙனம் இருவரும் மாறி மாறி ஆடிவரும்போது, எடுத்துக் கொள்ளப்படாது எஞ்சியுள்ள கற்களெல்லாம் ஒரே வரிசையிற் போய்ச் சேர்ந்துவிடின், ஆட்டம் நின்றுவிடும். இருவரும் தாந்தாம் எடுத்துவைத்திருக்கும் கற்களை எண்ணுவர். கடைசியில் ஒரே வரிசையிற் போய்ச் சேர்ந்த கற்களெல்லாம், அவ் வரிசையாரைச் சேரும். மிகுதியான கற்களை எடுத்தவர் வென்றவராவர்.
சிலவிடங்களில், ஒரே ஆட்டையில் வெற்றியைத் தீர்மானியாமல், ஐந்தாட்டையின் பின் அல்லது பத்தாட்டையின் பின் தீர்மானிப்பர். அம்முறைப்படி ஆடும்போது, முன் ஆட்டைகளில் தோற்றவர் வென்றவரிடம் தமக்கு வேண்டிய கற்களைக் கடன் வாங்கிக் கொள்வர். வென்றவர் கடன் கொடாவிடின், இருக்கின்ற கற்களை அவ்வைந்தாகக் குழிகளில் போட்டுவிட்டு, கல் இல்லாத அல்லது ஐந்து கல் இல்லாத குழிகளை வெறுமையாக விட்டுவிடவேண்டும். அவ் வெறும் குழிகட்குப் 'பவ்வீக் குழிகள்' என்று பெயர். அவற்றில் ஒவ்வொரு குச்சு இடப்படும். ஒருவரும் அவற்றில் ஆடல் கூடாது.
தோற்றவர்க்கு ஒருகுழியும் நிரம்பாதபோது (அதாவது ஐந்து கற்கும் குறைவாக இருக்கும்போது) இருக்கின்ற கற்களை ஒவ்வொன்றாகக் குழிகளிற் போட்டுவிட்டு, கல் இல்லாத குழிகளைப் பவ்வீக் குழிகளாக விட்டுவிடல் வேண்டும். அன்று எதிரியாரும் தம் வரிசையிலுள்ள எல்லாக் குழிகட்கும் ஒவ்வொரு கல்லே போடவேண்டும். இங்ஙனம் ஒவ்வொரு கல்லே போட்டு ஆடும் முறைக்குக் 'கஞ்சி காய்ச்சுதல்' என்று பெயர். அவ்வைந்து கல் போட்டு ஆடித் தோற்றவர், கஞ்சிகாய்ச்சி ஆடும்போது வெல்ல இடமுண்டு. ஒரு முறை வென்றவர் மறுமுறை முந்தியாடல் வேண்டும்.
ஓர் ஆட்டை முடிந்தபின், வெற்றியும் தோல்வியுமின்றி இருவரும் சமமாகக் கற்கள் வைத்திருப்பின், அடுத்த ஆட்டையில் 'சரிபாண்டி' ஆடல் வேண்டும். முதலாவது அவ்வைந்தாகவும் பின்பு பப்பத்தாகவும் கற்களையெடுத்து, அத்தனையே போட்டு ஆடுவது, சரிபாண்டியாடலாகும். இதில் விரைந்து விளைவு காணலாம்.
II. கட்டுக் கட்டல்
ஆட்டின் பெயர்: நான்கு மூலைக்குங் கட்டுக்கட்டி ஆடும் பண்ணாங்குழி விளையாட்டுவகை, கட்டுக்கட்டல் எனப்படும்.
ஆடுவார் தொகை : இருவர் இதை ஆடுவர்.
ஆடுகருவி : இரு சமவரிசையாகவுள்ள பதினான்கு குழிகளும், குழிக்கைந்தாக அவற்றிற்கு வேண்டிய கற்களும், இதற்குரிய கருவிகளாம்.
ஆடுமுறை : ஆடகர் ஒவ்வொருவரும் தத்தம் வரிசையின் இடக்கோடி (அதாவது இடப்புறக் கடைசி)க் குழியினின்று தொடங்கி ஆடல்வேண்டும். எடுத்த கற்களையெல்லாம் ஒவ்வொன்றாய்ப் போட்டபின், கடைசியாகப் போட்ட குழியினின்றே கற்களையெடுத்து ஆடல் வேண்டும். கடைசியாகப் போட்ட குழியில் ஏற்கெனவே ஒரு கல்லேனும் இருந்தால்தான், அதினின்று எடுக்க முடியும்; இல்லாவிட்டால் (அதாவது போட்டபின் ஒரு கல்லேயிருந்தால்) எடுக்க முடியாது. வெறுங்குழியைத் துடைத்து அடுத்த குழியிலிருந்தேனும், பிற வகையிலேனும், கற்களை எடுத்து வைத்துக்கொள்ளுதல் இவ் விளையாட்டில் இல்லை. ஒரு மூலைக் குழியில் ஏற்கெனவே மூன்று கல்லிருப்பின், நாலாவது கல்லைப் போடும்போது, அதைக் குழிக்குள் போடாமல் குழிக்குப் பக்கமாக வைத்துவிட வேண்டும். இதுவே 'கட்டுக்கட்டல்' எனப்படுவது. கட்டுக் கட்டிய குழியில், கட்டினவரே மேற்கொண்டு கல்போட முடியும்; அடுத்தவர் போடமுடியாது. இங்ஙனம் ஒருவரேயோ இருவருமா கவோ நான்கு மூலைக்கும் கட்டுக் கட்டிக் கொள்ளலாம். கட்டிய குழியில் கல் போடலாமேயன்றி எடுக்க முடியாது. ஆதலால், கட்டுக்கட்டிய குழிகளில் மேலும் மேலும் கல் சேர்ந்து கொண்டே யிருக்கும். எல்லாக் கற்களும் நான்கு மூலைக்கும் போய்ச் சேர்ந்தபின் அவரவர் கட்டிய குழிக்கற்களை யெடுத்து எண்ணல் வேண்டும். மிகுதியான கற்களையுடையவர் வென்ற வராவர்.
III. அரசனும் மந்திரியும் சேவகனும்
ஆட்டின் பெயர் : அரசனும் மந்திரியும் சேவகனும் என மூவர் ஆடும் பண்ணாங்குழியாட்டுவகை, அவர் புனைபதவிப் பெயரையே பெயராகக் கொண்டது.
ஆடுகருவி : கட்டுக்கட்டற்குப் போன்றே, இரு சமவரிசை யாகவுள்ள பதினான்கு குழிகளும், குழிக்கைந்தாக அவற்றிற்கு வேண்டிய கற்களும், இதை ஆடுகருவியாம்.
ஆடுமுறை : இரு வரிசைக் குழிகளுள்ளும், நடு இரு மூன்று அரசனுடையனவென்றும், இடப்புற ஈரிரண்டு மந்திரியுடையன வென்றும், வலப்புற ஈரிரண்டு சேவகனுடையனவென்றும் கொண்டு, அரசன் மந்திரி சேவகன் என்ற வரிசையொழுங்கில், ஆடகர் மூவரும் ஆடல் வேண்டும்.
ஒவ்வொருவரும், தாந்தாம் ஆடும் ஒவ்வொரு தடவையும், தத்தம் குழியிலிருந்தே தொடங்கி ஆடல்வேண்டும். ஆயின், எல்லார் குழிகளிலும் வரிசைப்படி கற்களைப் போடலாம். ஒவ்வொன் றாகக் கற்களைப் போட்டு முடிந்த பின், கடைசியாகப் போட்ட குழிக்கு அடுத்த குழியிலுள்ள கற்களையெடுத்து முன்போல் ஆடவேண்டும். கடைசியாகப் போட்ட குழிக்கு அடுத்த குழி வெறுமையாக இருப்பின் அதைத் துடைத்து அதற்கடுத்த குழியிலுள்ள கற்களையெல்லாம் எடுத்து வைத்துக்கொள்ளலாம். அதன்பின் அடுத்தவர் ஆடல்வேண்டும். கடைசியாகப் போட்ட குழிக்கு அடுத்த இரு குழிகளும் வெறுமையாக இருப்பின், ஆடுபவர் ஒன்றும் எடுக்காமலே நின்றுகொள்ள வேண்டும். வெறுங்குழிக்கு அடுத்த குழியிலுள்ள கற்களை எடுக்கும்போது, யாரும் யார் காயையும் எடுக்கலாம்.
அவரவர் குழிகளிலுள்ள பசுவை அவரவர் எடுத்துக் கொள்ளவேண்டும். எல்லாக் காயும் எடுத்துக்கொள்ளப்பட்ட பின், அரசன் ஏனையிருவர்க்கும் ஒவ்வொன்று கொடுத்துவிட வேண்டும். அதன்பின், அவனுக்கு 6 குழி நிரம்பினால் (அதாவது 30 காய் இருந்தால்), அவனுக்கு வெற்றியாம். என்றும், யார் மிகுந்த காய் எடுக்கின்றனரோ அவருக்கே வெற்றியாம். வென்றவர் தமக்கடுத்த மேற்பதவியும் தோற்றவர் தமக்கடுத்த கீழ்ப்பதவியும் அடைதல் வேண்டும். அரசன் வெல்லின் தன் பதவியைக் காத்துக் கொள்வான். ஆயின், அரசனும் மந்திரியும் மூன்றுமுறை தொடர்ந்து பழமாயின், கீழ்ப்பதவி யடைதல்வேண்டும். உலக வாழ்க்கையி லுள்ள ஏற்றிறக்கம் இவ் விளையாட்டால் உணர்த்தப்படுவது, கவனிக்கத்தக்கது.
IV. அசோகவனத் தாட்டம்
ஆட்டின் பெயர் : ஒருவர் தமித்திருக்கும்போது தாமாய் ஆடிக்கொள்ளம்
பண்ணாங்குழியாட்டுவகை, அசோக வனத்தில் தனித்திருந்ததாகச் சொல்லப்படும் சீதையொடு தொடர்புபடுத்தி, அசோகவனத் தாட்டம் என்று அழைக்கப்படுகிறது.
ஆடுகருவி : கட்டுக் கட்டற்குரியவையே இதற்கும்.
ஆடுமுறை : இருகுழி வரிசையுள்ளும், மேல்வரிசையில், முறையே ஒன்றும் இரண்டும் மூன்றும் நான்கும் ஐந்தும் ஆறும் ஏழுமாக மேன்மே லேற்ற முறையிலும், கீழ்வரிசையில், முறையே ஏழும் ஆறும் ஐந்தும் நான்கும் மூன்றும் இரண்டும் ஒன்றுமாக மேன்மே லிறக்க முறையிலும், இடவலமாகக் காய்களைப் போட்டுக்கொள்ள வேண்டும். இங்ஙனமன்றி, மேல் வரிசையில் மேன்மே லிறக்க முறையிலும் கீழ்வரிசையில் மேன்மே லேற்ற முறையிலும் போட்டுக்கொள்ளலாம். எங்ஙனமாயினும், இருவரிசையிலும் ஏற்றிறக்க முறை மாறியிருத்தல் வேண்டுமென்பதே விதியாம்.
தொடங்கும்போது கீழ்வரிசையிலுள்ள பெருந்தொகைக் குழியினின்று (அதாவது 7 காய்கள் உள்ள குழியினின்று) தொடங்கல் வேண்டும். காய்களைக் குழிக்கொன்றாகப் போட்டுச் செல்லும்போது, பிறவகை யாட்டுகளிற் போன்றே கீழ்வரிசை யில் இடவலமாகவும் மேல் வரிசையில் வலஇடமாகவும் போட்டுச் செல்லவேண்டும். காய்களைப் போட்டு முடிந்தபின், கடைசி யாகப் போட்ட குழிக்கு அடுத்த பெருந்தொகைக் குழியினின்று காய்களை எடுத்தாடவேண்டும். அது கடைசியாகப் போட்ட குழிக்கு அடுத்தே யிருக்கும்.
வெறுங்குழி அமைவதும், அதைத் துடைத்து அடுத்த குழியிலுள்ள காய்களை எடுத்துக்கொள்வதும், இவ் விளையாட்டில் இல்லை.
மேற்சொன்னவாறு (அதாவது என்றும் ஒரு வரிசையி லுள்ள பெருந்தொகைக் குழியினின்றே காயெடுத்து) ஒன்பது முறை தொடர்ந்து ஆடின், ஆட்டந் தொடங்குமுன் போட் டிருந்தவாறே, அவ்வக் குழிகளிற் காய்கள் அமைந்துவிடும். அங்ஙனம் இராவிடின் ஆடினது தவறென்று அறிந்து கொள்ளலாம்.
ஒருவர் தமித்தாடுதற்கேற்ற விருப்பத்தை இவ் விளையாட்டு உண்டுபண்ண வல்லது.
குறிப்பு : பண்ணாங்குழி பெண்பிள்ளைகட்கே ஏற்றதாயினும், பையன் களாலும் ஆடப்படுவதுபற்றி இருபாற் பகுதியிற் கூறப்பட்டதென்க.
- தேவநேயப் பாவாணர்

No comments:

Post a Comment