வடபகுதியின் கிளிநொச்சி மாவட்டத்தை சிறீலங்கா அரசு ஒரு இராணுவ வலையமாக மாற்றி வருவதுடன், அங்கு பெருமளவான சிங்கள குடியேற்றங்களும் அவசரமாக மேற்கொள்ளப்படுவதாக வன்னி தகவல்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது கிளிநொச்சியில் சிங்கள மக்களை குடியமர்த்துவதற்காக 12,000 வீடுகளை சிறீலங்கா அரசு அவசரமாக அமைத்து வருகின்றது. தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களில் இந்த வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த வீடுகளில் 100 வீடுகள் சிறீலங்கா படை அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் இது மேற்கொள்ளப்படுகின்றது.இதனிடையே, இராணுவ குடியிருப்புக்கள் அமைக்கப்படும் பகுதிகளின் தமிழ் ஊரிமையாளர்கள் அப்பகுதிக்கு செல்வதற்கு சிறீலங்கா அரசு தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு என வழங்கப்பட்ட நிதியிலேயே கொழும்பு அரசு இதனை மேற்கொண்டு வருவதாக வன்னிப் பகுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏ-9 நெடுஞ்சாலைக்கு கிழக்காக முறுகண்டிப் பகுதியிலும் சிங்கள மக்களின் குடியேற்றத்திற்காக வீடமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இராணுவத்தினருக்காக அமைக்கப்படும் 12,000 வீடுகளில் முதற்கட்டமாக 5,000 வீடுகள் கட்டப்படுகின்றன. அதற்கான நிதி உதவியை சீனா வழங்குகின்றது.

No comments:
Post a Comment