Friday, December 24, 2010

மனித உரிமை ஆர்வலர்களின் இலங்கை பொருட்களை புறக்கணிப்போம் போராட்டம்!

அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஆடைகளுக்கு எதிரான போராட்டம் குளிர் கால நிலையையும் பொருட் படுத்தாது கடந்த Dec18 ம் திகதி முன்னெடுக்கப்பட்டது.


கடந்த ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட காலமாக தொடர்ச்சியாக அமெரிக்க அரசியல் பேரவையால் முன்னெடுக்கப்படும் இப் போராட்டம் Victoria Secret நிறுவனத்தின் அதிகாரிகள் கவனத்தை ஈர்த்து, போராட்டத்தை முன்னெடுக்கும் செயற்பாட்டாளர்களுடன் பேச்சுவார்த்தைகளுக்கு நிர்ப்பந்தித்துள்ளது. எனினும் இன்னும் இப்போராட்டம் புலம் பெயர் தமிழர்களால் மிகவும் வீச்சுடன் முன்னெடுக்கப்பட்டாலே வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.

இலங்கையில் இருந்து ஏற்றுமதி ஆகும் ஆடைகளின் 50 வீதமானவை அமெரிக்க மக்களின் பாவனைக்கே செல்கின்றன. இவற்றை பாவிப்பது இன அழிப்பில் ஈடுபடும் சர்வாதிகார ஆட்சியை நிலை நிறுத்தவும், யூதர்களை போல் ஒரு பாரிய இன சுத்திகரிப்புக்கு முகம் கொடுத்திருக்கும் ஈழ தமிழ் மக்களை ஒடுக்கவும் உதவுமெனில் இவற்றை பெருவாரியான அமெரிக்க மக்கள் புறக்கணிப்பர். இவ்வாறான நிர்ப்பந்தம் ஏற்படும் கட்டத்தில் தமது நற்பெயரை காக்கும் வண்ணம் இவ் ஆடைகளை விற்கும் நிறுவனங்கள் அதை இடை நிறுத்த வேண்டி வரும்.

வரலாற்றில் இன வெறி ஆட்சி செய்த தென் ஆபிரிக்காவுக்கு எதிரான உலகம் தழுவிய புறக்கணிப்பு போராட்டம் எவ்வாறு வெற்றி பெற்றதோ, அதே பன்று இன்றைய தகவல் தொழில் நுட்ப யுகத்தில் இப் போராட்டமும் வெற்றி பெரும் சாத்தியம் அதிகம் உள்ளது என இதை தலைமை தாங்கும் முக்கியஸ்தர்களில் ஒருவரான அமெரிக்க மருத்துவர் எலின் சாண்டர் கருத்து தெரிவித்துள்ளார் .

சமீபத்தில் வெளியான போர் குற்ற காணொளியில் 26 வயதுடைய இளம் தாய் இசைப்பிரியாவின் கோரமான படுகொலை Channel 4 தொலைக்காட்சி சேவையில் காண்பிக்கப்பட்ட பின்னரும், படித்த அறிவார்ந்த பெண்களை நம்பி ஆடைகள் விற்கும் Victoria Secret  நிறுவனத்தினர் எவ்வாறு ஒரு இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் அரசுடன் வர்த்தக உறவை பேணலாம் என இந்த போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இப்போராட்டத்தை ஒட்டி Old Town Alexandria, Virginia என்னும் நகரில் GAP ஆடை விற்பனை நிறுவனத்திற்கு முன்னாள் இலங்கையில் இருந்து உற்பத்தியாகும் ஆடைகளை வாங்க வேண்டாம் என ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த நகரம் அமெரிக்க தலைநகரான Washington  DC க்கு மிக அருகாமையில் இருப்பதுடன், அமெரிக்க அரசில் வேலைபார்க்கும் பலர் வசிக்கும் ஒரு பகுதியாக உள்ளது.
ஆர்ப்பாட்டம் செய்த மனித உரிமை ஆர்வலர்களுடன் பேசிய பல அமெரிக்க மக்கள் தாங்கள் இப்படியான சாத்வீகப் போராட்டத்தின் மூலம் இனப்படுகொலை செய்யும் ஒரு அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆதரிப்பதாகவும், இப்போராட்டம் மேலும் வலுப்பெற்று வெற்றிபெற வாழ்த்தியும் சென்றனர்.

அத்துடன் வீதியால் சென்ற வாகன சாரதிகள் தங்கள் ஆதரவை காட்டும் வண்ணம் ஒலி எழுப்பியவாறும் சென்றனர். அத்துடன் கடையின் உள்ளிருந்து ஆடை வேண்டி வந்தோர் தமது ஆடைகள் இலங்கையில் இருந்து தயாரிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்து கொண்டனர்.

இப்போராட்டத்தின் போது அங்கு தற்செயலாக வந்த சிங்களப் பெண்மணி ஒருவர் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடைபெறவில்லை எனவும், ஏன் நீங்கள் அனைவரும் அகதியாக அமெரிக்காவிற்கு வந்து இலங்கைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இதை செய்கின்றீர்கள் என ஆவேசப்பட்டுள்ளார். அத்துடன் நிற்காது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வைத்திருந்த பதாகைகள் சிலவற்றையும் கிழித்து எறிந்து உள்ளார்.

உலகப் பிரசித்தி பெற்ற பல உயர் கல்வி நிறுவனங்கள் பல கொண்ட Princeton, NJ நகரில் நடந்த போராட்டத்தில் குழந்தைகளுடன் குடும்பங்களுடன் ஆர்வமாக பலர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தை கவனித்த பல அமெரிக்க மக்கள் இலங்கையில் நடக்கும் இனப்பிரச்சினை குறித்து அறிந்து கொள்ள ஆர்வம் காட்டியதாக போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
உலகின் வர்த்தக தலைநகரென அழைக்கப்படும் New York  நகரில் நடந்த ஆர்பாட்டத்தில் இந்த அமைதி வழியிலான சாத்வீக போராட்டத்தை அமெரிக்காவில் முன்னின்று ஒருங்கிணைக்கும் மருத்துவர் எலின் சாண்டர் அவர்கள் ஆர்வமாக கலந்து கொண்டார். அவருடன் இணைந்து அங்கு கூடி இருந்தோர் “இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஆடைகளாயின் அதை அப்படியே கீழே போடுங்கள் “ என்று குரல் எழுப்பினர்.

மேலும் இப்போராட்டத்தை விளக்கும் வகையிலான பல நூறு துண்டுப் பிரசுரங்களையும் அமெரிக்க மக்களுக்கு விநியோகித்தனர். இப்போராட்டத்தில் தமிழ் நாட்டில் இருந்து தனது மென்பொருள் நிறுவன வேலை நிமித்தம் வந்த அதன் நிறுவனரும் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டு மருத்துவர் எலின் சாண்டர் அவர்களின் முயற்சியைப் பாராட்டியும் இப்போராட்டம் வெற்றி பெறவும் வாழ்த்தினார்.

அமெரிக்காவின் தென் மாநிலங்களில் ஒன்றான North Carolina வில் Raleigh என்னும் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தை அமெரிக்க தமிழர் பேரவையின் தலைவர் கலாநிதி எலியாஸ் ஜெயரஜா அவர்கள் முன்னின்று நடத்தினார்.
நகரின் முன்னணி ஆடம்பர பல் அங்காடி மையமான Crabtree valley mall எதிரில் நடந்த இந்த போராட்டத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது பலர் கலந்து கொண்டனர்.
புலம்பெயர் தேசம் எங்கும் இப்புறக்கணிப்பு போராட்டம் வலுப்பெறுமாயின் இலங்கையின் பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்குள்ளாகும் என பொருளியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த அச்சம் காரணமாகவே இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவர்கள் இலண்டன் நகரில் நடைபெற்ற ஆய்வரங்கில் இலங்கையின் மேற்கத்தேய சந்தை வாய்ப்பை தடை செய்ய புலம்பெயர் தமிழர்கள் முயல்கின்றனர் என கடுமையாக சாடியுள்ளார்.
அண்மையில் ராஜபக்சவுக்கு எதிராக இலண்டனில் வெற்றி பெற்ற தமிழர்களின் போராட்டமானது, புலம்பெயர் தமிழர்கள் ஒற்றுமை பெற்று போராடினால் தமிழ் ஈழக் கனவை மாறி வரும் இந்த நவீன உலகில் அடைவது உறுதி என்றே கூறலாம்.

No comments:

Post a Comment