Friday, December 24, 2010

இது கதையல்ல நிஜம்: நான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது! – ஒரு போராளியின் சாட்சியம் – தொடர் 5


வந்த ஆமிக்காரர்கள் அங்கேயிருந்த ஒவ்வொரு ஓலை வீடுகளையும் எரித்துக் கொண்டு வந்தார்கள். ஓலை வீடுகள் எரிந்த வெளிச்சத்தில் எல்லா இடமும் வடிவாகத் தெரிந்தது.

அந்த தீச் சுவாலைகளைப் பார்த்த நான்,  வீரச்சாவடைந்த எங்கட நான்கு வீரர்களுக்கும் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு இருப்பது போல உணர்ந்தேன். அப்போது மனதில் உறுதியெடுத்துக் கொண்டேன்.


எப்படியாவது போய்ச் சேர்ந்து நடந்தவற்றை தலைமைக்குச் சொல்ல வேண்டுமென்று. அப்படியே படுத்துக்கிடந்தபடி பார்த்துக் கொண்டேயே இருந்தேன். அவன் சகல வீடுகளையும் எரித்துவிட்டு சற்று நேரத்தில் அவ்விடத்தை விட்டுப்போய்விட்டான். என்னை நுளம்புகள் தின்று கொண்டிருந்தன.

ஒருவாறாக எழும்பி திரும்பவும் எங்கட ஆட்களின் பெயர்களைச் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டு போனேன். மனத்தினுள் ஆமி எங்கேயயாவது மறைந்து நின்று அவதானிக்கிறானா என்று சுற்றிலும்  பார்த்தவாறே அவர்களைத் தேடிக்கொண்டிருந்தேன்.

நான் நிமலன் அண்ணாவிடம், இதற்கு முதல் நாட்தான்  “அண்ணா! எப்போதுமே அடிகிடைச்சா எல்லோரும் என்னை விட்டுவிட்டு ஓடிவிடுவாங்க. நீங்களாவது என்னைக் கூட்டிக்கொண்டு போங்க” எனச் சொன்னேன். அதேபோல இன்று தனிமையாகிப் போனேன்.  முதல்நாள் பகல் நாங்கள் தங்கியிருந்த வீட்டிலே மருந்துப் பொருட்கள் கொஞ்சம் கிடந்தது. அதோடு காயத்திற்குக் கட்டும் கோசும் (துணிகள்) கிடந்தது.  “அண்ணா சிலவேளை இது நமக்குத் தேவைப்படும் என்று சொல்லிக் கொண்டு அதையும் எடுத்து எனது பைக்குள் வைத்தேன். அதுவும் இன்றைய நிலைக்கு சரியாகிவிட்டது.

என்ன செய்வது என்று நினைத்துக்கொண்டு, இனித் தொடர்ந்து இங்கிருந்து ஒன்றுமே செய்யமுடியாது. எனவே எங்களுடைய மற்ற ஆட்களையும் தேடுவதோடு, தரப்பட்ட வேலையையும் செய்ய வேண்டும். அதோட இங்கு நடந்த சம்பவங்களை மெயினுக்கும் தெரியப்படுத்த வேண்டும். எனவே அதற்குத் தேவையான ஒழுங்கைச் செய்து கொண்டு நகர்வதற்காக,  சுற்றும் அவதானித்தபடி மீண்டும் நான் காயப்பட்ட வீட்டுக்குப் போய் இரண்டு தண்ணிப் போத்தலும் 5 நாளுக்கு ஏற்றமாதிரிச் சாப்பாடும் எடுத்துக் கொண்டு றோட்டடிக்கு வந்தேன். ஆமி ரோச்சடிச்சுப் பார்த்துக் கொண்டு நின்றான்.  நான் அதை விலத்திப் போவதற்காக பற்றை ஒன்றிற்குள் இருந்தவாறு அவதானித்துக் கொண்டிருந்தேன்.

திடீரென்று 200 மீற்றர் தூரத்தில்  ஆமியின் சத்தமும், பெரும் வெடியோசை ஒன்றும் கேட்டது. அதைத்தொடர்ந்து பெரிதாகக் குழறிய சத்தங்களும் கேட்டது. பிறகு   ஆமியின்  ரவுண்ஸ் அடி எல்லாப்பக்கமும் இலக்கின்றி அடிக்கப்பட்டது. கொஞ்சநேரத்தில்  மயான அமைதியொன்று நிலவிய பிரதேசமாக காட்சியளித்தது அப்பகுதி.  அந்த வெடியோசை எங்கட ஆட்களில் யாரோ  சார்ஜர் இழுத்ததால் ஏற்பட்டது தான் என்பது எனக்குத் தெளிவாக விளங்கியது. ஆமிக்கு ஏதோ இழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் ஒரே ரவுண்ஸ்;மழையைப் பொழிந்ததோடு  மட்டுமல்லாது, சற்று நேரத்தில் வாகனங்களும் கூடுதலான ஆட்களும் (ஆமி) கொண்டுவந்து குவிக்கப்பட்டதோடு, எல்லா இடங்களையும் கிளியறிங் செய்ததோடு, அப்பிரதேசம் முழுவதும் யாரும் நகரமுடியாதவாறு பொசிசன் போட்டபடியிருந்தான். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எப்படி வெளியேறுவது என்று எனக்குத் தெரியவில்லை.

நாய்கள் குரைத்துக் கொண்டே இருந்தன. எனக்கு முன்னால் நிறைய நாய்கள் கூட்டமாக படுத்துக் கிடந்தன. நாய்கள்; என்னைக் கண்டு குரைத்தால் ஆமி அலேட்டாயிடுவான். என்ன செய்வது என்று யோசித்தேன். ஆமி எங்கே இருக்கிறான் என்று ஒன்றுமே தெரியாது. எனக்கு முன்னுக்குள்ள தெருவுக்கு மற்றப்பக்கம் ஆமி இருந்தாலும் இருப்பான் எதற்கும் ஆயத்தமாகப் போவோம் என்று சேப்ரியைத் தட்டி விட்டு, குண்டடிக்கிறதென்றால் கையேலாது. என்ன செய்வது முட்டுப்பட்டா யார் முந்திறமோ அவன் தான் பிழைப்பான். எனவே கட்டாயம் குண்டடிக்கத்தான் வேண்டும். எனவே கிளிப்பை வாயால் கழற்றிவிட்டு  வீசுவமென்று எல்லாத் தயார் நிலையிலும் மெதுவாக  நாய்க்குச் சத்தம் கேட்காதவாறு நடந்து, ஒருமாதிரி மறுபக்கம் போய்ச் சேர்ந்துவிட்டேன்.
பொழுது விடியப் போகிறது. சுற்றும் முற்றும் பார்த்துப் பார்த்து அருவியடிக்கு வந்துவிட்டேன். அருவியில் தண்ணீர் ஓடிக்கொண்டே இருந்தது. ஓர் இடத்தில் இறங்கிப் பார்த்தேன். அப்படியே உள்ளுக்குள்ளே போக டக்கென்று மரத்தை எட்டிப்பிடித்து ஏறிவிட்டேன். பிறகு எல்லாப் பக்கமும் போய்ப் பார்த்தேன்.

விடியவும் போகிறது அதற்குள்ளேயே இருட்டோடு இருட்டாக கடந்திட வேண்டும்.  நான் நின்ற இடத்துக்கு பக்கத்தில பெரிய மரமொன்று அப்பிடியே அருவிக்கு நடுவில் விழுந்து கிடந்தது. உடனே  அதில் ஒருமாதிரி கஸ்ரப்பட்டு ஏறி, அங்கே பிடித்து, இங்கே பிடித்து மெதுமெதுவாக கரைக்குக் கிட்ட வந்துவிட்டேன். கரைக்கு ஒரு பத்து மீற்றர் இருந்தது. உடனே அருவிக்குள் இறங்கினேன். நெஞ்சு மட்டத்திற்கு தண்ணீர். காயப்பட்ட கையை உயர்த்திப் பிடித்துக் கொண்டு மெதுவாக காலால் துழாவியபடி நடந்தேன். பள்ளம் இருக்கிற இடங்கூடத் தெரியாது என்றுதான் அப்படிச் செய்தேன். ஒரு மாதிரி கரைக்கும் வந்துவிட்டேன்.

ஓரளவு விடிந்து கொண்டு வருகிறது. சரியான களைப்பாகவும், வேதனையாகவும் இருந்தது. இலந்தை முள்ளுப் பற்றையின் முள்ளுங் குத்துகிறது. நுளம்பும் கடிக்கிறது. அப்படியே ஒரு கூடலுக்குள் போய் அதிலிருந்த புத்து ஒன்றில் சாய்ந்து நித்திரை கொண்டேன். ஆனால் நித்திரையே வரவில்லை. நனைந்தது வேறு குளிர்கிறது, கை வேறு வலியில் குத்துகிறது, அத்துடன் சேர்ந்து நுளம்புங் கடிக்கிறது. இயலாமல் போய் தலையைச் சுற்றியது, அப்படியே மயங்கிவிட்டேன் போலவிருக்கிறது.

கொஞ்ச நேரத்தால் திடுக்கிட்டு முழித்துப் பார்த்தபோது  நன்றாக விடிந்து மணி ஏழாகியிருந்தது. அங்கிருந்து எழும்பிப் பார்த்த போது  முன் பக்கம் பாதை மாதிரிப் போனது. அந்தப் பாதை வழியே போய்ப் பார்த்தேன். அங்காலப் பக்கக்கரை தெரிந்தது. ஆமியுடைய பழைய பொசிசன்களும் இருந்தது. பிறகு கொஞ்சம் தள்ளிப் போய்ப் பார்த்தேன். சனம் விட்டுட்டுப் போன பொருட்களும், உடுப்புக்களும் இருந்தன. அவ்விடத்தில் ஒருவித துர்நாற்றம் வீசியது. கிட்டப் போய்ப் பார்த்தேன். மனிச எலும்புக்கூடுகள் அவ்விடத்தில் நிறைய  இருந்தன. இறந்தவர்களின் உடல்கள் புதைக்கவோ எரிக்கவோ படாமல் அப்படியே கிடந்து புழுக்களால் தின்னப்பட்டும், அழுகியும் போயிருந்தது.  அது அவனால் கொல்லப்பட்ட எங்கட மக்களோடதாகத்தான் இருக்கும்.

மற்றப்பக்கம் போய்ப் பார்த்தேன்; அங்கிருந்த வீடொன்றில் ஒரு பை (பேக்கும்) கிடந்தது. அது யு.என்.சி.எச்.ஆர் கொடுத்த நீலப் புத்தகப்பை. அதையும் எடுத்துக் கொண்டு, அங்கிருந்த சாரங்கள் தண்ணியில் ஊறி சுருட்டி மடித்து வைத்தபடி காய்ந்து கிடந்தது. அதை எடுத்து பையுக்குள் வைத்தேன். பிறகுஅங்கிருந்த பொருட்களைக்  கிண்டிப் பார்த்தேன். கத்தரிக்கோலும் ஒரு சேட்டும் கிடந்தது. அதையும் எடுத்தேன். கத்தரிக்கோல் இருந்தால் துணியை வெட்டச் சத்தம் கேட்காது. சாரத்தைக் கிழித்தால் சத்தம் கேட்கும் என்று நினைத்து அதையும் எடுத்தேன். திடீரென்று ஆமி  வாற சத்தம் கேட்டது. எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு, நான் மறைந்திருந்த  இடத்துக்குப் போனேன். நான் நின்ற பக்கம்தான் சத்தம் கேட்டது.

தொடரும்….

No comments:

Post a Comment