Friday, December 24, 2010

சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களுக்கு நடந்தது என்ன?

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எந்தவொரு கட்டத்திலும் புத்துயிர் கொடுக்க யாரும் உயிரோடு இருக்கக் கூடாது- இது தான் போரின் இறுதிக் கட்டத்தில் சிங்களத் தலைமையின் அடிப்படை நோக்கமாக இருந்துள்ளது.

கடந்த காலங்களில் சிறிலங்கா இரண்டு முறை ஜேவிபியின் ஆயுதக் கிளர்ச்சிகளைத் தோற்கடித்த பாடத்தைக் கற்றுக் கொண்டிருந்தது.
எச்சமாக விடப்பட்ட ஜேவிபியினரால் அரசாங்கங்களுக்குத் தலைவலியே மிஞ்சியது.

எனவே அது போன்றதொரு நெருடிக்கடி புலிகளால் எதிர்காலத்தில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் சிங்கள அரசு உறுதியாக இருந்தது.

இராணுவ ரீதியாகப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டாலும்- அரசியல் ரீதியாகவேனும் அவர்கள் மீளவும் தலையெடுத்து விடக் கூடாது என்பதே அரசின் அடிப்படை நோக்கமாக இருந்தது.

இதன்காரணமாகவே சரணடைய முன்வரும் புலிகளின் தலைவர்கள் யாரையும் உயிரோடு விடக் கூடாது என்றும் அங்கேயே சுட்டுக் கொன்று விடுமாறும் உத்தரவு பிறப்பித்திருந்தார் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ஸ.

புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன், புலித்தேவன், ரமேஸ் போன்றவர்கள் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணி இது தான்.

அதுமட்டுமன்றி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றபோது படையினரிடம் சரணடைந்த புலிகளின் முக்கிய தலைவர்கள் பலரும் இப்போது உயிருடன் இல்லை என்ற சந்தேகம் வலுவடைய ஆரம்பித்துள்ளது.

அவர்களும் இதேபோன்று வஞ்சகமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவே கருதப்படுகிறது.

கொழும்பு ஆங்கில வாரஏடு ஒன்றுக்கு கடந்த வாரம் சிறிலங்கா அரசின் அமைச்சரான கருணா பேட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார்.

அந்தப் பேட்டியில் கரிகாலனுக்கு என்ன நடந்தது என்று- முன்னர் இராணுவ ஆய்வுப் பத்திகளை எழுதி வந்த ரங்க ஜெயசூரிய கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்குக் அமைச்சர் கருணா, அவர் இறுதிப் போரிலேயே கொல்லப்பட்டு விட்டார் என்று பதிலளித்துள்ளார்.

சிறிலங்கா அரசின் அமைச்சர் ஒருவர் முதல் முறையாக கரிகாலனும் கொல்லப்பட்டு விட்டார் என்று கூறியுள்ளார்.

இதேபோன்றே ஏற்கனவே புலிகளின் முக்கிய தலைவர்களான பாலகுமாரன், யோகி போன்றவர்களும் கொல்லப்பட்டு விட்டதாக கூறப்பட்டிருந்தனர்.

ஆனால் இவர்கள் எவருமே இறுதிப் போரின்போது கொல்லப்படவில்லை. இது உறுதியாகவே தெரிந்த விடயம்.

இதற்குப் பலர் சாட்சிகளாக உள்ளனர்.

யோகி மனைவியும், புதுவை இரத்தினதுரையின் மனைவி, திலகரின் மனைவி, பாலகுமாரனின் மனைவி என்று பல போராளிகளின், முக்கிய தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்த சரணடைவுக்கு சாட்சிகளாக உள்ளனர்.

அண்மையில் சிறிலங்கா அரசாங்கம் நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக இவர்கள் தமது சாட்சியங்களைப் பதிவு செய்தும் உள்ளனர்.

கடந்த வருடம் மே 18ம் திகதி காலையில் சரணடைந்த புலிகளின் தலைவர்களான யோகி, புதுவை இரத்தினதுரை, பாலகுமாரன், லோறன்ஸ் திலகர், குட்டி, எழிலன், கரிகாலன் போன்ற சுமார் 50 பேரை வட்டுவாகலில் வைத்துப் பேருந்து ஒன்றில் படையினர் ஏற்றிச் சென்றுள்ளனர்.

இதன் பின்னர் அவர்கள் எங்கே கொண்டு செல்லப்பட்டனர் என்றோ அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்றோ யாருக்கும் தெரியாது.

இவர்களை இரகசியமான தடுப்பு முகாம்களில் வைத்திருப்பதாக அண்மைக்காலம் வரை ஒரு நம்பிக்கை இருந்தது.

அது மட்டுமன்றிக் கொழும்பிலிருந்து வெளியாகும் ‘சண்டே ரைம்ஸ்‘ வாரஇதழ் கடந்த வருடம் நடுப்பகுதியில் கரிகாலன், பாலகுமாரன், இளங்குமரன், யோகி, எழிலன், புதுவை இரத்தினதுரை போன்ற புலிகளின் தலைவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகச் செய்தி வெளியிட்டிருந்தது.

சரணடைந்த புலிகளின் தலைவர்கள் உயிருடன்- இரகசிய தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற நம்பிக்கையை அது ஏற்படுத்தியிருந்தது.

ஆனால் இப்போது அந்த நம்பிக்கை முற்றாகவே உடைந்து போய்விட்டது.

அதற்குக் காரணம் ஏற்கனவே அமைச்சர் டியூ.குணசேகர, பாலகுமாரனும், யோகியும் தடுப்பு முகாம்களில் இல்லை என்றும் அவர்கள் இறுதிப்போரில் கொல்லப்பட்டு விட்டதாகவும் கூறியிருந்தார்.

இப்போது கரிகாலன் இறுதிப்போரில் கொல்லப்பட்டதாக அமைச்சர் கருணா கூறியுள்ளார்.

இவற்றில் இருந்து சிங்கள அரசு சரணடையும் போராளிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று ஐ.நாவுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் கொடுத்திருந்த வாக்குறுதிகளை மீறியுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.

போரின் இறுதிக்கட்டத்தில் புலிகளின் தலைவர்கள் சரணடைய முற்பட்டபோது அதற்கு உதவுமாறு புலிகளால் ஐ.நாவிடம் வேண்டுகோள் விடப்பட்டது.

அப்போது விஜய் நம்பியாரை இதற்குப் பொறுப்பாக நியமித்தார் பான் கீ மூன்.

ஆனால் விஜய் நம்பியாரோ சரணடைதலுக்கு உதவுவதற்கு சிறிலங்கா செல்லவில்லை.

அவர் நியுயோர்க்கில் இருந்தபடியே சரணடையும் போராளிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று மகிந்த ராஜபக்ஸ உத்தரவாதம் அளித்துள்ளதாகக் கூறிவிட்டு இருந்து விட்டார்.

இப்போது, ஐ.நாவுக்கு அறிவித்து விட்டு சரணடைந்த புலிகளின் முக்கிய தலைவர்கள் யாரும் தம்மிடம் இல்லை என்று கூற ஆரம்பித்து விட்டது சிங்களத் தலைமை.

அப்படியானால் சரணடைந்த புலிகளின் தலைவர்களுக்கு என்ன நடந்தது?

சிங்கள அரசின் அமைச்சர்கள் கூறுவது போன்று அவர்கள் இறுதிப்போரில் தான் கொல்லப்பட்டார்களா?

நிச்சயமாக இல்லை- அவர்களின் சரணடைவுக்குச் சாட்சிகள் உள்ளன.

அதைவிட, போரின் முடிவில் கொல்லப்பட்டதாக சிங்கள அரசு அறிவித்த புலிகளின் தலைவர்களின் பட்டியலிலும் அவர்கள் இல்லை.

தடுத்து வைக்கப்பட்டவர்களிலும் அவர்கள் இல்லை என்றால் அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது.

இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு கூட்டுப் படுகொலை.

புலிகள் இயக்கத்தை வழிநடத்த எவருமே வரக் கூடாது என்ற நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு பெரும் சதி.

இதில் ஐ.நா வுக்கும் பங்குள்ளது.

தடுப்பு முகாம்களில் உள்ள போராளிகளின் விபரங்களை வெளியிடவும் சிங்கள அரசு மறுத்து வருகிறது.

அந்தப் பட்டியல் வெளியானால் தான் யார் யார் சரணடைந்த பின்னர் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற விபரம் தெரியவரும்.

அதேவேளை பாலகுமாரன், யோகி, கரிகாலன் என்று சிங்கள அரசு கொல்லப்பட்டு விட்டதாகக் கூறும் புலிகளின் தலைவர்களின் பட்டியல் வருங்காலத்தில் இன்னும் நீளலாம்.

சிங்கள அரசு புலிகளை மீண்டும் தலையெடுக்க விடக்கூடது என்பதில் உறுதியாகவும், கவனமாகவும் இருந்துள்ளது.

ஆனால் அதனை ”சரியாக” செய்ய தவறிவிட்டது.

வெற்றியின் மிதப்பில் செய்து விட்ட தவறுகள் அதற்கு தூக்குக் கயிறாக மாறும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

என்னதான் சிங்கள அரசு இத்தகைய போர்க்குற்றங்களை மறுத்தாலும்- அதை ஒருபோதும் மறைத்து விட முடியாது.

பாலகுமாரன், யோகி, கரிகாலன் போன்ற புலிகளின் தலைவர்கள் சரணடைந்த பின்னர் படுகொலை செய்யப்பட்டதற்கு சிங்கள அரசும் அதன் தலைமையும் அனைத்துலக சமூகம் முன்பாக பதிலளிக்க வேண்டிய நிலை விரைவில் வரும்.

முகிலன்.

No comments:

Post a Comment