சிறையில் இருந்து வந்ததும் முதல் கூட்டம்… இன விடுதலைக்காகப் போராடிய தந்தைக்கும், ஈழவிடுதலைக்காக உதவிய தலைவருக்கும் வீர வணக்கம் செலுத்த சென்னையில், எம்.ஜி.ஆர். நகரில் திரண்டோம்!
முதன் முறையாக எம்.ஜி.ஆர். குறித்து முழங்கினேன். பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை எம்.ஜி.ஆர். எப்படி எல்லாம் பரப்பினார் என்பதை விளக்கிவிட்டு, நான் வீட்டுக்கு வருவதற்குள் எக்கச்சக்க விமர்சனங்கள்… ”எம்.ஜி.ஆரை புரட்சித் தலைவர் என்று சீமான் எப்படிச் சொல்லலாம்? பெரியாரும் எம்.ஜி.ஆரும் ஒன்றா? இன்றைக்கும் எம்.ஜி.ஆருக்காக இருக்கும் கூட்டத்தைப் பயன்படுத்தி, அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார் சீமான்!” என்கிற வாதங்கள் ஒரு பக்கம். ”எம்.ஜி.ஆரை ஆதரித்துப் பேசும்போதே தெரிகிறது… வரும் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகத்தான் சீமான் செயல்படப்போகிறார்!” என்கிற அனுமானங்கள் ஒரு பக்கம்.
எம்.ஜி.ஆர். நடித்த படங்களைக்கூட பார்க்கக் கூடாது என மனதுக்குள் சத்தியம் ஏற்றித் திரிந்தவன் நான். திரை உலகுக்கு வருவதற்கு முன்னர் நான் எம்.ஜி.ஆரின் படங்களையே பார்த்தது கிடையாது. ‘அழகு என்கிற ஒற்றை வலிமையைத் தவிர, அவரிடத்தில் வேறு எந்த ஈர்ப்பும் இல்லை’ என நினைத்தவன் நான். ஆனால், அப்படி நினைத்ததற்காக, ஈழத்தில் நான் வெட்கப்பட்டு தலை குனிந்து நின்றேன்.
எம்.ஜி.ஆரை இழந்தது நம் இனத்தின் விடுதலையைத் தள்ளிப்போட்டுவிட்டது. நம் உணர்வுகளையும் உரிமைகளையும் மனமார ஆதரித்த அந்த மனிதரை இவ்வளவு சீக்கிரம் நாம் இழந்துவிட்டோமேடா தம்பி!” – அண்ணன் பிரபாகரன் இப்படிச் சொன்னபோது குற்றறிவுகொண்டவனாக நான் குறுகிப்போய் நின்றேன். ‘எம்.ஜி.ஆர். ஒரு மலையாளி!’ என தி.மு.க. தலைவர்கள் திரும்பத் திரும்ப சொன்ன வாதங்களை நிஜம் என நம்பி, என் மூளை பழுதடைந்திருந்த நேரத்தில், அண்ணன் சொன்ன வார்த்தைகள் என் சொரணையில் சூடு போட்டன.
தலைவர் பிரபாகரனுடன் மூன்று மணி நேரம் பேசினால், அதில் முக்கால் மணி நேரம் எம்.ஜி.ஆரைப் பற்றியதாகத்தான் இருக்கும்.
இந்திய அமைதிப் படையை நம்பி நாம் ஆயுதங்களை ஒப்படைத்த நேரம்… நம் ஆயுதங்களை வாங்கிப் போட்டிக் குழுக்களுக்கு கொடுத்து, நமக்கு எதிரான போரைத் தூண்டிவிட்டது இந்திய அமைதிப் படை. மொத்தமாக 600 போராளிகள் மட்டுமே அப்போது இருந்தார்கள். 100 பேர்கொண்ட குழுக்களாகப் போராளிகளைப் பிரித்து அனுப்பிவிட்டு, நான் களத்தில் நிற்கிறேன். எந்தக் கணத்திலும் எதுவும் நடக்கலாம் என்கிற நிலை. ‘பிரபாகரனை நெருங்கிவிட்டோம். இனி அவர் தப்பிப்பது கனவிலும் சாத்தியம் இல்லை!’ என இந்திய அமைதிப் படை கொக்கரிக்கிறது. எது குறித்து சிந்திப்பதற்கும் கணமற்ற வேளையில் தம்பி கிட்டு ஒரு பெட்டியில் பணத்தோடு வந்தார். மொத்தமாக 36 லட்ச ரூபாய். ‘தம்பி கஷ்டப்படுவார்… இதை நான் கொடுத்ததாகச் சொல்லி அவரிடம் கொடு. எதுவும் நடக்காது. தம்பியை தைரியமாக இருக்கச் சொல்!’ எனச் சொல்லி, எம்.ஜி.ஆர். கொடுத்து அனுப்பிய பணம் என்றார் கிட்டு.
நிஜமாகவே என்னைத் தம்பியாக நினைத்தவரப்பா எம்.ஜி.ஆர்.!” – அண்ணன் சொல்லச் சொல்ல என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. இந்திய அமைதிப் படை அண்ணனை அழித்தொழிக்க நினைத்த வேளையிலும், தேசியக் குற்றம் எனத் தெரிந்தும் அண்ணனுக்கு எம்.ஜி.ஆர். உதவத் துணிந்தது என் நெஞ்சத்துத் தசைகளை எல்லாம் துள்ளத் துடிக்கவைத்தன.
ஈழம் அடைய எவ்வளவடா தம்பி தேவைப்படும்?’ என எம்.ஜி.ஆர். கேட்க, ’100 கோடி ரூபாய் தேவைப்படும்!’ என அண்ணன் சொன்ன உடனேயே, நான் தர்றேன்… நான் தர்றேன்… நீ நல்லா சண்டை பிடி!’ என தைரியம் வார்த்த எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசாமல்… வேறு எவரைப்பற்றி ஐயா பேசுவது?
வாய் முழுக்க தமிழ் தமிழ் என முழங்கிவிட்டு, தமிழருக்கே வாய்க்கரிசி போட்டவரைப் பற்றியா பேசச் சொல்கிறீர்கள்? எம்.ஜி.ஆரை புரட்சித் தலைவர் எனச் சொல்வது பலருக்கும் பொறுக்கவில்லை. அன்னைத் தமிழ் மண் அடிமைப்பட்டுக் கிடந்தபோது, உலகத்தின் எந்தப் புரட்சியாளனுக்கும் குறைவு இல்லாத புரட்சியாளன் அண்ணன் பிரபாகரனின் போராட்டத்துக்குத் தோள் கொடுத்து துணை நின்ற எம்.ஜி.ஆரை புரட்சித் தலைவர் என்று சொல்லாமல், வேறு எவரைச் சொல்வதாம்?
அரசியல் இராஜதந்திரியாக இன்றைக்கு அரியணையில் அமர்ந்து இருப்பவரிடம் கேட்கிறேன்… ஈழப்போர் தீவிரம் எடுத்த வேளையிலும், மத்திய அரசுக்கு எதிராக வாய் திறக்காமல், கூட்டணியைக் கெட்டியாகப் பிடித்து நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை வென்ற உங்களை அரசியல் சாணக்கியராகப் புகழாரம் பாடுகிறார்களே… எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்த வரை, ஏனய்யா உங்களின் சாணக்கியத்தனம் எடுபடவில்லை?
எம்.ஜி.ஆரின் பெயரைச் சொல்லி வந்த ஜெயலலிதாவையே 10 வருடங்கள் அரியணையில் உட்காரவைத்ததுதானே உங்கள் அரசியல் இராஜதந்திரத்தின் மகிமை?
அரைக்கால் சட்டையோடு உங்களின் கூட்டத்தை ஓடியோடி வந்து ரசித்தவன் – உங்களின் சாலச் சிறந்த தமிழுக்குக் கை தட்டியவன் – காங்கிரஸ் பாரம்பரியக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தமிழ் ஈர்ப்பால் உங்களின் தடம் ரசித்து, உதயசூரியனுக்கு ஓட்டுப் போட்டவன், இன்று உங்களைக் கேட்கிறேன்…
ஆட்சியே கவிழ்ந்தாலும் பரவாயில்லை என நினைத்து, அமைதிப் படை துவம்சம் செய்த வேளையிலும் அண்ணன் பிரபாகரனுக்கு அள்ளிக்கொடுத்த எம்.ஜி.ஆர். எங்கே… எத்தனை பேர் இறந்தாலும் சரி… ‘இருக்கை பத்திரம்’ என நினைத்து இரு கைகளையும் விரித்துக் காட்டிய நீங்கள் எங்கே?
பெரியாரின் பேரன் எம்.ஜி.ஆருக்கு வால் பிடிக்கிறானே…’ என உங்கள் தரப்பு வசவாளர்கள் கேலி பேசுவார்கள். பகுத்தறிவுப் பகலவனின் நிஜ வாரிசாக வரித்துக்கொண்ட உங்களைப் பார்த்து அவர்கள் வாய் திறக்காத அதிசயம்தான் எனக்குப் புரியவில்லை. மஞ்சள் துண்டு கேள்விக்கு இதுவரை நீங்கள் நெஞ்சம் திறந்து பதில் சொல்லவே இல்லை, ஐயா… இராஜராஜன் கட்டிய திருவுடையார் கோயிலுக்குள் போகும்போது மட்டும் மஞ்சள் துண்டைக் கழற்றிவிட்டு, பட்டாடை உடுத்திய இரகசியம் என்ன ஐயா? புட்டபர்த்தி சாய்பாபா உங்கள் வீட்டுக்கு வந்தபோது, தாயார் தயாளு அம்மாள் நடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினாரே… உங்கள் வீட்டில் இருந்த பெரியாரின் புகைப்படத்தை அன்று மட்டும் பரணில் தூக்கிப்போட்டு விட்டீர்களா? மாய மந்திரத்தால் தங்க மோதிரம் வரவழைத்துக் கொடுத்த சாய்பாபாவை உங்கள் வீட்டிலேயே தங்க வைத்து, வேண்டிய தங்கத்தை பெற்று இருக்கலாமே… புதிய சட்டமன்றக் கட்டடம் கட்டி முடிக்காதபோதே எந்த ஜோசியக்காரன் சொல்லி ஐயா அவசரமாகத் திறந்தீர்கள்?
வெண்தாடிக் கிழவனின் பேரனாகச் சொல்கிறேன்… ஐயா! நீங்கள் செய்த துரோகத்துக்கு, இந்தத் தமிழினம் எப்படிப் பதிலடி கொடுக்கப்போகிறது என்பதை நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்து, கண்கூடாகப் பார்க்க வேண்டும்.
எம்.ஜி.ஆர். ஒரு மலையாளி’ என்று எத்தனையோ முறை இனத்தால் அவரைத் தமிழனிடம் இருந்து பிரிக்கப் பார்த்தீர்கள். உண்மையில், மலையாள எம்.கே.நாராயணனுக்கும், கன்னடத்து எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கும் கை கொடுத்து ஈழத்தைக் கருவறுக்கத் துணைபோனது யார்?
துக்கமும் தோற்றுப்போன வெட்கமுமாகத் துடிக்கும் தமிழர்களுக்குத் தெரியும்… யார் மலையாளி என்பதும், யார் கொலையாளி என்பதும்!
No comments:
Post a Comment