Friday, December 24, 2010

குட்டிமணி குடும்பத்தை காத்த எம்ஜிஆர்

இலங்கையில் 1983 ஆம் ஆண்டு இனக் கலவரம் ஏற்பட்டபோது  அதில் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள்  அங்கிருந்து வெளியேறி படகுகளில் ராமேஸ்வரத்திற்கு அகதிகளாக அன்றாடம் வந்தனர்.
 அப்போது தினமணி நாளிதழின் நிருபராக ராமேஸ்வரத்தில் பணியாற்றிக்  கொண்டிருந்தேன்.
         
அப்போது இலங்கையிருந்து அகதிகளை ஏற்றி வர இந்தியா ஒரு கப்பலை அனுப்பி வைத்தது. அந்தக் கப்பலில் குட்டிமணியின் குடும்பத்தினர் மாற்றுடை இல்லாதநிலையில் அகதிகளாக வந்தனர்.
     
அவர்கள் கப்பலை விட்டு இறங்கியபோது என்னை கண்டதும்,  வெலிக்கடை சிறையில் குட்டிமணி கொல்லப்பட்டதை சொல்லிவிட்டு கதறிக் கதறி  அழுதனர்.
                 
அடுத்த வேலைக்கு உண்ண உணவு வாங்க அவர்களிடம் பணமில்லை. அடுத்த நாளில் உடை மாற்ற, மாற்றுடை கூ ட அவர்களிடம் இல்லை. அனாதைளைப் போல வந்திருந்தனர்.
            
அவர்களுக்கு ஆறுதல் கூறி ராமேஸ்வரத்தில் தங்க வைத்து யாத்திரைப் பணியாளர்கள் சங்கம், மீனவர்கள் சங்கம் உதவியில் புதிய உடைகள், உணவு கொடுத்தோம். இதைப் பற்றி அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரிடம் தொலைபேசியில் நான் விவரித்தபோது அவர் கதறி அழுதார்.
      
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்து, குட்டிமணி குடும்பத்தினரை “அரசு விருந்தினராக” ஏற்றார். சென்னைக்கு அழைத்து சென்று வீட்டுவசதி வாரியத்தில் வீடு கொடுத்து குட்டிமணி குடும்பத்தை வாழவைத்தார்.
    
ராமேஸ்வரம் வந்துள்ள இலங்கை அகதிகள் அனைவருக்கும் மூன்று வேளையும் இலவச உணவளிக்க செய்தார். அந்த உணவை சாப்பிட்டு பார்த்துவிட்டு விரிவாக கடிதம் எழுதுங்கள் என்று  என்னிடம் கூறினார்.     நானும் சாப்பிட்டு பார்த்துவிட்டு அதைப்பற்றி தொலைபேசியில் விளக்கினேன். அப்போது எஸ்டிடி வசதி கிடையாது. டிரங்கால் போட்டுதான் பேசுவார். அதன்பிறகு இலங்கைத் தமிழர்களுக்கு எப்படிப்பட்ட உணவு தர வேண்டும் என்று முதல்வர் எம்.ஜி.ஆர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
                   
இப்போது தமிழகத்தில் குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு தருகிறார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் முதல்வராகயிருந்தபோது , இலங்கைத் தமிழர்களுக்கு அதாவது அகதிகளுக்கு ஒரு கிலோ அரிசியை வெறும் 51 பைசாவிற்கு அப்போதே கொடுத்துவிட்டார்.
         
எனக்கு தெரிந்தவரை இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு

அவர்களுக்காக நிஜமாக பாடுபட்டவர் எம்.ஜி.ஆர் மட்டுமே. அப்போதைய பிரதமர் இந்திரா காந்திடம் பேசி, விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவிலேயே ஆயுதப் பயிற்சி அளிக்கக் செய்தார்.       

இலங்கைத் தமிழர்களுக்கு எத்தனையோ வழிகளில் அதிகமாக  உதவியவர் எம்.ஜி.ஆர் மட்டுமே.
    
அவரது பிறந்த நாள், நினைவு நாளில் இலங்கைத் தமிழர்களால் அவரை இன்றும் என்றும்  மறக்க முடியாது.

மண்டபம் விஸ்வநாதன்
ஆசிரியர் -பாரத சக்தி
சென்னை.

No comments:

Post a Comment