Thursday, January 06, 2011

புலம்பெயர்ந்த தமிழர்களின் அழுத்தமே இலங்கை மீது பிரிட்டன் கவனம் செலுத்தியதற்கான காரணம் -விக்கிலீக்ஸின் மற்றொரு கேபிள்


[  05 சனவரி 2011, 03:42.17 PM GMT +05:30 ]
பிரிட்டனிலுள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் குரல் எழுப்பியதன் காரணமாகவே யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது இலங்கை தொடர்பாக பிரிட்டிஷ் அரசாங்கம் கவனம் செலுத்தியதாக விக்கிலீக்ஸின் மற்றொரு கேபிள் தெரிவித்துள்ளது.
3 இலட்சத்திற்கும் அதிகமான புலம்பெயர்ந்த தமிழர்கள் பாராளுமன்றத்திற்கு முன்னால் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அந்த விடயமானது பிரிட்டனில் நடைபெறவிருந்த தேர்தலில் முக்கியமான காரணியாக இருந்தது என்று அமெரிக்காவுக்கு லண்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அனுப்பிய கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் கசியவிட்டுள்ளது.
லண்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் அரசியல் கவுன்சிலராகப் பணியாற்றிய ரிச்சட் மில்ஸ் என்பவர் இந்த கேபிள்களை எழுதியதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இலங்கை அமெரிக்க வெளிவிவகார அலுவலகக் குழுவின் தலைவர் ரிம்வெய்டி ரிச்சட் மில்ஸுக்கு விடயங்களைத் தெரிவித்திருந்தார்.
பிரிட்டனில் தேர்தல் நடைபெறவுள்ளதாகவும் தொழிற்கட்சியின் தொகுதிகளில் வசிக்கும் பல தமிழர்கள் தொடர்பாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அரசாங்கம் இலங்கை தொடர்பாக குறிப்பான கவனத்தை செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பாக தனது நேரத்தில் 60 சதவீதமானவற்றை தான் செலவிடுவதாக வெய்ட்டிக்கு மில்லிபான்ட் குறிப்பிட்டிருந்ததாகவும் கேபிளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் இலங்கை தொடர்பான விசேட மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு பிரிட்டன் ஆதரவு வழங்கியமையும் வெளிவந்துள்ளது. ஆயினும் அணிசேரா அமைய நாடுகளின் உதவியுடன் அந்த விடயத்தை இலங்கை சமாளித்தது. அதேவேளை, பிரிட்டனும் திறைசேரியும் அமெரிக்காவும் இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஏற்பாடுகளைத் தாமதிக்கும் நிலைக்குத் தள்ளியிருந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கவுன்சிலர் ரிச்சட் சில்சினால் அனுப்பப்பட்ட கேபிளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் (முன்னாள்) டேவிட் மில்லிபான்ட் மற்றும் பாராளுமன்றக் குழுவின் வெளிவிவகார அலுவலகக் குழுத் தலைவர் ரிம்வெய்டியும் பொறுப்பதிகாரி சரோன் டயஸும் மே 7 இல் விடயங்களைத் தெரிவித்தனர். அதாவது இலங்கையில் முழுமையாக சகல தரப்பையும் உள்ளடக்கிய அரசியல் இணக்கப்பாட்டை மேற்கொள்வதற்கு பிரிட்டன் திட்டமிடுகிறது.
அடுத்த வாரம் ஐரோப்பிய ஒன்றியக் குழு இலங்கைக்கு விஜயம் செய்கிறது. இதன் மூலம் இலங்கை அரசாங்கம் மீது கணிசமான அளவு அழுத்தத்தைப் பேண முடியுமென பிரிட்டன் கருதுகிறது.
மில்லிபான்ட்டும் குச்னரும் உத்தியோகபூர்வமற்ற சந்திப்புகளை மேற்கொள்வதெனத் தீர்மானித்திருந்தனர். அமெரிக்க அதிகாரிகளுடன் மே 12 இல் இலங்கை விவகாரத்தை எழுப்புவதற்கு மில்லிபான்ட் திட்டமிட்டிருந்தார்.
இலங்கைக்கான நாணய நிதியத்தின் கடன் ஏற்பாடுகளைத் தாமதப்படுத்தும் நிலைப்பாட்டிற்கு ஆதரவளிப்பதென முடிவு செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மில்லிபான்ட், குச்னரின் விஜயம்
மில்லிபான்டினதும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் குச்னரதும் ஏப்ரல் 29 ல் மேற்கொள்ளப்பட்ட விஜயமானது நல்லதென வெய்டி வர்ணித்திருக்கிறார். ஆயினும் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் பில்ட் அந்த விஜயத்தில் இணைந்துகொள்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி கொடுக்காததையிட்டு மில்லிபான்ட் ஏமாற்றமடைந்திருந்தார்.
5 மனிதாபிமான விடயங்களை பிரிட்டன் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது.
சர்வதேச மனிதாபிமானப் பணியாளர்களுக்கு விசா வழங்க வேண்டிய தேவை மற்றும் இலங்கைக்குள் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் பணியாற்றுவோருக்கு பயண அனுமதிப்பத்திரம் வழங்குதல்,
இடம்பெயர்ந்தவர்களின் தேவைகளை நிறைவேற்ற அனுமதி வழங்குதல்,
அவர்களைச் சோதனையிடும் சகல கட்டங்களையும் கண்காணித்தல்,
உரிய முறையிலான மீள்குடியேற்றம்,
வருட முடிவில் 80 வீதமானோர் குடியேற்றப்படுவார்கள் என இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்த உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கு விசேட காலவரையறையை வழங்குதல்,
மோதல் வலயத்தில் அகப்பட்டிருந்த பொதுமக்களின் உணவு, மருந்து தேவைகளை முழுமையாக நிறைவேற்றுதல்
போன்ற மனிதாபிமான விடயங்களை பிரிட்டன் வலியுறுத்தியிருந்ததாக கேபிளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment