Monday, January 31, 2011

ஈபிடிபி உறுப்பினர் ‘கொல்லப்பட்ட‘ விவகாரம் - முழுமையான விசாரணையைக் கோருகிறார் டக்ளஸ்

பருத்தித்துறையில் தமது கட்சியின் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டது குறித்து முழுமையான காவல்துறை விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஈபிடிபி செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈபிடிபியின் மருதங்கேணி அமைப்பாளரான இரத்தனசிங்கம் சதீஸ் நேற்று முன்தினம் காலை வல்லிபுரக் கோவிலுக்கு அருகே உள்ள ஆனைவிழுந்தான் மயானப் பகுதியில் இறந்து கிடந்தார்.

மரணமான நிலையில் உந்துருளியுடன் வீதியில் விழுந்து கிடந்த அவர் இனந்தெரியாத நபர்களால் தலையில் சுடப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால் பின்னர் நடத்தப்பட்ட காவல்துறை விசாரணைகளின் போதும், பிரேத பரிசோதனையின் போதும் அவர் சுடப்படவில்லை என்பது உறுதியானதாக தகவல் வெளியிடப்பட்டது.

உந்துருளி விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு குருதிப்பெருக்கினால் ஏற்பட்ட மரணம் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்தநிலையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமது கட்சி உறுப்பினர் கொல்லப்பட்டது குறித்து முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.

“ உண்மையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. இது தொடர்பாக முழுமையான காவல்துறை விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்" என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விபத்து மரணம் என்று தகவல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு கோரியுள்ளது சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.
  

No comments:

Post a Comment