யாதொரு நெருக்குவாரமும் இல்லாமல் மக்களை இயல்பாக சிந்தித்து செயற்பட விடவேண்டும்..

01. தமிழீழ தேசியத் தலைவர் இப்படியான ஓர் அடையாள அட்டையை ஏற்கெனவே அறிமுகம் செய்துள்ளார், அதற்கு அமைவாக இப்படியோர் அட்டையை அறிமுகம் செய்கிறோம்.
02. இந்தியாவை சேர்ந்த அரச அறிவியலாளர் சிலர் நாடுகடந்த அரசுக்கான கடவுச்சீட்டை கொண்டுவரும்படி தெரிவித்ததாகவும் ஆனால் தாம் கடவுச்சீட்டை அறிமுகம் செய்யாது தற்போதைக்கு அடையாள அட்டையை அறிமுகம் செய்கிறோம்.
03. நாம் தமிழீழ மக்கள், தனியான அரசை விரும்புகிறோம் ஆகவே அந்த விருப்பத்தின் ஓரங்கமாக இது அமைகிறது, தமிழ் தேசியத்தின் அடையாளமாகவும் இருக்கும்.
ஆக…
வரும் நாட்களில் புலம் பெயர் நாடுகளில் இத்தகைய அட்டைகளை கொண்டு பலர் வருவதற்குரிய சாத்தியங்கள் தெரிகின்றன.. இத்தகைய அடையாள அட்டை விவகாரம் சரியானதா? இல்லையா? என்ற அறிஞர்மட்ட உரையாடல்கள், சட்ட நிபுணர்களின் விளக்கங்கள் எதுவும் இல்லாத நிலையில் சாதாரண மக்கள் திடீரென ஓர் அடையாள அட்டை வரும்போது பலவாறாக யோசிக்க இடம் ஏற்படும். ஆகவே பூரணமான தெளிவையும் கலந்துரையாடல்களையும் அறிமுகம் செய்து இதைக் கொண்டுவருவது சாலச்சிறந்ததாக அமையும். நாடுகடந்த அரசின் யாப்பில் இது இடம் பெற்றுள்ளது என்று கூறப்பட்டாலும், யாப்பில் உள்ள விடயங்கள் அமலுக்கு வரும்போது அதற்கு முன் பலத்த விவாதங்கள் இடம்பெற வேண்டியது அவசியம்.
அன்று…
சிறீலங்கா அரசு அடையாள அட்டையை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்தபோது அதை கடுமையாக தமிழ் அரசியல் தலைவர்கள் எதிர்த்தார்கள். இந்த அடையாள அட்டை சிங்கள மக்களையும், தமிழ் மக்களையும் வேறுபடுத்திக் காட்டும், பின் சிங்கள இனவாதத்திற்கு அது சாதமாக அமையும் என்று அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் தெளிவாகச் சுட்டிக்காட்டினார். ஆனால் தமிழ் தலைவர்களின் வேண்டுதல்களை கடுகளவும் கருத்தில் கொள்ளாது அடையாள அட்டை அமலுக்குக் கொண்டுவரப்பட்டது.
இனப்படுகொலைக் கருவியானது அடையாள அட்டை
பின்னர் சிங்கள இராணுவம் தனது இனப்படுகொலைக் கருவியாக அடையாள அட்டையை பாவித்தது. முதலில் அடையாள அட்டை மூலம் தமிழனை அடையாளம் கண்டது. பின்னர் அவனை பிரதேச வாரியாக அடைளம் கண்டது, பின்னர் ஊர் வாரியாக அடையாளம் கண்டது. அதற்கமைவாக படுகொலை, விசாரணை, கைது என்ற இனவாதத்தை அமல் செய்தது.
ஈழத் தமிழனிடம் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் கைது, கொலை.. இருந்தாலும் கைது, கொலை என்ற அவலத்தை அது ஏற்படுத்தியது. 1984ற்குப் பிறகு இலங்கை தமிழர்களை பலிக்கடாவாக்கும் கொலைக்கருவியாக இருந்தது சிறீலங்காவின் இனவாத அடையாள அட்டைதான் என்பதை எவரும் மறுக்க முடியாது. இது நமது வரலாறு, ஆகவேதான் அடையாள அட்டை என்பது ஈழத் தமிழன் வாழ்வில் ஆழமாக சிந்திக்கப்பட வேண்டிய விடயமாக உள்ளது. அதை யார் தந்தாலும் ஏன் ? எதற்கு ? தேவைதானா ? இதனால் பயன் என்ன ? இதனால் சேகரிக்கப்படும் தகவல்கள் பாதுகாக்கப்படும் என்பதற்குரிய நம்பகத் தன்மை என்ன ? என்ற கேள்விகள் அவசியம்.
விடுதலைப்புலிகளுக்கு நிதி வழங்கியோர் பற்றிய விபரங்களையே பாதுகாக்க முடியாத நாம் இந்த அடையாள அட்டை விபரங்களை எப்படி பாதுகாக்கப் போகிறோம் என்பதற்கான தார்மீக பதிலை வழங்குவது அவசியம். அதற்கான சட்ட நியாயங்களை விவாதத்திற்கு முன் வைப்பதும் அவசியம்.
தற்போது புலம் பெயர் தமிழரிடம் இரண்டு விதமான கடவுச்சீட்டுக்கள் உள்ளன. ஒன்று வாழும் நாடுகளின் குடியுரிமைபெற்ற கடவுச்சீட்டு வைத்திருப்போர், மற்றது சிறீலங்கா கடவுச் சீட்டு வைத்திருப்போர். இந்த இரண்டிலுமே சிறீலங்கா பிரஜைகள் என்ற பதிவே இருக்கிறது. இங்கு பிறக்கும் பிள்ளைகளின் பூர்வீகமே சிறீலங்கா என்றுதான் பதியப்படுகிறது. மேலும் இப்படியான தேசிய அடையாள அட்டைகள் இன்றைய உலக மயமாக்கலில் ஒரு பின்தங்கிய செயற்பாடாக கருதப்பட்டு அகற்றப்பட்டும் வருகின்றன. அவற்றை வைத்து நடைபெறக்கூடிய மோசடிகளை தடுக்க இத்தகைய ஏற்பாடுகள் அமலுக்கு வருகின்றன.
ஆனால்…
இன்று பெயர் பொறிக்கப்பட்ட அடையாள அட்டைகள் சாதாரண விளையாட்டுக் கழகங்களுக்கே வழங்கப்படுகின்றன..
இந்தியாவில் பணம் கறப்பதற்கு பல அமைப்புக்கள் இப்படியான கார்ட் முறைமையை அமலுக்குக் கொண்டு வந்துள்ளன. காட் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்பார்கள், காட் எடுப்பதற்கு பணம் கேட்பார்கள், பிறகு அதிலிருந்து பல்வேறு தொடர் ஊழல்களைச் செய்வார்கள்.
மேலை நாடுகளில் சாதாரண தொழில் செய்வோருக்கு அந்தத் தொழில் நிறுவனங்கள் பெயர் பதித்த அடையாள அட்டைகளை வழங்கும். அவை பணி முடிய செல்லுபடியற்றுப் போகும்.
ஆகவே அடையாள அட்டையின் பரிமாணம் என்ன என்பதைப் பொறுத்தே அதன் தாற்பரியமும் அமையும். அதேவேளை இப்படியான காரியங்கள் முன்னெடுக்கப்படும்போது கடந்த காலங்களில் நாம் மௌனமாக இருந்தோம், அப்படி இருப்பதே நமக்கு பெருமை என்றும் கருதினோம். கேள்வி கேட்பது குற்றம் என்று கருதிய ஒரு சமுதாய அமைப்பை வளர்த்தெடுத்தே இத்தனை அவலங்களையும் சந்தித்தோம். ஆகவே அரசியல், சமுதாய வாழ்வு தொடர்பாக ஒட்டுமொத்த தமிழினம் சார் பணிகளை முன்னெடுக்கும்போது ஒரு குடிமகனுக்குக் கூட அதனால் பாதிப்பு வரக்கூடாது என்ற விழிப்புணர்வு அவசியம்.
அடையாள அட்டை நல்லதானால் அதை தடுக்க வேண்டிய அவசியம் யாருக்கும் இருக்காது, ஆனால் எதிர் காலத்திற்கு அது நல்லதுதானா என்பதற்கு துல்லியமான விளக்கம் வேண்டும். இந்த அடையாள அட்டை இனத்தை இரண்டாகப் பிரிக்குமா ? இல்லை ஒன்றுபடுத்துமா ? என்ற கேள்வியும் இருப்பதால் இந்தச் சிந்தனை அவசியமாகிறது.
மேலும் அடையாள அட்டை எடுத்தவர்கள் தம்மை ஈழத்தை ஆதரிக்காதவர் பட்டியலில் போட்டுவிடுவார்கள் என்று அஞ்சியே அதை எடுத்ததாக நாளைக்கு சொல்லக்கூடாது. அந்த நெருக்குவாரத்தை மக்களுக்கு கொடுக்காமல் இதை இயல்பாக விடவேண்டும். இந்த அடையாள அட்டையை சில காலம் அவரவர் விருப்புக்கு அமைவாக விடுவது நல்லது. காலம் இதன் சரி பிழையை நிறுவும்.
ஒரு தேசம் அமைக்கப்பட்டு அது தேசமாக கருக்கொண்டு வந்த பின்னரே அடையாள அட்டை அமலுக்கு வரும். சிறீலங்காவில் கூட சுதந்திரம் அடைந்த பல தசாப்தங்களின் பின்னர்தான் அது வந்தது. நாம் தேர்தல் முடிந்த அடுத்த ஆண்டே இதற்குள் போகலாமா? போர் பற்றிய மதிப்பீடே செய்யாமல், செய்ய வேண்டிய வேலைகள் எத்தனையோ இருக்க அடையாள அட்டைக்குள் அவசரமாக போகத்தான் வேண்டுமா என்பதும் கேள்விக்குரிய விடயமே.
தமிழீழ அடையாள அட்டை இருக்கிறதா என்று கேள்வி கேட்டு பொது நிகழ்வுகளில் மக்களை நெருக்குவாரத்திற்குள் சிலர் தள்ளக்கூடிய நிலையும் உள்ளது – இவை நமது கடந்தகால அனுபவங்கள்.
யாரோ சில இந்திய ஆய்வாளர்கள் சொன்னார்கள் என்பதற்காக நாம் செய்வதெல்லாம் சரியாக ஆகிவிடாது. அடையாள அட்டை தொடர்பான செய்திகள் நமது உள்ளத்தில் ஏற்படுத்தும் கேள்விகளே இங்கே ஒழிவு மறைவின்றி பதியப்படுகிறன.
அடையாள அட்டை எடுப்பதும் விடுவதும் அவரவர் சொந்த விரும்பம், ஆனால் இங்கே குறிக்கப்பட்ட கேள்விகளுக்கான பதிலை தமது உள்ளத்தில் மலரச் செய்வது அதற்கு முன் நம்முன்னுள்ள கடமை.
இது குறித்த விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்களுடைய விளக்கத்தை காண கீழே உள்ள காணொளியை அழுத்துக.
அலைகள்தமிழீழ தேசிய அட்டை
Uploaded by valarytv. - Up-to-the minute news videos.
No comments:
Post a Comment