Wednesday, June 08, 2011

இலங்கை மீது பொருளாதாரத் தடை! தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பிரேரணையை முன்வைத்துள்ளார்.

இந்தப் பிரேரணை தமிழக சட்டசபையால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தப்பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா,

“தமிழனின் பண்பு யாருக்கும் தாழ்ந்தவனாக இருப்பதல்ல. யாரையும் தாழ்த்துவதல்ல என்றார் பேரறிஞர் அண்ணா.

இப்படிப்பட்ட உயரிய எண்ணத்தைக் கொண்ட தமிழர்கள் உலகெங்கும் பரவி இருக்கிறார்கள். மொழி மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் ஒற்றுமையுடன் திகழும் இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் இடையே உள்ள தொப்புள் கொடி உறவு அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

இலங்கைக்கு விடுதலை கிடைத்து விட்டாலும், அங்கு வாழும் தமிழர்கள் அவர்கள் நாட்டிலேயே இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுவதை எதிர்த்து, இலங்கைத் தமிழர்கள் பல்லாண்டு காலமாக போராடி வந்தனர்.

இவர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து தேவையான அரசமைப்புச் சட்டத்திருத்தங்களை கொண்டு வந்து, தமிழர்கள் கௌரவத்துடனும், சம உரிமையுடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்காமல் அவர்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தது.

பரவலாக குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்களை கொன்று குவித்தது. மக்கள் வாழும் இடங்களின் மீதும், மருத்துவமனைகள் மீதும் குண்டுகளை வீசியது. மனிதாபிமான முறையில் செய்ய வேண்டிய உதவிகளை செய்ய மறுத்தது.

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகப்படக்கூடியர்கள் உட்பட இந்தச் சண்டையில் பலியானவர்கள் மற்றும் எஞ்சியுள்ளவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது.

இலங்கை அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் ஊடகங்கள் உள்பட போர்ப் பகுதிக்கு வெளியே இருப்பவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது.

கடுமையான, நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்களை உள்நாட்டுப்போரின் போது இலங்கை அரசு நிகழ்த்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் நியமனம் செய்யப்பட்ட குழு கண்டறிந்து இருக்கிறது.

எனவே, இத்தகைய போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும், தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழவகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை இந்திய அரசை கேட்டுக் கொள்கிறது” என்றார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உரையினை அடுத்து இலங்கை மீது இந்திய மத்திய அரசாங்கம் பொருளாதார தடையை விதிக்க வேண்டும் எனக்கோரிய பிரேரணை தமிழக சட்டசபை நிறைவேற்றியுள்ளது.

No comments:

Post a Comment