Wednesday, June 29, 2011

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வலியுறுத்தி பேரணி: தென்னிந்திய நடிகர் சங்கம்

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினை நடைமுறைப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலம் நடத்த தென்னிந்திய நடிகர் சங்கம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான அனுமதியினை முதல்வரிடம் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் கோரப்பட்டது.

செல்வி ஜெயலலிதா முதல்வாரகப் பதவியெற்றுக் கொண்டதற்கு வாழ்த்துத் தெரிவித்து, நேற்று தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சார்பாக நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், மயில்சாமி, ராதாரவி, நடிகைகள் மனோரமா, குயிலி ஆகியோர் தமிழக முதல்வரைச் சந்தித்தனர்.

இதன்போதே இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி மேற்கொள்ளப்படவுள்ள ஊர்வலத்திற்கான முதல்வரின் அனுமதி கோரப்பட்டது.



இச்சந்திப்பின் பின் செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்த நடிகர் சரத்குமார்,

இலங்கை மீது மத்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்தோம்.

இலங்கை அரசு மீது மத்திய அரசு உடனே பொருளாதார தடையை விதிக்க வேண்டும். கச்சதீவை மீட்டு தமிழக மீனவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இதை வலியுறுத்தி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர், நடிகைகள் ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலம் செல்ல திட்டமிட்டுள்ளோம். அதற்கான அனுமதியை முதல்வரிடம் கேட்டோம்.

மேலும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கான அனுமதியை தருமாறு முதல்வரிடம் வலியுறுத்தினோம்.

இப்போது பல்வேறு பணிகள் இருப்பதால், பாராட்டு விழாவை பிறகு நடத்தலாம் என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment