இலங்கை விவகாரங்கள் தொடர்பில் ஒரு கால எல்லையை நிர்ணயிக்குமாறு நாம் எமது அரசுகளை கோரவுள்ளோம். இந்த காலஎல்லைக்குள் இலங்கை அரசு சாதகமான பதிலை தரவேண்டும் என்று பிரித்தானிய மற்றும் பிரான்சின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
International Herald Tribune ஊடகத்தில் எழுதியுள்ள பத்தி ஒன்றிலேயே பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேனாட் குச்னர் ஆகியோர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவித்தது போல அனைத்துலக நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும். இலங்கை அரசு இதற்குப் பதிலளிப்பதற்கு உடனடியாக காலக்கெடு ஒன்றை வழங்க வேண்டும் என்றும் தமது நாட்டு அரசாங்கங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நிபுணர் குழு அறிக்கையின் பரிந்துரைகளின் படி இலங்கை அதிகாரிகள் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்கத் தவறினால், அனைத்துலக விசாரணைக்கான ஏற்பாடுகளை தொடங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் அனைத்துலக சட்டங்களின் படி, பொறுப்புக்கூறுதல் என்பது ஒரு கடமையாகும் என்று வலியுறுத்தியுள்ள இவர்கள், இவற்றுக்குப் பொறுப்பான இராணுவ மற்றும் குடியியல் அதிகாரிகள் அனைத்துலக குற்றச் செயல்களுக்காக பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
2009ம் ஆண்டு இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்தித்தபோது, பொதுமக்களின் அவலங்கள் தொடர்பில் வாதாடியிருந்தோம்.
விடுதலைப் புலிகளின் உத்திகள் எவையாக இருந்தாலும், பொதுமக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என அழுத்திக் கூறியிருந்தோம் என்று அவர்கள் தமது பத்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment