ருவாண்டா இனப்படுகொலையுடன் தொடர்புடைய அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு, இனப்படுகொலை மற்றும் பாலியல் வல்லுறவு சம்பவங்களைத் தூண்டியமை உள்ளிட்ட குற்றங்களுக்காக ஐநா அனுசரணை நீதிமன்றம் ஆயுட் தண்டனை அளித்து தீர்ப்பளி்த்துள்ளது. ருவாண்டாவின் முன்னாள் குடும்பநலத்துறை அமைச்சர் Pauline Nyiramasuhuko (65) இற்கு எதிரான வழக்கு 2001 ஆம் ஆண்டில் ஆரம்பமாகியது. தான்ஸானியாவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளடங்கிய குழுவே ஆயுட்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
போலின் நீராமாசுஹூக்கோவுடன் அவரது மகன் உட்பட இன்னும் ஐந்து பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, ருவாண்டா இனப்படுகொலைக்கான இந்த வழக்கில் முதற்தடவையாக பெண்ணொருவரை ஐ.நா. அனுசரணையுடனான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குற்றவாளியாக உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த வழக்கு விசாரணைகள் ருவாண்டாவில் நடைபெறவில்லை. பல நூறு கிலோமீற்றர்களுக்கு அப்பால் தான்சானியா நகர் அருஷாவில் நடைபெற்றுள்ளது.
முன்னாள் குடும்ப நலத்துறை அமைச்சரான போலின் தனது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரது சொந்த மாவட்டடமான புட்டாரோ பிராந்தியத்தில் பல்லாயிரக்கணக்கான டுட்ஸி சிறுபான்மை இன மக்களை படுகொலை செய்வதற்கு ஆயுதக் குழுக்களை அமைப்பதில் பங்கெடுத்துள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
1994 ஆம் ஆண்டு ருவாண்டா இனப்படுகொலை காலத்தில் டுட்ஸி சிறுபான்மை இன மக்கள் மற்றும் பெரும்பான்மை ஹூட்டு இன மக்களில் தாராளவாதப் போக்குடையவர்கள் என சுமார் எட்டு லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.
ருவாண்டா இனப்படுகொலைக்குப் பின்னர், அண்டை நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசுக்கு தப்பிச் சென்றிருந்த போலின், 1997ம் ஆண்டில் கென்யாவில் கைதுசெய்யப்பட்டார்.
No comments:
Post a Comment