இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் முக்கிய சக்தியாக வெளிப்பட்டுள்ள நிலையில், அவருடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கான முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் இறங்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றுக்கொண்ட பின்னர், அவருடன் தாம் தொடர்புகளை ஏற்படுத்தப்போவதில்லை எனவும், இந்திய மத்திய அரசுடன் மட்டுமே தமது தொடர்புகள் இருக்கும் எனவும் இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார். இருந்தபோதிலும், தமிழகத்தின் உணர்வுகளைப் புறக்கணித்து தம்மால் செயற்பட முடியாது எனத் தெரிவித்த மத்திய அரசாங்கம், ஜெயலலிதாவுடன் நல்லுறவுளை ஏற்படுத்துமாறு இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸக்கு அறிவுறுத்தியிருந்தது.
இதனையடுத்து ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை அமைச்சர் பீரிஸ் அனுப்பிவைத்தார். இதன் பின்னர் ஜனாதிபதியின் ஆலோசகராகச் செயற்படும் மிலிந்த மொரகொடை உட்பட வேறு சிலரை சென்னைக்கு தூது அனுப்பி ஜெயலலிதாவுடனான சந்திப்புக்கு முயற்சி செய்யப்பட்ட போதிலும், அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், கடந்த வாரம் கொழும்பு வந்த இந்தியாவுக்கான இலங்கையின் தூதுவர் பிரசாத் காரியவாசம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனும் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுடனும் பேச்சுக்களை நடத்திய பின்னர் சென்னை சென்று தமிழக முதலமைச்சர் ஜெயலிதாவைச் சந்தித்துள்ளார். இச்சந்திப்பின் போது ஜனாதிபதியின் விஷேட கடிதம் ஒன்று முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
இதில் போர் இடம்பெற்ற பகுதிகளுக்கு நேரில் வந்து நிலைமைகளைப் பார்வையிடுமாறு ஜெயலலிதாவுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார். ஜெயலலிதாவுடனான உறவுகளை வலுப்படுத்தும் இராஜதந்திரக் காய்நகர்த்தலில் இது ஒரு முக்கிய மைல் கல் என கொழும்பில் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
இதன் தொடர்ச்சியாக மேலும் சில நகர்வுகளை முன்னெடுப்பதற்கு கொழும்பு திட்டமிட்டுவருவதாகவும், இவை தொடர்பில் ஜெயலலிதாவின் பிரதிபலிப்பையே தற்போது கொழும்பு எதிர்பார்த்திருப்பதாகவும் கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment