Wednesday, July 27, 2011

சிங்களவர்- தமிழர் இணைந்து வாழ முடியாது என்பதை உணர்த்தியுள்ள தேர்தல் முடிவு: இராமதாஸ்

இலங்கையில் இனிமேல் சிங்களவர்களும் தமிழர்களும் இணைந்து வாழ்வதற்கான வாய்ப்பே இல்லை என்பதை நடைபெற்று முடிவடைந்துள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் முடிவுகள் உணர்த்தியுள்ளன என பாட்டாளி மக்கள் கட்சியின் ஸ்தாபகர் டாக்டர் எஸ்.இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வன்முறை, பணபலம் ஆகியவற்றை மீறி இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது எனக் குறிப்பிட்டுள்ள அவர் மேலும் முக்கியமாகத் தெரிவித்திருப்பதாவது:

"இத்தேர்தல் முடிவுகள் மூலம் இதன் மூலம் ராஜபக்ஷ அரசு மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதையும், தனித் தமிழ் ஈழமே தேவை என்பதையும் ஈழத் தமிழர்கள் உணர்த்தியுள்ளனர். தனித் தமிழ் ஈழத்துக்கான தீர்ப்பாக இந்த தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
சிங்களவர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இலங்கையில் தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து வாழ வாய்ப்பே இல்லை என்பது இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இதனை உணர்ந்து தமிழர்கள் வாழும் பகுதிகளைப் பிரித்து தனித் தமிழ் ஈழம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக தமிழகத் தமிழர்கள் உள்பட உலகெங்கும் வாழும் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்" என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment